கொடநாடு வழக்கு கிளைமாக்சை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் கொடநாடு வழக்கில் துப்புக் கிடைப்பது என்பது மிகப்பெரிய விசயமாக இருந்தது. இப்போது பல விசயங்கள் அந்த வழக்கின் மர்ம முடிச்சை தானாகவே அவிழ்த்து வருகின்றன.
2019ஆம் ஆண்டு “கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் சூத்திரதாரி எடப்பாடி பழனிச்சாமி” என பிரபல பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சொன்னபோது அது அகில இந்திய அளவில் பிரேக்கிங் நியூசாகவே அமைந்திருந்தது. அப்போதைய முதல்வர் எடப்பாடி, மேத்யூ சாமுவேலையும் சேர்த்து அந்த செய்தியைச் சொன்ன குற்றவாளிகள் சயானையும், வாளையார் மனோஜையும் சிறையில் அடைத்தார். மேத்யூ சாமுவேல் மீது பல கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்கையும் தொடர்ந்தார். இவர்கள் மூவரும் 2019ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை கொடநாடு வழக்கு பற்றிப் பேசவில்லை. எடப்பாடி ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சி வந்தபிறகும் அவர்கள் சிறையில்தான் இருந்தார்கள். நக்கீரன் பெரும் பாடுபட்டு இந்த வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது.
கோவை சரக ஐ.ஜி. சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட மறு விசாரணை டீம் ஒரு சில உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. ஆனால், தற்பொழுது கொடநாடு கொள்ளையின் முக்கியக் குற்றவாளியான கனகராஜின் சகோதரர் தனபால் வாயைத்திறந்து பேச ஆரம்பித்துள்ளார். இந்த வழக்கை தற்பொழுது விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி தேன்மொழி ஐ.பி.எஸ்., எஸ்.பி. முருகவேல் தலைமையிலான டீம், தனபாலுக்கு சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்துள்ளது.
தனபால் நக்கீரனிடம் பேசினார். “கொடநாடு கொள்ளை திட்டத்தில் ஈடுபட்டது பத்து கேரள குற்றவாளிகள் மட்டுமல்ல, மொத்தம் ஐம்பது பேர் இந்த சம்பவத்தில் ஆக்டிவாக ஈடுபட்டிருக் கிறார்கள். முன்னாள் முதல்வர் எடப் பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வேலுமணியின் சகோதரர் அன்பு, சேலம் இளங்கோவன், அனுபவ் ரவி, சஜீவன் ஆகியோர்தான் அச்சம்பவத்தில் முதல் வரிசைக் குற்றவாளிகள்.
சேலம் இளங்கோவனும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்புவும், கொடநாடு கொள்ளை முதல் கனகராஜ் மற்றும் சயானின் குடும்பம் விபத்தில் இறக்கும்வரை நடந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து அதற்குப்பிறகு நடந்த விவகாரங்கள் அனைத்தையும் கோ-ஆர்டினேட் செய்த முக்கிய அச்சாணிகள்.
சசிகலா ஒரு ராட்சசி. அவள் யாரையும் வாழ விட மாட்டாள். கொடநாட்டில் சசிகலா, அ.தி.மு.க. அமைச்சர்கள், மா.செக்கள், எம்.பி.க்கள் என ஒட்டுமொத்த கட்சியினரின் சொத்துக்களையும் அவர்களைப் பற்றிய பல இரகசிய ஆவணங்களையும் வைத்திருக்கிறார். அது எடப்பாடியின் கைகளுக்கு வந்தால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் அவரது கட்டுப்பாட்டில் வந்து விடும்.
அந்த ஆவணங்களை எடுத்து வந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் தர வேண்டும். அப்படித் தந்தால் மொத்தமாக 25 கோடி ரூபாய் ரொக்கம் கனகராஜுக்கு தரப்படும். அவரது அண்ணன் தனபாலுக்கு எம்.எல்.ஏ. பதவி, அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி கனகராஜை மூளைச்சலவை செய்தது எடப்பாடி தலைமையிலான டீம். திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட கனக ராஜ், கொடநாட்டில் கொள்ளையடித்தார். அதற்கு வசதி யாக அரசு எந்திரங்களை செயல்பட வைத்தார் எடப்பாடி.
