தமிழக டி.ஜி.பி. திரிபாதி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது மத்திய உளவுத்துறை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள், ""கடந்த ஜூன் மாதம் தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார் திரிபாதி. டி.ஜி.பி. பதவியை பிடிக்க தமிழக ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பலரும் பகீரத முயற்சி எடுத்த சூழலில் திரிபாதியை டிக் அடித்தது மத்திய அரசு.
டி.ஜி.பி. பதவியில் அமர்ந்தவுடன், கிரிமினல்களுக்கு எதிரான அவரது ஆக்சன்களுக்கு எடப்பாடி அரசு ஒத்துழைக்கவில்லை. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிகமிருப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க முடிவதில்லை. திறமையான அதிகாரிகள் டம்மி போஸ்டிங்கில் இருப்பதும், வசூல் பார்ட்டிகள் பவர் ஃபுல் போஸ் டிங்கில் இருப்பதும் அவரது கவனத்துக்குப் போனது. அதனால் அவர்களை இடமாற்றம் செய்ய நினைத்தார். ஆனால், அரசியல் குறுக்கீடுகள் அதிகரித்ததால் அதனை செய்ய முடியவில்லை.
பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டு முறை உளவுத்துறை தகவல்கள் முதலமைச்சர் எடப்பாடிக்கு அனுப்பி வைக்கப்படும். உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி இதனை செய்து வருகிறார். முதலமைச்சருக்கு செல்லும் தகவல்கள், டி.ஜி.பி.க்கும் தெரிவிப்பது நடைமுறை. அது தரப்படுவதே இல்லை. அதேசமயம், டி.ஜி.பி.யின் நிர்வாக செயல்பாடுகளில் உளவுத்துறை மூக்கை நுழைக்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக சுதந்திரமாக திரிபாதியால் இயங்க முடியவில்லை. முதல்வருக்கு இந்த விவகாரங்கள் தெரிந்தும் ஏனோ அவர் இதில் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், இது குறித்து டெல்லிக்கு ரிப்போர்ட் போட்டுள்ளது மத்திய உளவுத்துறை'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வது குறித்த நடைமுறைகள் துவங்கியபோது, டி.ஜி.பி. பதவியைப் பிடிக்க விரும்பி டெல்லி வரை முயற்சித்தார் தற்போதைய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாஃபர்சேட். முதல்வர் எடப்பாடியின் உதவியும் இதில் அதிகம் இருந்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை.
இந்த நிலையில், புதிய டி.ஜி.பி.க்கான பேனலில் திரிபாதி, ஜாஃபர் சேட், லஷ்மிபிரசாத் இடம் பெற்றனர். இந்த பேனலை மத்திய உள்துறை ஓ.கே. செய்யும்போது, அந்த மூவரில் ஒருவரை மாநில அரசு டிக் அடிக்க லாம். அந்த வகையில், ஜாஃபர் சேட்டுக்கு மத்திய அரசின் ஆதரவு இல்லை யென்பதால், லஷ்மி பிரசாத்தை ஓகே செய்து திரிபாதிக்கு செக் வைக்க நினைத்தது எடப்பாடி அரசு. ஆனால், மத்திய அரசோ, "எங்களின் சாய்ஸ் திரிபாதிதான்' என ஸ்ட்ரிக்ட்டாக கட்டளையிட்டது. அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தின் விளைவாகத்தான் டி.ஜி.பி.யை இயல்பாக இயங்க விடாமல் தடுக்கின்றனர்...‘’என்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
இதற்கிடையே, தமிழக காவல் துறை தலைவராக வரமுடியவில் லையே என்கிற ஆதங்கத்தில் இருக்கும் ஜாஃபர், சென்னை போலீஸ் கமிஷனராகும் பகீரத முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும், இதற்காக துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்தின் உதவியை நாடி யிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
-இளையர்