"ஹலோ தலைவரே, சர்ச்சைக் குரிய போலி சாமியார் நித்யானந்தா சைடில் மயான அமைதி நிலவுது.''

"ஆமாம்பா, நித்தியின் பிரதான சிஷ்யை ரஞ்சிதா, இந்த நிலையிலும் அரக்கப் பரக்க பெங்களூரு வந்துட்டுப் போயிருக்காரே?''

oo

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, நித்தி மற்றும் அவரது பிரதான சிஷ்யையான ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுகள் காலாவதி ஆகிவிட்டதாம். இந்த நிலையில் ரஞ்சிதா, தன் ஆசிரமப் பெயரான மா நித்யானந்தமயி என்ற பெயரில் எடுத்திருந்த பாஸ்போர்ட் மூலம் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு ரகசியமாக வந்தாராம். அங்கே நித்தியின் சொத்து விபரங்கள், வங்கிக் கணக்குகள் என எல்லா விபரங்களை யும், அதற்கான ஆவணங்களையும் சேகரிச்சிக்கிட்டுப் போயிருக் காராம். காரணம் நித்தியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்குதாம். தினம் தினம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எதையாவது பதிவிடுவார் நித்தி. அது கடந்த ஒருவாரமாக சைலண்ட் ஆகிவிட்டது. இந்த சூழலில் நித்தி, தான் மரணமடைந்தால், தனது உடலை திருவண்ணாமலைக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்யவேண்டும்னு சொன்னதாகவும் சொல்கிறார்கள்.''”

"அவருக்கு ஏற்பட்டிருப்பது இன்பியலால் நேர்ந்த துயரம். அது இருக்கட்டும்பா, பா.ஜ.க. வுக்கு எதிராக மாஜி மந்திரி பொன்னையன் மூலம் அ.தி.மு.க. தரப்பு பற்ற வைத்த நெருப்பு சட்டென்று அடங்கிடுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. மாஜி மந்திரியான பொன்னையன், மோடி தமிழகம் வந்து சென்ற சூடு ஆறுவதற்கு முன்பே, பா.ஜ.க. இங்கே வளர்வது அ.தி.மு.க.வுக்கு நல்லதல்ல என்றும், அக்கட்சியோடு கூட்டணி வைத்ததால் தான் அ.தி.மு.க. தோற்றது என்றும், அது தமிழர்களுக்கு எதிரான கட்சி என்றும் விமர்சனத்தைத் தாறுமாறாக வைத்தார். இதைத் தொடர்ந்து மற்றொரு மாஜி மந்திரியான செல்லூர் ராஜுவும், பா.ஜ.வைக் காக்கைக் கூட்டம்னு விமர்சித்தார். கூட்டணியில் வெளிப்பட்ட இந்தக் கலகக் குரலைக் கண்டதும் பா.ஜ.க. தரப்பில் இருந்து வி.பி.துரைசாமி பதிலடியைக் கொடுக்க, பிறகு ஆளாளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து அ.தி.மு.க.வை வறுத்தெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.''”

dd

Advertisment

"ஆனால், பொன்னையனை இப்படி பேசச் சொன்னதே ஓ.பி.எஸ்.சும் எடப்பாடியும்தான்னு அவங்க தரப்பிலேயே பேச்சு இருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஆட்சியில் இல்லாத நிலையிலும் பா.ஜ.க., அ.தி.மு.க. விடம் ஏதாவது ஒரு சாக்கில் கப்பத்தை வசூலிச்சிக்கிட்டே இருக்குதாம். குறிப்பா, இப்ப மோடி தமிழகம் வந்தபோதுகூட அவரை வரவேற்கும் செலவுக்காக, 100 சி’யை மாஜி அ.தி.மு.க. மந்திரி வேலுமணி மூலம் பா.ஜ.க. கலெக்ட் பண்ணியிருக்கு. அந்த மகிழ்ச்சியில்தான், தன்னை வரவேற்க ஏர்போர்ட் வந்த வேலுமணி யைப் பார்த்ததும் மோடி, அவர் தோளைத் தட்டிக்கொடுத்தாராம். இப்படிப்பட்ட பா.ஜ.க.வின் வசூல் மீதான எரிச்சலைத்தான் பொன்னையன் மூலம், ஓ.பி.எஸ்.சும் எடப்பாடி யும் வெளிப்படுத்த வச்சி, எதிர்த்தரப்பை ஆழம் பார்த்தாங்களாம். அதற்குத் தங்கள் தரப்பிலிருந்து காரசாரமாக பா.ஜ.க. பதிலடி கொடுத்ததோடு, ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடியிடம், உங்கள் பழைய குளறுபடி ஃபைல்களை எல்லாம் நாங்கள் திறக்கணுமா? நீங்க கம்பி எண்ண ஆசைப்படறீங் களா?ன்னு கோபமாகக் கேட்டிருக்கு டெல்லி. இதனால் மிரண்டுபோன அவர்கள், பொன்னையன் சொன்னது அவர் சொந்தக் கருத்து. அ.தி.மு.க.வுக்கும் அதற்கும் சம்பந்த மில்லைன்னு பொன்னையனைப் பலிகடா ஆக்கிட்டாங்களாம்.''”

"அ.தி.மு.க. பொதுக்குழு கூடப் போகுதே?''”

aa

"ஆமாங்க தலைவரே, வரும் 23-ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுது. இதில் பரபரப்பான நியமனமோ அறிவிப்போ இருக்காதுன்னு சொல்லப் படுது. கட்சியின் அவைத்தலைவராக பொன்னை யன் அல்லது ஜெயக்குமார் உட்கார வைக்கப் படலாம்கிற பேச்சு, போன வாரம்வரை இருந்தது. ஆனால், தற்போது அவைத்தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கினால், கட்சியில் இருக்கும் இஸ்லாமியத் தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாக நேரும்ன்னு எடப்பாடி பயப்படறாராம். அதனால் தமிழ்மகன் உசேனே அந்தப் பதவியில் தொடருவார் என்கிறார்கள். அதேபோல் பொதுக்குழுவில் ஒருவர் காலை ஒருவர் வாரத் திட்டமிட்டிருந்த ஓ.பி.எஸ்.சும் எடப்பாடியும், தங்கள் இருவருக்கும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் சைலண்டாக ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளத் தீர்மானிச் சிருக்காங்களாம்.''”

"அ.தி.மு.க. விரைவில் என் கட்டுப்பாட்டுக் குள் வரும்னு திண்டிவனத்தில் சசிகலா பேசி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் பாதிபேருக்கு மேல், சசிகலா தரப்புடன் நெருக்கமாகப் பேசி வருவதாக, அவர் தரப்பே சொல்லிவருகிறது. அவர்கள், நடராஜனின் சகோதரர்களான ராமச்சந்திரன், பழனிவேலு ஆகியோர் மூலம்தான் சசியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம். அதேபோல் அண்மையில் தனது சகோதரரான திவாகரன் வீட்டிற்கு சசிகலா சென்ற போது, மன்னார்குடி சொந்தங்களில் பலரும் அங்கே வந்து அவரு டன் மனம்விட்டுப் பேசி மகிழ்ந்தனராம். இப்போது சசிக்கு அரசியல் ஆலோ சனைகளைச் சொல்லக்கூடிய இடத்திற்கு திவாகரன் மீண்டும் வந்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில்தான், அ.தி.மு.க. என் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும்ன்னு நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார் சசிகலா.''”

"தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் தரப்புக்கு, இந்த நேரம் பார்த்து கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்குதே டெல்லி?''”

ooo

"உண்மைதாங்க தலைவரே, சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, தி.மு.க. கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ப.சி. அந்த சந்தோசத்தைக் கூட அவர் தரப்பு முழுசாக் கொண்டாட முடியாதபடி, கடந்த ஒரு மாசமாவே அவர் தரப்புக்கு ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கு ஒன்றிய அரசு. ப.சி. 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது , 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்கப்பட்டதாகவும், இதற்காக அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ. ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் எல்லாம் அதிரடி ரெய்டுகளும் நடத்தப்பட்டன. இருவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.''”

"ஆமாம்பா, கார்த்தியின் ஆடிட்டரும் வலதுகரமுமான பாஸ்கர் ராமனையும் அமலாக்கத் துறை கைது செய்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, அவருக்கு திங்கட்கிழமை காலைவரை ஜாமீன் கிடைக்கலை. அதேபோல, கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. முன்பு விசாரணைக்கு ஆஜரானார். இருந்தும், தான் கைதாகலாம்னு நினைச்ச கார்த்தி, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜூன் 3-ந் தேதிவரை அவரை கைது செய்யக்கூடாதுன்னு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கும் பதிவாச்சு. இதைப்பார்த்தும் மிரண்ட கார்த்தி, முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். சி.பி.ஐ. நீதிமன்றமோ, இரண்டு வழக்கிலும் அவர் கோரிய முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் அவர் கைதுக்கு பயந்து ஒளிய ஆரம்பிச்சார். ப.சி.யும் குழம்பிப் போனார். அப்ப, சம்மன் அனுப்பா மல் கைது செய்யமாட் டார்கள். மேலே அப்பீல் பண்ணுங்கன்னு ப.சி.க்கு அவர் வழக் கறிஞர்கள் சொல்ல, அப்புறம்தான் கார்த்தியும் ப.சி.,யும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள். ஆனாலும் கார்த்தியை யும் ப.சி.யை யும் கைது செய்ய, ஒன்றிய அரசு தீவிரமாக இருக்குதுன்னு தகவல் வர, அப்பாவும் மகனும் நிம்மதி இழந்த நிலையிலேயே இருக்காங்களாம்.''”

