2023-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஒப்புதல் பெறப்பட்ட உரையில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்காமல் புறக்கணித்ததும், ஆளுநர் புறக்கணித்த பகுதிகளையும் அவைக்குறிப்பில் ஏற்றவேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதும், தேசிய கீதம் வாசிக்கும் முன்பாக சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்ததும் தேசிய அளவில் பேசுபொருளாயிருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சிசெய்யாத மாநிலங்களில், குடைச்சல் கொடுக்கும் ஆயுதமாக ஆளுநர்களைப் பயன்படுத்தும் போக்கு தீவிரம்பெற ஆரம்பித் துள்ளது. 2014 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க. ஏறுநடை போட ஆரம்பித்தது. இதனையடுத்து, மத்தியில் மட்டுமல்லாமல் உ.பி., ம.பி., ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.
அதேசமயம் வடகிழக்கு மாநிலங்களிலும், பா.ஜ.க.வுக்கு சாதகமில்லாத மாநிலங்களிலும் அங்குள்ள உள்ளூர் கட்சிகளின் துணையோடு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இவ்வாறு தனியாகவும் கூட்டணியின் துணையோடும் ஆட்சியைப் பிடித்துவரும் பா.ஜ.க.வின் பாச்சா, பஞ்சாப், மேற்குவங்கம், டெல்லியிலும், தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பலிக்கவில்லை.
இதனையடுத்து, பா.ஜ.க.வின் கொள்கைக்கு மாறுபாடான கொள்கை கொண்ட மாநிலங்க ளுக்கு கடிவாளம் போடுவதற்கு கெடுபிடியான நபர்களைத் தேடிப்பிடித்து ஆளுநர்களாக நியமித்தது. இதனால் டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஆளுநர்களால் தொடர்ந்து இக்கட்டுகளைச் சந்தித்து வருகின்றன.
மும்பையில் கூட்டணி ஆட்சியமைத்த சிவசேனாவும், பா.ஜ.க.வும் உறவு கசந்த நிலையில் 2019-ல் தனித்து தேர்தலைக் கண்டன. மும்பை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க பெரும் பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸுடனும், தேசியவாத காங்கிரஸுடனும் பகிர்ந்துகொள்ள சிவசேனா தயாரானதால், அக்கட்சி ஆட்சியமைத்தது. இந்நிலையில், ஆளுநரின் கெடுபிடிக்கு சிவசேனா வும் உள்ளானது. இருந்தபோதும், சிவசேனா கட்சியிலே அதிருப்தி மனப்போக்கில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவை வளைத்த பா.ஜ.க., பெரும் செலவுசெய்து கட்சியை உடைத்து எம்.எல்.ஏ.க்களை வெளியே இழுத்து கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது. ஆனால், இத்தகைய உடைப்பு அரசியல் மற்ற மாநிலங்களில் சாத்தியமாகாத நிலையில், அவை ஆளுநர்களின் இக்கட்டுகளுக்கு உள்ளாகிவருகின்றன.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், ஆம் ஆத்மியின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் ஆளுநரின் கெடுபிடிகளை தொடர்ச்சியாக சந்தித்துவருகிறது. ஆளுநர், முதல்வர் இருவரில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதை அறிய ஆம் ஆத்மி சட்டப் போராட்டத்தையே சந்திக்கவேண் டிய தானது. சமீபத்தில் டெல்லியில், ஆம் ஆத்மி அரசு வெளியிட்ட விளம்பரங்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறியிருக்கிறது என்றும், அதனால் விளம்பரத்துக்காக செலவிட்ட தொகை ரூ.97 கோடியை ஆம் ஆத்மி கட்சியே செலுத்தவேண்டும் எனவும் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா உத்தரவிட்டிருக் கிறார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்னாள் ஆளுநர் அனில்பைஜாலும் எழுப்பினார்.
மோடி அரசு கடந்த நான்காண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்காக ரூ,4,343 கோடி செலவிட்டுள்ளது. மாநில அரசை குற்றம்சொல்ல ஆளுநர் இருப்பதுபோல், மத்திய அரசை குற்றம் சொல்ல யாராவது இருந்து, மோடி அரசின் விளம்பரங்கள் மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானால் யார் அந்தத் தொகையைச் செலுத்துவது?
இதேபோல, மத்திய அரசிடம் இணங்கிப் போகாத மம்தா அரசை மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப்தன்கர் பல்வேறு இக்கட்டுகளுக்கு உள்ளாக்கிவந்தார். ஆளுநருடனான மோதலில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநரின் பொறுப்பை முதல்வரே வகிப்பார் என மேற்குவங்க சட்டசபை மசோதா நிறைவேற்றியது. ஜக்தீப் துணைகுடியரசுத் தலைவரான நிலையில், சி.வி.ஆனந்தபோஸ் புதிய ஆளுநராக வந்தார். இப்போதும் மோதல் தொடர, இவ்வாண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தை ஆளுநரின் உரையில்லாமலே நடத்தியுள்ளார் மம்தா.
தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் முட்டல் மோதல் நிலையே நிலவி வருகிறது. 2021-ல் ஆளுநர் உரையின்போது மாநில அரசு அங்கீகரிக்காத சில பத்திகளை எழுதி வாசித்தது, மாநில அரசு சட்டசபைப் பொறுப்பில் நியமித்த கௌசிக்ரெட்டியை அங்கீகரிக்காதது என இந்தப் பிளவு விரிவடைந்துகொண்டே வருகிறது.
