"ஹலோ தலைவரே... உள்ளாட்சி அமைப்புகளில், இன்னும் நடத்தப்படாத இடங்களுக்குத் தேர்தலை நடத்தும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சியின் போது புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படலை. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், கால நீட்டிப்பைக் கேட்டு, தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது முந்தைய அரசு. ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில்... இதன் விசாரணை, கடந்த 22-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது இங்குள்ள தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யு மான அரசு வழக்கறிஞர் வில்சன், கொரோனா நெருக்கடியைச் சுட்டிக்காட்டி "தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும்'னு கேட்க... இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "வருகிற செப்டம்பர் 15-க் குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கணும்'னு கறாராக உத்தர விட்டிருக்காங்க.''”
"அப்போ தேர்தலை நடத்தித்தான் ஆகணுமா?''”
"அப்படியொரு நெருக்கடியான நிலைக்கு தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் தள்ளப்பட்டிருக்கு. இந்த உத்தரவு வந்தவுடனேயே முதல்வர் ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இப்ப இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவதன் சிரமத்தை அதிகாரிகள் விவரிச்சாங்க. அதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் முடிவடைவதால், அதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கனும்ன்னு அதிகாரிகள் தெரிவிச்சாங்க. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் சிக்னல் காட்ட, அதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர்கள் இருவரும் அதே வேகத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தாங்க. இருந்தும் தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் தொடருது.''”
"சட்டசபைக் கூட்டம் தொடர்பாக, சின்னச் சின்ன சல சலப்புகளும் இருக்கேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபைக் கூட்டத் தொடர் வியாழக்கிழமையோடு நிறைவடையுது. வேறொரு நாளில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பேரவைக் கூட்டம் விரைவில் கூட்டப்படும். இதில் கலந்துக்கிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் துறைச் செயலாளர்கள் பலருக்கும் ஃபோன்போட்டு, "இப்ப உங்கள் துறை சார்ந்து எதுவும் வரப்போவதில்லை. அதனால், சபைக்கு நீங்கள் வரத்தேவையில் லை'ன்னு சொல்லப்பட்டிருக்கு. இதைக் கேட்ட சீனியர் ஐ.ஏ.எஸ்.கள், "இதை டெஸ்ட் எடுக்கறதுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே?'ன்னு ஆதங்கப்பட்டிருக்காங்க. அதேபோல், கடந்த ஆட்சியில் இரட்டை இலையில் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சியினருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதுபோல், "இந்தமுறை உதயசூரியனில் வென்ற தனக்கு முன்வரிசையில் இடம் கொடுக்கப்படலையே'ங்கிற மனக்குறை வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனுக்கு இருக்குதாம்.''”
’"சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டோர் பட்டியலில், பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்துவின் பெயர் இல்லையேப்பா?’''’
"உண்மைதாங்க தலைவரே, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோடு கல்வியாளர் துளசி அய்யா, எழுத்தாளர் கி.ரா., முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால், பெரியாரியத்தை தன் இறுதி மூச்சுவரை பரப்பிவந்த பெரியார் பெருந்தொண்டரும் ’சிந்தனையாளன்’ இதழ் ஆசிரியருமான ஆனைமுத்துவுக்கு இந்த வரிசையில் அஞ்சலி செலுத்தப்படாதது... பகுத்தறிவாளர்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கு. அண்மையில் அய்யா ஆனைமுத்து மறைந்தபோது, அவரின் தொண்டுகளை விவரித்து ஸ்டாலினே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயர் விடுபட்டிருக்கிறது. இந்த விசயம் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டிருக்கு.''”
"கலைஞர் சூட்டிய ‘தமிழ் வளர்ச்சித்துறையின் பெயரை, தி.மு.க. அரசு மாற்றக்கூடாதுன்னு கோரிக்கை எழுந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, முனைவர் பா.இறையரசன், இயக்குநர் "யார்' கண்ணன் உள்ளிட் டோரைக் கொண்ட "தமிழ் எழுச்சிப் பேரவை'’ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு ஒரு கோரிக்கை மடலை எழுதியிருக்கு. அதில், "கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் ’"தமிழ் வளர்ச்சித் துறை'’ என்ற தனித்துறையை ஏற்படுத்தினார். அது இப்போது ‘"ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை'’ என மாற்றப்பட்டிருப்பது சரியல்ல. மேலும் தமிழ் அமைச்சகத்தைத் தனியே "தமிழ் வளர்ச்சித் துறை' என்ற பெயரில் இயங்கச் செய்வதோடு, இதற்கென்று தனி அமைச்சரையும் நியமிக்கவேண்டும்' என்று குரல் கொடுத்திருக்கிறது. மேலும், ’"தமிழ் இலக்கண இலக்கிய வளர்ச்சி, பாதுகாப்பு, தமிழ்க் கல்வி, தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழ் நிறுவனம், தமிழ் நூலகங்கள் ஆகியவற்றுக்கான அமைச்சகமாக தமிழ் வளர்ச்சித் துறை திகழவேண்டும்' என்றும் தமிழ் எழுச்சிப் பேரவை குரல் கொடுத்திருக்கு.''”
