Skip to main content

பக்தி மணத்தில் பகுத்தறிவாளர்! -நெகிழ வைத்த நினைவேந்தல்!

க்தி மணம் கமழும் வகையில் பிரமாண்டமாக, கலைஞரின் புகழுக்கு புகழ் வணக்கம் செய்யும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை -மியூசிக் அகாதமியில் சைவம், வைணவம், சன்மார்க்கம், திரையிசை, அருளஞ்சலி, நாடகாஞ்சலி, கவிதாஞ்சலி, நினைவஞ்சலி என காலை 8 மணி முதல் இரவு 10.30 வரை ஒருநாள் முழுக்க புகழ் வணக்கம் நடந்தேறியது.

spirtual-meet


ஆன்மிகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் பெருமளவில் திரண்டிருந்த இந்நிகழ்வில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் இருவரும் காலையிலும் மாலையிலும் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம், வி.ஜி.ராஜேந்திரன், தாயகம் கவி உள்பட பலரும் கலந்துகொண்டு நினைவேந்தலின் சுவையைப் பருகினர்.

அஞ்சுகத்தம்மாளோடும், அறிஞர் அண்ணாவோடும் கலைஞர் கனிவுடனும் கம்பீரத்துடனும் இருக்கும் பேனர்களும் கலைஞரின் ஆளுமைமிக்க படங்களும் மஞ்சள் நிறப் பூக்களால் மேடையை அலங்கரித்திருந்தன. தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த ஆளுயுர பாக்ஸில் கலைஞரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மாறிமாறி ஓடிக்கொண்டிருந்தன. நிகழ்வின் துவக்கமாக அனைத்து சாதியினரைச் சேர்ந்த 5 பெண்கள், குத்துவிளக்கு ஏற்றினர். விழியிழந்தோர் பள்ளிச் சிறுவர் சிறுமிகள் 15 பேர் நினைவுச்சுடர் அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

தமிழ்த் திருமறைகளான திருவாசகம், தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா பாடல்களைப் பாடி கலைஞருக்கு வழிபாடும் வாழ்த்தும் வழங்கினார் கலாநிதி சு.வெங்கடேசன் ஓதுவார். 1008 வைணவ பாகவத அடியார் குழுவினரின் ஸ்ரீராமானுஜர் நூற்றந்தாதி தமிழ்மறை முற்றோதல் நிகழ்ச்சி எல்லோரையும் கட்டிப்போட்டது. ஆழ்வார்களுக்கு சாதி இல்லை என்பதால் ஆதி சைவம் முதல் ஆதிதிராவிடர்கள் வரை 108 பேர் தமிழ்மறை பாடல்கள் பாடி கலைஞருக்குப் புகழ் சேர்த்தனர்.

spirtual-meet


தவத்திரு டாக்டர் ஊரண் அடிகளார் தலைமையில் அவ்வை நடராஜன், பேராசிரியர் தி.ராஜகோபாலன், புலவர் கோ.சாரங்கபாணி, முனைவர் சாரதா நம்பியூரான், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், கலைமாமணி நாகை முகுந்தன், நகைச்சுவையரசர் மோகனசுந்தரம் உள்ளிட்ட தமிழறிஞர்களின் அருளஞ்சலி உரை, கலைஞரின் ஆளுமையையும் ஸ்டாலினின் தலைமைத்துவத்தையும் உயர்த்திப் பிடித்தன.

லஷ்மன் சுருதியின் திரையிசை நிகழ்வில், பிரபல பாடகர்கள் மாணிக்கவிநாயகம், முகேஷ், வேல்முருகன், செந்தில்தாஸ் ஆகியோர் கலைஞர் எழுதிய பாடல்களையும் அவருக்கு விருப்பமான பாடல்களையும் பாடி சபையிலிருந்தவர்களை கண் கலங்க வைத்தனர். நாட்டுப்புறக் கலைஞர்களை வைத்து நாடகாஞ்சலியை மேடையில் அரங்கேற்றினார் ஜெகத்ரட்சகன். கவிதாஞ்சலியில் வாசித்த நெல்லை ஜெயந்தாவின் ஒவ்வொரு வரியும் கலைஞரின் ஆளுமையை எதிரொலித்தது.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் சொல்வேந்தர் சுகிசிவம், முனைவர்கள் ஞானசுந்தரம், அப்துல்காதர், வழக்கறிஞர் ராமலிங்கம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பேராசிரியர் மோகன், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் பிரியா இராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழறிஞர்களின் நினைவஞ்சலி உரை, "இனி வாய்மைக்கு யார் உளரோ' என்பதை வெளிப்படுத்தியது.

தலைமையுரையாற்றிய ஏ.ஆர்.லட்சுமணன், ""தாகூர் எழுதிய "யுனிவர்சல் மேன்' என்கிற நூல்தான் நினைவுக்கு வருகிறது. "நாடு, மொழி, இனம், நாகரிகம் கடந்து மானிடப் பண்புகளை வளர்ப்பவரே உலக மனிதன்' என்கிறார் தாகூர். அந்த வகையில், தாகூர் கண்ட உலக மனிதர் கலைஞர். சமயங்களை வெறுத்தவர் அல்ல அவர்; நெறிப்படுத்தியவர். அதனை "ஸ்ரீராமானுஜர்' தொடர் மூலம் நிரூபிக்கவும் செய்தார். இது சமயம் கடந்த நிலை. தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தமிழக அரசின் பிரதிநிதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றிருக்கிறேன். இத்தனை பெருமைகளையும் நான் அடைய 1989-ல் அரசு வழக்கறிஞராக கலைஞர் நியமித்ததுதான் அடிப்படை'' என்றார்.

கலைஞரின் ஆற்றலை உலகத் தலைவர்கள் மார்க் ஆண்டனி, வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரின் ஆற்றலோடு ஒப்பிட்டுப் பேசிய டாக்டர் பிரியா ராமச்சந்திரன், ’""சொல்லை செயலாக்கி, செயலை சாதனைகளாக்கி, சாதனைகளை சரித்திரமாக்கிய ஒரு தலைவரை தமிழ் மண்ணில்தான் கண்டேன். அவர் கலைஞர்'' என்றார்.

தனது பேச்சில் கலைஞரோடு தனக்கேற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சுகிசிவம், ""ஏகாதசியில் மரணம்; துவாதசியில் தகனம் என்பது மகான்களுக்கு மட்டுமே உகந்தது. கலைஞர் ஒரு மகான். அவரது மரணம் ஏகாதசியில் நிகழ்ந்து தகனம் துவாதசியில் முடிந்திருக்கிறது'' என்றார் தனது ஆன்மிகப் பார்வையில்.

பகுத்தறிவாளரான கலைஞருக்குப் பிடித்த இயல், இசை, நாடகம் என்கிற முத்தமிழின் அடிப்படையில் சைவத்தையும் வைணவத்தையும் இணைத்து பிரமாண்டமாக நடந்த நினைவேந்தலில் "மோட்ச தீபம்' ஏற்றப்பட்டது. தன் சாதனைகளால் மாற்றுக் கருத்து கொண்டோரையும் ஈர்க்கும் புகழ் ஒளி கொண்டார் கலைஞர் என்பதைக் காட்டியது ஜெகத்ரட்சகன் நடத்திய விழா.

-இரா.இளையசெல்வன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்