"பிரதமர் நரேந்திர மோடி யார் மீது தனது இடது கையை வைக்கிறாரோ அவர்களுக்கு கஷ்டகாலம்தான் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை. ஜெயலலிதா மரணத்தின்போது தனது இடது கையை சசிகலா மீது வைத்தார். அவர் சிறைக்குப் போனார். அதே இடது கையை ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நரேந்திர மோடி வைத்தார். அதில் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது'' என்கிறார்கள் அதிமுகவினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ministers-raid.jpg)
குட்கா ஊழலின் சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் விஜயபாஸ்கர், அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க அடிக்கடி டெல்லி சென்று வந்தார். சுகாதாரத்துறையில் மேலும் பல ஊழல் புகார்கள் கிளம்பின. தனது பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்று வந்த விஜயபாஸ்கர் பிரதமரின் பார்வையில் பட்டுவிட, முழு டீடெய்லையும் விசாரித்து வாங்கி விட்டார் பிரதமர். அதன் எதிரொலியாகத்தான் விஜய பாஸ்கரை ஒரு விழாவில் சந்தித்தபோது இடது கையால் ஆசிர்வாதம் செய்தார்.
அதுபோல மோடியின் ஹிட் லிஸ்டில் ஏகப்பட்ட மந்திரிகள் சிக்கியிருக்கிறார்கள். போக்குவரத்துத்துறையில் 750 பஸ்களின் சேஸ்களை வாங்காமலேயே வாங்கியதாக போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர் போலி கணக்கு காட்டி மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். மதுரை அன்பு என்கிற சினிமா பைனான்ஸியர் மூலம் கோடம்பாக்கம் சினிமாத் துறையையே ஆட்டிப் படைத்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். விஞ்ஞானி செல்லூர் ராஜுவும்கூட இந்த லிஸ்டில் தப்பவில்லை.
இவர்களையெல்லாம்விட மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருப்பவர் ஒரு முக்கிய அதிமுக விஐபி. இவரது மகன் தொடர்பான பாலியல் வழக்கு சிபிஐயின் விசாரணையில் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தும் அளவுக்கான விவகாரம் இது என்கிறது டெல்லித் தரப்பு. இதுபற்றி எடப்பாடியிடம் பேசி அவரை டம்மியாக்குங்கள், எந்த நேரத்திலும் அவரது மகன்மீது சிபிஐ பாயக்கூடும் என மத்திய உள்துறை எச்சரித்தது. அதற்கு பதிலளித்த மாநில அரசு, இந்த விவகாரத்தில் அவரது மகன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். தமிழக போலீஸ் இந்த வழக்கை விசாரணை செய்தால் அந்த விஐபி எங்களுக்கு மகனை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கு மாறு தொல்லைகொடுப்பார். அதனால்தான் சிபிஐக்கு காமக் கொடூர வழக்கை நாங்கள் மாற்றினோம் என பதில் சொன்னார்கள்.
மத்திய அரசு இவ்வாறு கேள்வி கேட்பதும், அந்த வி.ஐ.பி.யை பொள்ளாச்சியில் இருந்து மாற்றி திருப்பூர், காங்கேயம் பகுதிகளை கவனித்துக்கொள் ளும் கட்சிப் பொறுப்பு தரப்பட்டது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரிசாவைச் சேர்ந்த பரணி எர்த் மூவர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தும் பிரபாகரன். இவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு நிறைய நிதி கொடுத்து அந்த அமைப்புடன் பல்லாண்டு காலமாக தொடர்பை வளர்த்து வருபவர் பிரபாகரன்.
இந்த பிரபாகரனைப் பிடித்துதான் அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்கும்- பாஜகவிற்கும் நட்பு பாலம் அமைத்தார்கள். இந்த பிரபாகரன் ஜக்கி வாசுதேவுக்கும் நெருக்கமான நண்பர். இவர் மூலமாக பியூஷ் கோயல், அமித்ஷா ஆகியோரை தங்கமணியும், வேலுமணியும் எளிதாக சந்தித்து வருவார்கள். எடப்பாடி தனது டெல்லித் தொடர்புகளை இந்த இருவர் மூலம்தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
சமீபத்தில் எடப்பாடி டெல்லியுடன், பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா மூலம் தொடர்புகளை ஏற்டுத்திக்கொண்டார். அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதேபோல் வேலூர் அமைச்சர் வீரமணியையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இவையெல்லாம் எடப்பாடி தங்கமணி, வேலுமணியை மீறி தனது டெல்லி தொடர்புகளை வலுவாக்கிக்கொண்டதன் அடை யாளம் என்கிறார்கள் அதிமுகவைச் சார்ந்தவர்கள்.
டெல்லியைப் பொறுத்தவரை எடப்பாடி, ஓ,பன்னீர்செல்வம் ஆகிய இருவரை மட்டுமே காப்பாற்றுவார்கள். மற்றபடி தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி, போக்குவரத்து விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் என 12 பேர் மீது பாய்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.
ஊழல் கட்சி திமுக, ஊழல் கட்சி காங்கிரஸ் என தமிழகத் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நரேந்திரமோடி, தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவில் ஊழலை ஒழிப்பதன் அச்சாரமாக இந்த 12 அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையையும் பொள்ளாச்சி வி.ஐ.பி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏவுவதற்கு முயற்சிக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மீது பாய்ந்தது போல், வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் அதிமுக அமைச்சர்கள் மீது டெல்லி பாய இருக்கிறது என்கிற பதட்டம் அதிமுக வட்டாரங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/ministers-raid-t.jpg)