கேரளாவிலும் ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் தகிக்கும் விஷயமாகவே நீடித்துவருகிறது. 9 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வில்லை, அவர்கள் பதவி விலகவேண்டும் என அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஆளுநர் ஆரிப் முகமதுகான். கேரளா, போதைப் பொருள் தலைநகரம் என ஆளுநரே விமர்சித்தார். “முடிந்தால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து என்னைத் தாக்குங்கள்” என சவால்விட்டார். தொடர்ந்த கருத்துவேறுபாடுகளையடுத்து ஆளும் கட்சி கூட்டணி, மாநில ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது.
பிற மாநிலங்களைப் போலவே ஆளுநர்களின் அதிகாரப்போக்கால் தமிழ்நாடும் தொடர்ந்து இக்கட்டைச் சந்தித்துவருகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகலாந்து ஆளுநராக இருந்த ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாகலாந்து ஆயுதக் குழுக்களிடம் பேச்சுவார்த்தை யில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக எழுந்த சர்ச்சையால்தான் அவர் அங்கிருந்து தமிழகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டதாக பேச்செழுந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கேயும் தனது பேச்சால் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிவரும் ஆளுநர் ரவி, டெல்லியிலுள்ள லோதி சாலைப் பள்ளியில் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தபின், அற இலக்கியமான திருக்குறளை ஆன்மிக இலக்கியம் என்றும், திருவள்ளுவர் ஒரு பழுத்த ஆன்மிகவாதி எனவும் புகழ்கிற சாக்கில் வள்ளுவரை காவிச்சாயத்தில் முக்கி எடுத்ததோடு, "ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள், ஆன்மா இல்லாத சடலம்' என சர்ச்சையாகப் பேசி தமிழர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்.
சென்னை கிண்டியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வில், தமிழ்நாடு என்று கூறுவதைவிட தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்குமென ஒரு சரவெடியைக் கொளுத்திப்போட்டார். அத்துடன், தமிழர்கள் திராவிடர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு திசையில் சென்றால், தமிழகம் வேறு திசையில் செல்வதாக விமர்சித்தார்.
ஆட்டு மந்தைகள் மட்டுமே ஒரே திசையில் செல்லக்கூடியவை. மனிதர்கள் நாலாவிதமாகப் பேசவும் சிந்திக்கவும்கூடியவர்கள். விதவிதமாக சிந்திப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்? தவிரவும், ஒற்றுமை என்பது வேறு,… மந்தைத்தனம் என்பது வேறு. தமிழர்களும், தமிழக அரசும் இந்திய ஒற்றுமைக்கோ தேசநலனுக்கோ எப்போதும் இடைஞ்சல் செய்ததில்லை. ஆளுநர் எதிர்பார்ப்பது மத்திய அரசிடம், இந்துத்துவ கொள்கைகளிடம் தமிழக அரசு சரணாகதி அடையவேண்டுமென்ற எதிர்பார்ப்பு. அது நிகழவில்லை என்பதே அவரது ஆத்திரத்துக்குக் காரணம்.
தவிரவும், தமிழ்நாடு என்னும் பெயர், காங்கிரஸ் தொண்டர் சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்தில் வந்த பெயர். எட்டாண்டு காலம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நிறைவேற்றி தோல்வியுற்று நீண்ட போராட்டத் துக்குப் பின் 1967-ல், அறிஞர் அண்ணா ஆட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்ட பெயர். தமிழ்நாடு என்று சொல்வதில் யாருக்கு எங்கே வலிக்கிறது? மக்களுக்கு எங்கேயும் வலித்ததாகத் தெரியவில்லை. இந்துத்துவா அமைப்புகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் வலித்தால், அதற்காகத் தமிழர்கள் தலைவலித் தைலம் தேய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலையில்தான், புத்தாண்டில் சட்டப்பேரவை உரையில் ஆளுநர் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். அந்த உரை முன்கூட்டியே ஆளுநரின் மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்ட உரை. அதை அப்படியே வாசிப்பதில் என்ன பிரச்சனை? சரி, சில பகுதிகளை விட்டது மட்டுமில்லாமல், சொந்தமாக சில வாக்கியங்களைச் சேர்த்தும் வாசித்தார். அப்போதும் யாரும் அவரை விமர்சனம் செய்யவில்லை. உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் வாசிக்காமல்விட்ட பகுதிகளையும் சேர்த்து அவைக்குறிப்பில் ஏற்றவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுகிறார். அது ஏன் ஆளுநரை ஆத்திரம்கொள்ளச் செய்கிறது?
அந்த உரையிலிருந்த வாசகங்கள் சட்டவிரோதமானவையா? “தமிழக அரசின் அடித்தளமாக சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம் ஆகிய கொள்கைகள் அமைந்துள்ளன” என்பதும், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் அரசு” போன்ற வார்த்தைகளும் ஏன் ஆளுநரைத் தொந்தரவூட்டவேண்டும்? கட்சிகளைக் கடந்தவராக இருக்கவேண்டிய ஆளுநர் ஏன் தன்னை நியமித்த மத்திய அரசுக்கு விசுவாசமானவராக திகழ நினைக்கிறார்?
-போன்ற பல கேள்விகளை ஆளுநரின் சட்டசபை வெளிநடப்பு விவகாரம் எழுப்பி யுள்ளது.
நடப்பது ஜனநாயக அரசு. ஆளுநரே, நீங்கள் செய்யும் ஜனநாயகச் சீரழிவுகள் அனைத் தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!