சயான் மற்றும் கேரள குற்றவாளிகளுடன் சேர்ந்து கொடநாட்டில் கொள்ளையடித்துவிட்டு காரில் வந்த கனகராஜ், தனபாலைத் தொடர்பு கொண்டான். காரை சயான் ஓட்டிவர, பெருந்துறையில் தனபாலை சந்தித்தான். தனபாலிடம் அதுவரை அவன் உபயோகித்து வந்த இரண்டு செல்போன்களைக் கொடுத்தான். தனபால் வேறொரு செல்போனை புதிய சிம் கார்டுடன் கனகராஜுக்கு கொடுத் தான். அவனது காரில் ஏகப்பட்ட பைகளில் ஆவணங்கள் இருந்தது. கார் நேராக சங்ககிரிக்குச் சென்றது. அங்கு எடப் பாடியின் மச்சான் வெங்கடேஷை சந்தித்தான். வெங்க டேஷுடன் ஆர்.பி.எம்.எஸ். ரத்தினம், எடப்பாடி சேர்மன் வத்தநாடு மாதேஸ், தாரமங்கலம் செங்கோடன், வி.ஐ.பி. சிட்டி தங்கவேலு, கொங்கணாபுரம் சேர்மன் கே.கே.மகேஷ், நைனார்பட்டி பன்னு என்கிற சிவக்குமார் (இந்த சிவக் குமாரை ஏற்கெனவே ஆவணங்கள் பரிமாற்ற விவகாரத்தில் நக்கீரன் கண்டுபிடித்து எழுதியது) ஆகியோர் இருந்தனர்.
அவர்கள், எடப்பாடி சொல்லியபடி அமைச்சர்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய பையை கனகராஜிட மிருந்து பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு நேராக சேலம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு சென்றான் கனகராஜ். அங்கு கனகராஜை சந்தித்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்கள், 25 கோடி ரூபாய் பணத்தை எடப்பாடி உத்தரவுப்படி கொடுப்பார்கள் என சொல்லப்பட்டிருந்தது. அங்கே கே.கே.எஸ். செல்வராஜ், மகேஷன் ஆகிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்கள், ஓலப்பட்டி சரவணன், சிந்தாமணியூர் சேகர், அரியலூர் பழனிச்சாமி ஆகியோர் கனகராஜை சந்தித்தார்கள். செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். அதில் ஒருவர் பத்திரம் எழுதுபவர். ஓலப்பட்டி சரவணனும், சேகரும் கனகராஜ் கொண்டுவந்த ஆவணங்களை சரிபார்த்தார்கள். ஆவணங்களை வாங்கியதும் அது எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு கொண்டுசெல்லப் பட்டது.
ஆனால், கொள்ளையின்போது ஓம் பகதூர் என்ற காவலாளி வாளையார் மனோஜால் கொல்லப் பட்டுவிட்டார். கொள்ளையின் போது கொலை நடந்ததால் கனகராஜுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 25 கோடி ரூபாய் பணத்தை தரவில்லை. கனகராஜுடன் கொள்ளையடித்த கேரள குற்றவாளிகளை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பு போலீசில் ஒப்படைத்தார். கனகராஜ், சயானை எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் போலீசில் சரணடையுமாறு அட்வைஸ் செய்தார். கனகராஜிடமிருந்து தனபால் வாங்கி வைத்திருந்த செல்போன்களை சுரேஷ்குமார் பறித்துக் கொண்டார். (இந்த சுரேஷ்குமார் கனகராஜ் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கனகராஜ் வீட்டு விசேஷங்களில் பங்கெடுத்தவர்)
அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் நான் துரோகம் செய்துவிட்டேன். எடப்பாடிக்காக நான் இந்த வேலையைச் செய்தேன். அவர் என்னைக் காட்டிக்கொடுத்து விட்டார் என புலம்பியபடி இருந்த கனகராஜ், நெல்லூருக்குப் போய் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என புறப்பட்டுப் போனார். அப்பொழுது தனபால் அவனிடம் பேசி மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.