"தமிழகத்துக்கு புதிய டி.ஜி.பி.யை நியமிக்கும் நேரம் வந்துடுச்சே?''”
’"ஆமாங்க தலைவரே, தமிழக காவல்துறைத் தலைவரான டி.ஜி.பி. திரிபாதியின் பதவிக் காலம் இந்த மாதத்தோடு முடிவடையுது. அதனால், புதிய டி.ஜி.பி.யைத் தேர்வு செய்வதற் காக, பணி மூப்பு பட்டியல் ஒன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கு. அதில் சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப் பிலிப், சஞ்சய் அரோரா, கந்தசாமி, ராஜேஷ்தாஸ், சகில் அக்தர் உள்பட டி.ஜி.பி. ரேங்கில் உள்ள 11 அதிகாரிகள் அனைவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கு. இந்தப் பட்டியலை வரும் திங்கட்கிழமை மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிசீலித்து, அவர்களில் தகுதியானவர்கள் என்று, தான் கருதும் அதிகாரிகளில் நால்வருடைய பெயரை, தமிழக அரசுக்கு அது அனுப்பி வைக்குமாம். அவர்களில் ஒருவரை முதல்வர் ஸ்டாலின், டி.ஜி.பி.யாகத் தேர்வு செய்வார் என்கிறார்கள். இந்த நிலையில், புதிய டி.ஜி.பி சைலேந்திரபாபுவா? கரன்சின்ஹாவா? என்கிற பட்டிமன்றம் ஐ.பி.எஸ். வட்டாரத்திலேயே சுடச்சுட நடந்துக்கிட்டிருக்கு.''”
’"தீயணைப்புத் துறையில் தமிழக அளவில் மெஹா டிரான்ஸ்பர்கள் நடக்கப்போகுதே?''”
’"உண்மைதாங்க தலைவரே, தீயணைப்புத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுது. அதிலிருந்து தப்பிக்க, பலரும் மேலதிகாரிகளை மொய்க்கறாங்களாம். இந்த லிஸ்ட்டில் இருக்கும் மத்திய சென்னை மாவட்ட, தீயணைப்புத் துறை அதிகாரியான சரவணன், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கார். இப்ப அவரும் டிரான்ஸ்பர் வேண்டாம்ன்னு பவர் புள்ளிகளை அணுகறாராம். ஏற்கனவே அவர்மீதான குற்றச்சாட்டால், அவரைத் துறையின் இயக்குநராக இருந்த டி.ஜி.பி. காந்திராஜன் டிரான்ஸ்பர்ல தூக்கியடிச்சார். இருந்தும், காந்திராஜன் ஓய்வு பெறும்வரை விடுப்பு போட்ட சரவணன், பிறகு தன் இடமாற்றலை ரத்துசெய்ய வச்சிருக்கார். இப்ப துறையின் அடிஷனல் டைரக்டர் முரளியின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறாராம் சரவணன்.''’
"’மெல்ல மெல்ல அமைச்சர்கள் மீதான சர்ச்சைகள் புறப்பட ஆரம்பிச்சிருக்கேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, வன நிலங்களை ஆக்கிரமித்த ’ஈஷா மைய’ ஜக்கி வாசுதேவ் தரப்புடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நெருக்கம் பாராட்டுவது பெரும் சர்ச்சையாவதை நம்ம நக்கீரன்தான் அம்பலப்படுத்துச்சு. அதே போல் சில அமைச்சர்களின் நடவடிக்கைகளும் சர்ச்சை சூறாவளியைக் கிளப்பிக்கிட்டு இருக்குது. குறிப்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர், தன் சமூகத்துக்கான அமைச்சராக செயல்படறார்னு தி.மு.க. தரப்பிலிருந்தே புகார் வருது. தனது மாவட்டத்தில் அவர் 2 பப்ளிக் ப்ராசிக்யூட்டர்களை நியமிச்சாராம். அந்த ரெண்டுபேரும் அவர் சமுதாயத் தைச் சேர்ந்தவங்களாம். அதேபோல் அவர் மாவட்டத்தில் இருக்கும் லோக்கல் கோர்ட்டுகளிலும் அரசு வழக்கறிஞராக அவர் தரப்பு ஆட்களையே தேடறாராம். இப்ப நியமிக்கப்பட்டிருக்கும் 160 செவிலியர்களிலும் அவர் சமூகத்தினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டி ருக்குன்னும் சொல்றாங்க. அமைச்சர் என்ன சொல்லப்போறாரோ?''”
