"ராஜினாமா' என ஓ.பி.எஸ். உருவாக்கிய புயல் அ.தி.மு.க. வட்டாரங்களில் அதிவேகமாக பெருமளவில் மழைபொழிய வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மழை கேரளாவில் ஏற்பட்டதுபோல் பெரிய சேதாரங்களை உருவாக்குமா? என்பதுதான் இன்று எங்கள் கட்சியில் உருவாகியிருக்கும் கேள்வி என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க.வின் செயற்குழுவில் பேசிய ஓ.பி.எஸ்., பா.ஜ.க., எதிர்ப்பை முதலில் தூக்கிப் பிடித்தார். ""நிர்மலா சீதாராமன் என்னைப் பார்க்காமல் அவமானப்படுத்தினார். அவர், என் தம்பியின் மருத்துவத்திற்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவிக்க அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க.வை அவமானப்படுத்தினார்.

eps-opsவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அதற்காக கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும். நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் வலியுறுத்தியதால்தான் துணைமுதல்வர் பதவியை ஏற்றேன். கட்சி வேலை செய்வதற்கு இந்தப் பதவி தடையாக இருக்குமானால், நான் இதை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் உள்ள மூத்த அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப்பணியாற்றி அ.தி.மு.க.வை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என ஓ.பி.எஸ். பேசிய பேச்சில் அனல் பறந்தது.

ஓ.பி.எஸ்.ஸுக்கு முன்பு பேசிய கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் ஓ.பி.எஸ்.ஸை விட காட்டமாக பா.ஜ.க.வை விமர்சித்தார்கள். ""மத்திய பா.ஜ.க. அரசு ஆட்டுவிக்கும் பொம்மையாக மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என பொதுமக்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டிருக்கிறது'' என்றார்கள்.

Advertisment

செயற்குழுவில் எழுந்த பா.ஜ.க. எதிர்ப்புபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரான பொன்னையன், ""தாழ்த்தப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கௌரவமாக நடத்தவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பலம் இல்லை. அதனால்தான் அ.தி.மு.க. செயற்குழுவில் பா.ஜ.க.விற்கு எதிராகப் பேசியபோது அதை, அ.தி.மு.க. தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றார்கள்'' என்கிறார்.

ponnaiyanஇதற்குப் பதிலளித்த இ.பி.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ""தமிழக அரசு ஜெ. வழியில் செயல்படுகிறது. மத்திய அரசு செய்யும் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. தேவையில்லாதவற்றை எதிர்க்கிறோம்'' என்று செயற்குழுவில் பதிலளித்தார். அதற்கு செயற்குழுவில் பெரிய ஆதரவு இல்லை. அ.தி.மு.க. செயற்குழு முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பில் ஓங்கி நின்றது. தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. ஜெ. பாணியில் தனித்துப் போட்டிதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து என்கிறார்கள் செயற்குழுவில் கலந்துகொண்டவர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைவர்கள், ""ஓ.பி.எஸ்., எடப்பாடி, வைத்தியலிங்கம் உட்பட ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே பா.ஜ.க.வின் நெருங்கிய தொடர்பில் இருந்தது. சமீபகாலமாக பா.ஜ.க., அ.தி.மு.க.விடமிருந்து தனது தொடர்புகளை தள்ளி வைத்துக்கொண்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் அ.தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் பேசிவருகிறது. அதில் தி.மு.க.வும் அடக்கம் என்பது அ.தி.மு.க.வினரை பா.ஜ.க.விற்கு எதிராகத் திருப்பிவிட்டிருக்கிறது. அதனால்தான் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களான கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் பா.ஜ.க.விற்கு எதிராகப் பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸும் டெல்லியில் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தால் பா.ஜ.க. எதிர்ப்பை ஆமோதிக்கிறார். ஆனால் முதல்வராக உள்ள எடப்பாடியால் பா.ஜ.க. எதிர்ப்பை வெளிப்படையாக காட்ட முடியவில்லை. அவர் சமாளிக்கிறார். எடப்பாடியின் இந்த பலவீனத்தை வைத்து அவர்மீது தாக்குதல் தொடுக்கும் விதமாகத்தான் ராஜினாமா என்கிற அஸ்திரத்தை ஓ.பி.எஸ்., ஏவினார்'' என்கிறார்கள்.

Advertisment

kpmunusamy

""ஓ.பி.எஸ்.ஸின் இந்த அஸ்திரம் எடப்பாடியை ஒன்றும் செய்துவிடாது. இதுபோல பேசினால் எடப்பாடி பணிந்து ஓ.பி.எஸ்.ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என ஓ.பி.எஸ். தரப்பு எதிர்பார்க்கிறது. மத்திய அரசுடன் மிகமிக இணக்கமான நடைமுறையில் இருக்கும் இ.பி.எஸ்., பா.ஜ.க. கேட்கும் அனைத்து உதவிகளையும் தவணை தவறாமல் செய்துவிடுகிறார். அத்துடன் கட்சியில் உள்ள அனைவருக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிடுகிறார். செயற்குழுவில் கட்சிக்காரர்களை, மந்திரிகள் மதிப்பதில்லை என புகார் தெரிவித்த எம்.எல்.ஏ.க்களான தோப்பு வெங்கடாசலம், எஸ்.டி.கே.ஜக்கையன், ராஜன் செல்லப்பா ஆகியோரை தனியே அழைத்து "வாரத்தில் இரண்டு நாட்கள் என்னை நீங்கள் சந்திக்கலாம்' என நேரம் கொடுத்துவிட்டார். இப்படி எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்காரர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு என எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வதால் இ.பி.எஸ். கொடி பறக்கிறது'' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

vaidyanlingamசெயற்குழு முடிந்ததும் தமிழகம் முழுவதும் நடத்தப்படாமலிருந்த கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடந்தன. அதில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளுக்கிடையே மோதல் நடந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியில் அ.தி.மு.க. பகுதிச் செயலாளரும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வி.கே.பாபுவை, இ.பி.எஸ். ஆதரவு மா.செ. தி.நகர் சத்யாவின் அடியாட்கள் தாக்கினர். அதேபோல் மதுசூதனனின் தீவிர ஆதரவாளரான தேசப்பன் என்பவரை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் கத்தியால் வெட்டினர். உடனே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் சேர்ந்து அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் தேர்தலில் நடைபெற்ற மோதல்களை பஞ்சாயத்துப்பேசி முடித்தார்கள்.

அரசு விழாக்களில் ஒன்றாகப் பேசினாலும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதல் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. இதற்கிடையே டி.டி.வி. தினகரன், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்த வழக்குகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் எங்குபோய் முடியுமோ என கவலையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்