தருமபுரம் ஆதீனம் அரசியல்வாதிகளை மிஞ்சிடும் அளவுக்கு பேனர்கள், கட்அவுட்டுகள், பாட்டுக்கச்சேரி, பட்டிமன்றம், பிரபலங்களின் புகழாரம் என பிரமாண்டப்படுத்தி தனது மணிவிழாவைக் கொண்டாடி யிருக்கிறார். இதற்காக அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கொடுத்த அலப்பறை பொதுமக்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரி சுவாமிகள். இவர் ஏதாவது செய்து சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக இருப்பார். இவர் ஆதீனமாகப் பதவியேற்றபிறகு இணக்கமாக இருந்த திருவாவடுதுறை ஆதீனத்தை போட்டி ஆதீனமாக மாற்றி, குடமுழுக்கு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி என பல இடங்களில் இரு ஆதீனங்களுக்கும் போட்டி நடந்துவரு கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கி நாடுமுழுக்க பேசுபொருளானார்.
இந்த நிலையில் தனது அறுபதாவது பிறந்தநாளை திட்டமிட்டு கோலாகலமாக நடத்திவருகிறார். அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு பேனர்களைக் குவித்துள்ளனர். நவம்பர் 1-ஆம் தேதி துவங்கி 10-ஆம் தேதி வரை நடந்த விழாவில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீமதுசூதனன் சாய், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
10 நாள் கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. தர்மபுரம் மடத்தின் நுழைவாயில் முன்பு துவங்கி, முக்கிய கடைவீதிகளின் வழியாக ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் பள்ளியில் முடிந்தது. இந்தப் போட்டியை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனும், தர்மபுரம் ஆதீனமும் சேர்ந்து கொடியசைத்து துவக்கிவைத்தனர். 30 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை கலந்துகொள்ள வைத்திருந்தனர்.
தொடர்ந்து 60 பள்ளிகளில் நூலகம் அமைக்கும் திட்டத் தினை ஆதீனம் துவக்கிவைத்து பல்வேறு சைவத் தமிழ் நூல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பட்டங்களும், பொற்கிழிகளும் வழங்கப்பட்டன.
ஆதீன நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மணிவிழாவிலும் கலந்துகொண்டு, "தருமபுரம் ஆதீனம் கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக பாரத தேசத்தில் சனாதானத்தை நிலைநிறுத்தி பாதுகாத்துவருகிறது. தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் 60 வயதிலும் இளமையாக இருக்கிறார். அவர் குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் வாழ்ந்து சைவ மதத்திற்கும், நாட்டிற்கும் தொண்டு செய்யவேண்டும்'' என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு பெங்களூர் புட்டபர்த்தி சாய்பாபா மடத் தலைவர் மதுசூதன சாய் பெங்க ளூரிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்தார். மணிவிழா மாநாட் டில் பேசிய ஸ்ரீமதுசூதனன் சாய், "சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மனிதநேயப் பணிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. பிறருக்காக மட்டுமே வாழும் மரங்கள், நதிகள்போல சன்னிதான மும் ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்துவருகிறார்'' என்றார்.
இந்த நிகழ்வுகள் குறித்து பேசிய சமூக ஆர்வலரும், பேராசிரியருமான முரளி, "ஆசை, பாசம், கோபம் என அனைத்தையும் துறந்தவர் தான் துறவியாக, ஆதீனமாக இருக்கமுடியும். ஆனால் மாசிலாமணி தேசிக சாமியாரோ சகலத்தையும் அனுபவிக்கும் நபராக இருக்கிறார். அரசியல்வாதிகளை மிஞ்சிடும் அளவுக்கு விளம்பரப்பிரியராக இருக்கிறார். திருமணம், துக்கம் என எல்லாவற்றுக்கும் தனது படத்துடன் பேனர் வைத்துள்ளார். மணிவிழா என்கிற பெயரில் மன்னரைப்போல விழாக்கோலமிடச் செய்துள்ளார். இதற்கு ஆளும் அரசு துணைபோவதுதான் வெட்கக்கேடு. அமைச்சர் மெய்யநாதன் தன்னுடைய பொறுப்பு என்ன வென்று அறியாமல் ஆதீனத்தின் துதிபாடியாக இருப்பது வேதனை.
தருமை ஆதீனம் எப்போதுமே பா.ஜ.க. ஆதரவாளராகவே இருக்கிறார். ஆர்.என்.ரவி அவரோடு மிக நெருக்கமாக இருக்கிறார். அப்படியிருக்க தி.மு.க. அவரிடம் எதை எதிர்பார்க்கிறது? தி.மு.க. தலைவர் வரும்பொழுது கூட இவ்வளவு அலப்பறைகளை தி.மு.க.வினர் செய்யவில்லை. ஆதீனத்திற்காக ஏன் செய்கிறார்கள்? என்று நினைக்கத்தோன்றுகிறது.
இதற்கு முன்னிருந்த ஆதீனங்களோ, மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரோ இவ்வளவு பிரமாண்டமாக, இத்தனை படோ டோபமாக தன் பிறந்தநாளை கொண்டாடி யிருக்கமாட்டார்கள். மோசமான முன்னுதா ரணத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் தர்மபுரம் ஆதீனம்'' என்கிறார் விரிவாக.
மடத்துக்கு நெருக்கமாக இருக்கும் அரசியல் பிரமுகர் ஒருவர் நம்மிடம், "தர்மபுரம் ஆதீனம் எப்போதுமே தி.மு.க.வினர் வரும்போது தி.மு.க. ஆதரவாளர்களைப்போல காட்டிக் கொள்வார். அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. ஆதரவாளரைப்போல காட்டிக்கொள்வார். தருமபுரம் ஆதீனம் முழுக்க முழுக்க ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வின் ஆதரவாளர்.
ஆதீனத்தில் பெரும்பான்மையோர் தி.மு.க.வின் ஆட்சி ஒரு சாபக்கேடு என்பது போலவே பேசிவருகிறார்கள். ஆதீனம் சார்ந்த சமூகத்தினர் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி நடந்தால்தான் நன்றாக இருக்கும் என பேச வைத்திருக்கிறார். இதை தி.மு.க. உணரவேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/adhinam-2025-11-10-18-16-08.jpg)