"சசிகலா பக்கமும் பரபரப்பு தெரியுதேப்பா?''”
"அ.தி.மு.க. புள்ளிகளோடு போனில் பேசி, அந்தத் தரப்பில் கலகத்தை உண்டாக்கிய சசிகலா, அ.தி.மு.க.வினர் மாவட்ட வாரியாக அவருக்கு எதிராகத் தீர்மானம் போட ஆரம்பித்ததைக் கண்டு திகைச்சிப் போயிட்டாராம். இந்த நிலையில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ் டாக்டர் சிவகுமார்னு தன்னைச் சுற்றியிருந்தவர்களை விட்டு விலகி, நடராஜனின் சகோதரர்களான பழனிவேல் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை தனக்கான அரசியல் வியூகர்களாக இருக்க வைத்துவிட்டா ராம். அடுத்த மாதம், மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து, அ.ம.மு.க.வினரையும், அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அவர், இந்த டூருக்கான ஏற்பாடுகளையும் தனது இரண்டு கொழுந்தன் மார்களிடமும் ஒப்படைத்திருக்கிறாராம்.''”
"சசிகலாவின் ஆடியோ பேச்சுகள் வரிசையா வந்துக்கிட்டிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே...… ஜெயிலில் இருந்து சசிகலா ரிலீஸானபோது அவரை வரவேற்க அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் போகவில்லை என்று சென்னது அ.தி.மு.க தலைமை. ஆனாலும், சசிகலாவுடன் ஓ.பி.எஸ். தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே வந்தது. சசிகலாவுடன் போனில் பேசுபவர்கள் அ.ம.மு.க.வினர் தான் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்தவர்கள் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதிலும் ஓ.பி.எஸ். கைங்கர்யம் உள்ளதாம். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் குருப்பெயர்ச்சி வருவதால், தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பும் சசிகலா, ஆவணி மாதத்தில் போயஸ் கார்டன் புது பங்களாவில் பால்காய்ச்சி, ஜெ சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, அதன்பின் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அந்த சமயத்தில், சசிகலாவுக்கு ஆதரவான நிலையை ஓ.பி.எஸ். வெளிப் படையாக எடுப்பார் என்றும் பேச்சு நிலவுகிறது.''”
"மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்கனும் உச்சநீதிமன்றம் கறாரா உத்தரவிட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, எம்.பி.க்.கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப் படுவதால்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கு. இந்த நிலையில், இவர்கள் மீது லஞ்சஒழிப்புத் துறையில் உள்ள வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றும் பணிகள் தொடங்கியிருக்கு. இதனால் மாஜி மந்திரிகள் பலரின் விவகாரங்களும் வெகுவிரைவில் விசா ரணைக்கு வரவிருக்கின்றன. இதையறிந்த அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் அனைவரும், காய்ச்சல் கண்ட வர்கள்போல் அனத்திக்கொண்டிருக்கிறார்கள்.''”
"நானும் இது தொடர்பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். லஞ்ச ஒழிப்புத் துறையில் நீண்ட காலமாகக் கோலோச்சிய வில்லங்கமான ஒரு டி.எஸ்.பி.யை, துறையின் இயக்குநரான டி.ஜி.பி. கந்தசாமி, டிரான்ஸ்பரில் வெளியே அனுப்பிவிட்டார். இடம் மாற்றம் செய்யப்பட்ட அந்த அதிகாரியோ, லஞ்சப் புகார்களில் சிக்கியிருக்கும் தென் மாவட்ட மாஜி மந்திரிகளைத் தொடர்புகொண்டு, "உங்கள் மீதான வழக்குகளை சுமுகமாக முடித்து தருகிறேன்' என்று, டீலிங் பேசிக்கொண்டி ருக்கிறாராம். இதில் அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் போடப்பட்ட முந்தைய தி.மு.க. ஆட்சியின் மாஜிகளும் உண்டு.''”