அவனை கொலை செய்வதற்கு எடப்பாடி முயன்றார். அவன் இறப்பதற்கு முந்திய நாள் அவனுக்கு சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொல்ல, அவனது ஊரைச் சேர்ந்த அய்யமுத்து, சந்திரன், பாலசுப்ரமணியன், புதுப்பாளையம் தங்கவேல், போயஸ் கார்டனில் அவனுடன் வேலை செய்த கார்த்திக், அரிசிபாளையம் கேபிள் ஆபரேட்டர் அர்த்தநாரி ஆகியோர் முயன்றனர். அவன் திறந்திருந்த மது பாட்டிலைக் குடிக்கவில்லை. அதனால் தப்பித்தான்.
ஆனால், அடுத்த நாள் நடந்த சாலை விபத்தில் அவன் உயிரிழந்தான். அந்த விபத்து நடந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள பேஸ்மென்ட் போட்ட கட்டிடத்தில் ஆத்தூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் ரஞ்சித், தம்மம்பட்டி குமார், அரியலூர் பழனிச் சாமி, சின்னப்பம் பட்டி கோவிந்தன், புதுப்பாளையம் கனகராஜ் ஆகியோர் ஒன்றாக கனக ராஜுடன் அமர்ந்து தண்ணியடித்தார்கள். அதற்குப் பிறகுதான் கனகராஜ் விபத்தில் இறந்தான். இவர்கள் யாருமே விபத்து தொடர்பான வழக்கில் சாட்சியாகக் கூட வரவில்லை. இந்த சதித்திட்டத்திற்கு கனகராஜின் சித்தி மகன் ரமேஷும் உடந்தையாக இருந் திருக்கிறான்.”
இவையெல்லாம் கனகராஜின் சகோதரர் தனபால் சொல்லும் விபரங்கள்.
“இவ்வளவு பேருக்குத் தெரிந்து நடந்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டாமல் இருந்ததற்கு காரணம், முன்னர் இந்த வழக்கை விசாரித்த போலீசார் எடப்பாடியிடம் விலைபோய் விட்டார்கள்" என்கிறார் தனபால். “
இதுதான் ஸ்டாலின் போலீசுக்கும், எடப்பாடியின் போலீசுக்கும் உள்ள வித்தி யாசம்” என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
________
இறுதிச்சுற்று!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் ப.சிதம்பரம் ஒரு அணி, கே.ஆர்.ராமசாமி ஒரு அணி என இரு அணியாக செயல்பட்டு வந்தனர். பொதுவாய் ஒரு நிகழ்ச்சியை கட்சித் தலைமை அறிவித்தாலும் அணி, அணியாக நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர் இருதரப்பினரும். கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவராக கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர் சத்தியமூர்த்தி செயல்பட்ட நிலையில், ப.சி அணிக்கு அது பின்னடைவாகவே கருதப்பட்டது. இவ்வேளையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவரான சத்தியமூர்த்தி நீக்கப்பட்டு, கார்த்தி சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான மானாமதுரையை சேர்ந்த சஞ்சய்காந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். மீண்டும் சிவகங்கை மாவட்டம் ப.சி. கையில் சென்றுவிட்டதாகக் கருதி, அப்செட்டான கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர்கள் அடுத்தகட்ட நகர்வுக்காகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், மானாமதுரையில் இருசக்கர வாகன ஷோரூமை நடத்திவரும் சஞ்சய்காந்தி தன்னுடைய காரை அங்கேயே விட்டுச் சென்றிருந்தார். 7-ந் தேதி வியாழக் கிழமை காலையில் வந்து பார்க்கையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மானாமதுரை போலீஸாரிடம் புகாரளித்தார். மானாமதுரை போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில்... காரை உடைத்தது கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளராக இருக்கலாம் என தகவல் பரவி வருவதால் இருதரப்பிலும் கொந்தளிப்பு பெருகியுள்ளது.
-நாகேந்திரன்
_______________
1000 கோடியா? 2000 கோடியா? பேரம் பேசிய எடப்பாடி தரப்பு!
கொடநாடு விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தனபால், எடப்பாடி சார்பாகத் தன்னிடம் நடைபெற்ற பேரங்கள் குறித்து அம்பலப்படுத்தினார். அவர் கூறுகையில்,
கனகராஜ் மர்மமாக இறந்த அன்று காலை, 'என் உயிர் எப்போது வேண்டு மானாலும் போகலாம். அதற்குள் கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நான் செய்தது தப்புதான்,' என என்னிடம் கூறினான். கடந்த சில நாள்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, அவருடைய மைத்துனர் வெங்கடேஷ் ஆகியோரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் என்னை அணுகினர். அவர்கள், 'அண்ணனை யாரிடமும் காட்டிக் கொடுத்துட வேணாம். சேலம் புறநகரை இரண்டாகப் பிரித்து மேற்கு மாவட்ட செயலாளர் பதவி தருகிறோம். சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் தருகிறோம். ஆயிரம் கோடியா? 2000 கோடியா? எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கோ' என்று பேரம் பேசினர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த கொங்கணாபுரம் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, எடப்பாடியின் மச்சான் பேசும்படி சொன்னதாகக்கூறி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஒருநாள், அதிகாலை 3.30 மணியளவில் எனக்கு போன் செய்து பேசினார். 'எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கிக்கப்பா. பத்து தலக்கட்டுக்கு வேணும்னாலும் பணம் தர்றோம். வருங்காலத்தில் நீதான் சங்ககிரி எம்.எல்.ஏ. மந்திரி பதவிகூட கிடைக்கும்,' என்றெல்லாம் ஆசை காட்டினார். மீண்டும், செப்டம்பர் 6ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், கரட்டூர் மணி என் வீட்டிற்கே நேரில் வந்து, 'அண்ணனை காட்டிக் கொடுத்துடாதே!' என்றும், 'எவ்வளவு வேணும்னாலும் பணம் தருகிறோம்' என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். முன்பு இடைப்பாடி காவல் ஆய்வாளராக இருந்த சுரேஷ் குமார், நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பா ஆகிய இருவரும் கனகராஜ் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் என்னிடமிருந்து வாங்கிச்சென்று விட்டனர். நான் எந்தத் தடயங்களையும் அழிக்கவில்லை. அவர்கள் இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும். ஆய்வாளர் சுரேஷ்குமார், எடப்பாடியின் நிழலான இளங்கோவனுக்கு பினாமியாக இருந்தார்'' என்றார்.
தனபாலின் குற்றச்சாட்டு குறித்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, ''தலைவரே... மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. அவன் கிடக்கிறான் திருட்டுப் பையன். வேறு ஏதாவது பேசுங்க தலைவரே'' என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார். அ.தி.மு.க. பிரமுகர் கரட்டூர் மணியிடம் பேசியபோது, ''செப்டம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் தனபால் வீட்டிற்கு நான் செல்லவே இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் நான் என் வீட்டு வளாகத்தில் 'வாங்கிங்' செய்து கொண்டிருந்தேன். அவர் பைத்தியம்போல் உளறிக்கொண்டு இருக்கிறார். அதற்கு முன்பும் நான் அவரிடம் எதுவும் பேசவில்லை,'' என்றார். நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் கொடநாடு வழக்கில் அடுத்த அத்தியாயம் தொடங்கி இருக்கிறது.
-இளையராஜா