'தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண் டும் என இலங்கை மண்ணில் கோத்தபயவிடம் தெரிவித்ததாக உறுதி தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி திரும்பிய மறுநாளே முள்ளிவாய்க் கால் துயரத்தின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவு தூபியை சிங்கள பௌத்த அரசு இரவோடு இரவாக இடித்துத்தள்ளி நிர்மூலமாக்கியிருப்பதால், இந்திய அரசுக்கும் இதில் பங்கிருக்கிறது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'’என்கிறார்கள் தமிழின உணர்வாளர்கள்.

mullaivaigal

இன அழிப்பு யுத்தத்தில் இறுதிக் கட்டத்தில் மட்டும் 3 லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தார் இலங்கை யின் அப்போதைய பாதுகாப்புத்துறை செயலாளரும் தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே. அந்த இன அழிப்பின் நினைவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் நினைவு தூபியை 2019-ல் உருவாக்கினர். இதே வளாகத்தில் ஏற்கனவே "பொங்கு தமிழ் தூபி', "மாவீரர் தூபி' ஆகிய இரு நினைவிடங்கள் இருக்கின்றன. அவற்றை உருவாக்க திட்டமிட்ட நாளிலிருந்தே பல்வேறு வழிகளில் தடுக்க முனைந்தது சிங்கள ராணுவம். எல்லாவற்றையும் முறியடித்து நினைவு தூபியை அமைத்தது மாணவர் சமூகம்.

ஆள்பவர்களின் கண்களை அந்த தூபிகள் உறுத்திக்கொண்டிருந்த நிலையில் தான், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சிறி சற்குணராஜாவை கொண்டு வந்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. தூபிகள் இருக்கக்கூடாது என்பதுதான் துணைவேந்தருக்கான அசைன்மெண்ட். கடந்த 7-ந் தேதி கொழும்பிலிருந்து சில உத்தரவுகள் சற்குணராஜாவுக்கு பிறப்பிக்கப்பட்டி ருக்கின்றன. அப்போது, "உள்ளூர் போலீஸாரை வைத்து எதுவும் செய்ய முடியாது. ராணுவப் பிரிவிலிருந்து சிலரை அனுப்புங்கள்' என கொழும்புக்குத் தெரிவித்திருக்கிறார் சற்குணராஜா. இதனையடுத்து, 8-ந் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புல்டோசரும் ஒரு லாரியும் நுழைந்தது. அதற்கேற்ப வளாகத்தின் பிரதான இரும்புக்கேட்டை துணைவேந்தர் சற்குண ராஜாவின் உத்தரவின்படி திறந்துவைத்திருந்தார் வாட்ச்மேன். புல்டோசருடன் வந்திருந்த ராணுவத் தினர் இரும்புக் கேட்டை இழுத்து மூடியதுடன், கேட்டுக்கு வெளியே காவலுக்கு நின்றுகொண்டனர். ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தார் சற்குணராஜா.

Advertisment

அவரது மேற்பார்வையிலேயே புல்டோசரால் நினைவிடம் இடிக்கப்பட... சத்தம் கேட்டு ஓரிரு பேராசிரியர்களும் மாணவர்களும் ஓடோடி வந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், புல்டோசரை தடுக்க முனைந்தனர். அவர்களை துணைவேந்தரும் ராணு வத்தினரும் தடுத்து நிறுத்தினர். துணைவேந்தரைப் பார்த்து, "நீ தமிழனா? சிங்கள கைக்கூலியா?' என பேராசிரியர்கள்ஆவேசப்பட... அவரும் பதிலுக்குப் பாய்ந்தார்.

