தேர்தல் நடந்து முடிந்த பிறகும், வேட்பாளர்கள் குறித்தும், அவர்களுடைய செயல்பாடுகள் குறித்தும், பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும், கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், அவர்களுடைய தொகுதி வாக்காளர்களுக்குக் கொடுத்த பணம் முறையாகச் சென்று சேரவில்லை என்று உளவுத்துறை சேகரித்த தகவல்களை முதல்வரிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தானே மேற்கு தொகுதிக்கான செலவையும் பார்த்துக்கொள்வதாக கூறி இருக்கிறார். ஆனால் கிழக்கு தொகுதிக்கும், மேற்கு தொகுதிக்கும் வாக்காளர்களுக்குப் பணம் சென்று சேரவில்லை என்ற உளவுத்துறை அறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தொடர்புகொண்ட முதலமைச்சர், சற்றுக் கடுமையாகப் பேசியுள்ளார். இந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லையெனில் டெபாசிட் வாங்குவது கூட சிரமம் என்பதை அறிந்துகொண்ட முதலமைச்சர், அடுத்த நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து காவல்துறையின் எஸ்.பி. சி.ஐ.டி. டீமை வைத்து திருச்சிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்பிறகு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு 300 ரூபாய் வீதம் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொகுதியில் பூத் கமிட்டிக்குக் கொடுக்கவேண்டிய பணம்கூட கொடுக்கப்படாத நிலையில், காவல்துறை டீம் கொண்டு வந்து கொடுத்த பணத்தில்தான் பூத் கமிட்டிக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கரிடமிருந்து முசிறி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராஜுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டபோது, காவல்துறைதான் முழுமையாக உதவி செய்துள்ளது. அதேபோல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், மேற்கு தொகுதி வேட்பாளர் பத்மநாபனுக்கும், சென்னையிலிருந்து செலவுக்கான பணத்தைக் கொண்டு வந்ததும் அதே போன்ற ஒரு காவல்துறை குழுதான்.
இப்படி தமிழகத்தின் பல தொகுதிகளிலும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பான எல்லாப் பணிகளையும் போலீசே கவனித்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், முன்னாள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையிலான காவல்துறைக் குழு, தமிழகம் முழுவதும் சேகரித்தது.
குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் தற்போது பணியில் இருக்கக்கூடிய இரண்டாம் நிலைக் காவலர் நிலையில் ஆரம்பித்து... இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. என தங்களுக்குத் தோதானவர்களை மட்டுமே இந்தத் தேர்தலில் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் கூடுதலான நிதியை ஒதுக்கி, வெற்றிபெறத் தேவையான எல்லாப் பணிகளையும் இந்த காவல்துறை முழுமூச்சாக செய்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள வேட் பாளர்களுக்கு இந்த காவல்துறை டீம்தான் தங்களுடைய சொந்த வாகனங்களி லேயே பணத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். அவர்கள்தான் ஒவ்வொரு தொகுதியின் நிலை குறித்தும் அந்த தொகுதியில் உள்ள பின்னடைவு, அந்த தொகுதியில் வெற்றிபெறச் செய்வதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை முதலமைச்சருக்குத் தந்துள்ளனர்.
மேலும் சத்தியமூர்த்தி மற்றும் அவரது தலைமையிலான ஒரு குழு, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் களத்தில் நின்று அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புகள் எத்தனை தொகுதிகளில் உள்ளது என்ற சர்வேயை எடுத்து, 130-லிருந்து 140 தொகுதிகள் வரை அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று முதலமைச்சருக்கு ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் நம்பகத்தன்மை குறித்து கோட்டையில் சந்தேகம் இருந்தாலும், ஆளுந்தரப்புக்கு ஆறுதல் தருவதாக உள்ளது இந்த பாசிட்டிவ் ரிப்போர்ட்.