"அடுத்த துணை ஜனாதிபதி யாருங்கிற கேள்வியும் எழுந்திருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்கிற எதிர்பார்ப்பு தேசிய அரசியலில் பலமாக எதிரொலிப்பது போலவே, புதிய துணை ஜனாதிபதி யாருங்கிற கேள்வியும் எழுந்திருக்கு. இந்தப் பதவியை காங்கிரஸிலேயே, சோனியாவுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் ஒருத்தருக்குக் கொடுக்கலாமான்னு பா.ஜ.க. யோசிக்கிது. அந்தப் பட்டியலில் இருந்த கபில்சிபில், இப்போது சமாஜ்வாடி கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகிறார். மீதம் அங்கே இருப்பவர்களில் சீனியரான குலாம்நபி ஆசாத்தை, 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ராகுல்காந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் போட்டிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், காங்கிரசை கலகலக்க வைக்க, குலாம்நபியையே துணை ஜனாதிபதியாக ஆக்கலாமா என்று பா.ஜ.க.வின் தேசிய தலைமை ஆலோசிக்கிதாம். இது தொடர்பாக குலாம்நபியிடம் மோடி பேசியதாகவும், அவர் இதற்கு இன்னும் பதில் சொல்லாமல் மதில்மேல் பூனையாக இருப்பதாகவும் டெல்லித் தகவல்கள் சொல்லுது.''”

"ம்...''”

dd

"அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், டாஸ்மாக்கில் அதிகம் தலையிடுவதாக அந்தத் தரப்பு குமுறிவருகிறது. அதனால் அமைச் சருக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் முடிவோடு, அதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுவையும் டாஸ்மாக் ஊழியர் அமைப்பு கள் அமைத்திருக்கிறது. அந்தக் குழுவினர் முதற்கட்டமாக முதல்வரை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறார்கள். அப்படி சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் போது அமைச்சருக்கு எதிரான பல விசயங்களையும் முதல்வரிடம் போட்டுடைக்கத் திட்டமிட்டி ருக்கிறார்களாம். இது தெரிந்து அமைச்சர் தரப்பும் பிரச்சினை களை அலசித் தீர்வு காண முயற்சிக்குதாம்.''”

"நாம ஏற்கனவே பேசிக் கிட்ட சட்டத்துறை சம்பந்தமான செய்தி, ‘தாறுமாறு தட்சணை -சர்ச்சையில் சட்டத்துறைங்கிற தலைப்பில் நம்ம நக்கீரனில் வெளியானது. துறை சார்பில் அதை மறுப்பதுடன், டெபுடி டைரக்டர் நியமனம் உள்பட எல்லாவற்றிலும் உரிய கவனம் செலுத்தி சரியா செய்யப்படுவதாக வும் சொல்றாங்க. அதுபோல, பா.ஜ.க.வில் சேர்வதற்காக புதுச்சேரி கவர்னர் போஸ்ட் தரணும்னு முன்னாள் அமைச் சர் சம்பத் பேரம் பேசுவதா வெளியான கட்டுரையையும் அவர் தரப்பில் முழுமையா மறுக்குறாங்க. அவங்க மறுப்பை பதிவு பண்ணிடு றேன்.''’

_________________________

இறுதிச் சுற்று

புதுத் திட்டம்!

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையும் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்கள். அந்த சந்திப்பின்போது, ’டெஸ்லா நிறுவனத்தின் முதலாளி எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 42,000 சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் நிறுவ திட்டமிட்டிருக்கிறார். ஆனால், "அதை விட அதிகமாகவும் விரைவாகவும் செயற்கை கோள்களை குலசேகரப்பட்டணத்தில் உருவாக்க முடியும். இதை தமிழக அரசு கையில் எடுக்கலாம்'”என்று விரிவாக விளக்கியிருக்கிறார் மயில்சாமி. இதைக் கேட்டுக்கொண்ட கனிமொழி, "இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறேன்' என்றாராம்.

-இளையர்