அந்த நள்ளிரவிலும் மாணவர்களுடன் பொதுமக்களான தமிழர்களும் அங்கே திரண்டனர். “"கலைந்து செல்லுங்கள்... இல்லையெனில் சுட்டுத் தள்ளிவிடுவேன்' என ஒரு அதிகாரி எச்சரிக்கை செய்ய... “"எங்கேடா... சுடுடா பார்ப்போம்' என இளைஞர்கள் பலரும் அந்த அதிகாரி நோக்கிப்பாய... நிலைமை பதட்டமானது. திணறிய ராணுவத்தினர், லோக்கல் போலீஸாரை உதவிக்கு அழைத்தனர். ராணுவமும் போலீசும் கடும் வாக்குவாதத்திற்கிடையே தமிழர்களை வெளியேற்றி, நினைவிடத்தை நிர்மூலமாக்கியது.

velmurugan

Advertisment

துப்பாக்கிக்கும் வழக்குக்கும் அஞ்சாத தமிழர்களின் உணர்வு கண்டு, வளாகத்தைச் சுற்றி போலீசும் ராணுவமும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கின. தமிழ் மாணவர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிங்கள அரசின் இந்த அராஜகம் உலகம் முழுவதும் எதிரொலிக்க... மற்ற நினைவிடங்களை இடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியது ராணுவம்.

ராஜபக்சே சகோதரர்களின் இத்தகைய ராணுவ அராஜகத்தைக் கண்டித்து இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள் முழுக்க முழு அடைப்பு நடத்தி முடித்துள்ளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். அதேபோல, தமிழகத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோவும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 11-ந்தேதி முன்னெடுத்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் நாம் பேசியபோது, ""தமிழனத்தின் அடை யாளங்களை கடந்த 11 ஆண்டுகளாக அழித்து வருகிறது சிங்கள ராணுவத்தின் புல்டோசர்கள். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டி ருந்தமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தின் மீது தனது வன்மத்தைக் காட்டி யிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது 3 நாள் சுற் றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய மறுநாளே இந்த அராஜகத்தை கோத்தபய ராஜபக்சே அரங்கேற்றுகிறார், இதுவரை இந்திய அரசிடமிருந்து இலங்கையை கண்டிக்கும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ராஜபக்சேக்கள் ஏக சிங்களத்தை உருவாக்கத் திட்டமிடுவதால், தமிழர்களின் அரசியல் உரிமைகள் எதுவும் பாதுகாக்கப் படப் போவதில்லை. அதனால் தனித் தமிழீழமே ஒரே தீர்வு'' என்கிறார் ஆவேசமாக.

இதற்கிடையே, "இனத்துரோகியே ராஜினாமா செய்' என்கிற முழக்கம் துணைவேந்தர் சிறி சற்குணராஜாவுக்கு எதிராக இலங்கையிலும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடமும் கிளர்ந்து எழுவதால், ""அரசாங்கத்திலிருந்து உத்தரவு வந்தது. அதனை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன்''’என தற்போது கதறுகிறார் சற்குண ராஜா. அதேபோல, சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், ’’"நினைவிட இடிப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. அரசு தரப்பிலிருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. முழுக்க முழுக்க பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த முடிவு அது'’என்று தெரிவித்திருக்கிறது அதிபர் மாளிகை. "சிங்கள கைக்கூலியான தமிழன் சற்குணராஜாவை கைக்கழுவி விட்டுவிட்டார் கோத்தபய ராஜபக்சே' என்கின்றன கொழும்பி லிருந்து கிடைக்கும் தகவல்கள்.

"இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது' என அங்கு சென்று திரும்பிய இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்து இந்தியாவை திட்டமிட்டே அவமானப்படுத்தியிருக் கிறது சிங்கள அரசு. உலக அளவில் தமிழர்கள் காட் டிய எதிர்ப்பால், யாழ் பல்கலையில் முள்ளிவாய்க் கால் நினைவிடத்தை மீண்டும் கட்ட இலங்கை அரசு அனுமதிக்க, மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. "பழைய வடிவிலேயே கட்டி முடிக்கப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கை விட்டனர் பல்கலை மாணவர்கள்.

-இரா.இளையசெல்வன்

படம் : அசோக்