இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை லயோலா கல்லூரியை ஒட்டியுள்ள நடைபாதை, நுங்கம்பாக்கம் ரயிலடியை ஒட்டியுள்ள பகுதி, ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலை, தியாகராய நகர் உஸ்மான் ரோடு, சைதாப்பேட்டை பாலம் அருகில் இந்த இடங்களிலெல்லாம் வசித்த குடிசைவாசிகளை அப்புறப்படுத்தி சென்னையின் புறநகருக்கு அனுப்பி வைத்தனர். அப்புறப்படுத்தலுக்கு காரணம் சாலை விரிவாக்கம் என சொல்லப்பட்டது. இப்போதோ, ஆட்சி முடிந்து புறப்படும் நேரம் வந்துவிட்டதால், அலெர்ட் ஆறுமுகமாகி, அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார்கள் ஆளுந்தரப்பினர்.
அவர்களின் கண்களில் லேட்டஸ்டாக சிக்கியதுதான் சென்னை இராயப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கான பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு. 1972-ல் முதல்வராக இருந்த கலைஞரால் தொடங்கப்பட்டது இது. மொத்தம் 346 வீடுகள் உள்ள இந்த காலனியில் முக்கால்வாசி அரசு ஊழியர்களும், சிறப்பு அரசாணையின் பேரில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அரசியல் கட்சியினர் என சகல தரப்பினரும் உள்ளனர். இப்போது 290 வீடுகளில்தான் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் 35 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் குடிசை மாற்று வாரிய, வீட்டுவசதி வாரிய வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ராணி அண்ணா நகர், உஸ்மான் சாலை இவற்றில் இருந்த வீடுகள் எல்லாம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு, பழைய குடியிருப்பு வாசிகளுக்கே வழங்கப்பட்டது. 2012-ல் அரசாணை வெளியிடப்பட்ட குடியிருப்புகளில் இந்த பீட்டர்ஸ் காலனியும் ஒன்று. ஆனால் கட்டிடங்கள் சற்று வலுவாக இருந்த தால் இடிப்புப் பணியும் தள்ளிப் போடப் பட்டது. ஆறு வருடங்கள் கழித்து, அதாவது 2019 டிசம்பரில் பீட்டர்ஸ் காலனிவாசிகள் வீடுகளை காலி செய்யும்படி அரசு நோட் டீஸ் அனுப்பி, 2020 ஏப்ரல் வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் அதாவது கொரோனாவுக்கு முன்பு வீடுகளை இடித்துக் கட்டுவதற்காக டெண்டர் வெளியானது.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்தபோது, "அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் தரமான வீடு கட்டித்தரப்படும்' என வாக் குறுதி கொடுத்தார் வீட்டுவசதித் துறை அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆறுமாதங்களாக கம்முன்னு இருந்தவர்கள், கடகடவென வேலைகளில் இறங்கி, பி.என்.ஆர். என்கிற கட்டுமான நிறுவனத்திற்கு, வீடுகளை இடிக்கும் பணியை இ-டெண்டர் மூலம் உறுதிப்படுத்திவிட்டனர். இங்கு குடியிருப்பவர்களுக்கு அதே ராயப்பேட்டை ஏரியாவில் உள்ள லாயிட்ஸ் காலனி, எம்.கே.பி. நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்பில் வீடுகளையும் அதிரடியாக ஒதுக்கிவிட்டனர்.
பீட்டர்ஸ் காலனியிலேயேதான் இருப்போம் என்பவர்களை பட்டினப்பாக்கம் டிவிஷன் செயற்பொறியாளரான காந்தி ஓப்பனாகவே மிரட்டி வருகிறாராம். இதுபோல் இன்னும் பல தகவல்களை நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார் அங்கே குடியிருக்கும் திருக்குமரன்.
""சார் ஒரு சுத்தியலையும் ஆணியையும் உங்க கையில தர்றேன். இங்கிருக்கும் வீடுகளில் உள்ள சுவற்றில் அடித்துப் பாருங்கள். ஆணி இறங்கிருச்சுன்னா நாங்களே நல்லபடியா காலி பண்ணிட்டுப் போயிருவோம். இந்த இடத்தில் மெகாமால் கட்டுவதற்கு திட்டம் போட்டுத்தான் அத்தனை வேலைகளும் நடக்கிறது. இங்கிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கும் வியாசர்பாடிக்கும் எம்.கே.பி.நகருக்கும் அனுப்பினால் எங்க குழந்தைகளின் படிப்பு என்னாகுறது?'' என வேதனைப்பட்டார். இதே வேதனையை சுலோச்சனா என்பவரும் வெளிப்படுத்தினார்.
பீட்டர்ஸ் காலனி அசோசியேஷன் தலைவர் முத்து, ""புதிதாக கட்டப்படும் வீடுகளை எங்களுக்கு கொடுக்காமல் பல கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் என்ன? இப்போது அவசர அவசரமாக வீடுகளை இடிக்க ஆரம்பித்துவிட்டது பி.என்.ஆர்.கம்பெனி. இதை உடனே நிறுத்தி இன்னும் ஆறு மாதங்கள் எங்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.
நாம் செயற்பொறியாளர் காந்தியிடம் பேசிய போது, ""அரசாங்கம் சொல்றததான் நான் செய்து வருகிறேனே தவிர யாரையும் மிரட்டவில்லை'' என்றார்.
பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் பாதுகாப்பானது அல்ல, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நியாயமானதுதான். ஆனால் கடைசி நேர கலெக்ஷனை மட்டுமே கவனத்தில் கொண்டு அவசரம் காட்டுவது அதைவிட ஆபத்தானது.
-அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின்