மா.செ.க்கள் நியமனம்! கழகங்களில் கலகம்! சூதாட்ட ஹீரோவை காப்பாற்றிய முதல்வர் அலுவலகம்!
""ஹலோ தலைவரே, மத்திய அரசு கொண்டுவரும் சுற்றுச் சூழலியல் தாக்க மதிப்பீட்டு விதிகள்-2020 (C.H.G)-ங்கிற சட்ட வரைவு, பல தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''
""ஆமாம்பா. இனி, சுற்றுச் சூழல் சார்பான அரசின் எந்த நடவடிக்கைக்கும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லைன்னும், பொது ஆலோசனைகளுக்கு இனி காது கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லைன்னும் இந்த சட்ட வரைவு சொல்லுது. இது மக்களின் உரிமையைப் பறிக்கும் அபாயகரமான பிரச்சினை என்பதால், அரசியல் கட்சியினர், இயற்கை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, திரைத்துறையினரும் இதுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாங்களே?''
""உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற விவகாரங்கள்ல விவசாயிகளும் பொதுமக்களும் பட்ட பாடு போதாதா? அதனால்தான் இப்ப இந்த ஆபத்தான சட்டவரைவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கு. உழவன் பவுண்டேசன் நிறுவனரான நடிகர் கார்த்தி, நம்முடைய சுற்றுச் சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கூட, மக்களாகிய நாம் பேசவே முடியாதுன்னா, இது எந்த வகையில் நியாயமான சட்டமாக இருக்கும்னு கேள்வி எழுப்பியிருக்கார். அதேபோல் அவரது அண்ணன் நடிகர் சூர்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பேசிய வார்த்தைகளைவிட, பேசாத மௌனம் ஆபத்தானது. "காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க...'-ன்னு அதிரடியா பதிவு செய்திருக்கார். இது பா.ஜ.க. தரப்பை கதற வச்சிருக்கு. சமூக வலைத் தளங்களில் இருவரையும் கடுமையா விமர்சிக்கிறாங்க. இந்த சட்ட வரைவை விமர்சித்து யுடியூப்பில் பேசிய சென்னை தமிழச்சியின் பதிவைக் கூட, பாசிஸவாதிகள் அனுமதிக்கலை.''
""சுற்றுச் சூழலுக்கு எதிரா செயல்படும் நபர்களுக்குத்தானே, மோடி அரசு கௌரவத்தைத் தருது? அப்படின்னா சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நினைக்கிறவங்க மேலே கடுப்புதானே ஆவாங்க.''
""சரியா சொன்னீங்க தலைவரே... ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை ஐ.நா.சபையின் சுற்றுசூழல் பேரவையின் உறுப்பினராக இப்ப அறிவிச்சிருக்கு மோடி அரசு. இது சர்வதேச சுற்று சூழல் ஆர்வலர்கள்வரை அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கு. யானைகளின் வலசைப் பாதையோடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்தவர் ஜக்கி. காவிரி அழைக்கிறது என்ற பெயரில், மரம் வளர்க்க பெரும் நிதி வசூலிலும் ஜக்கி இறங்க, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் அவர் ஆளாகியிருக்கார். இப்படி சுற்றுச்சூழல் சேர்ந்த பல்வேறு குற்றச்சாட்டை சுமந்துகொண்டிருக்கும் ஜக்கிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவை பதவியான்னு எதிர்ப்புக் குரல்கள் கேட்குது.''
""அ.தி.மு.க. புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் குறித்தும் அதிருப்தி குரல்கள் கேட்குதே?''
""அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ.ன்னு இது வரை 31 புதிய மா.செ.க்கள் நியமனம் செய்யப் பட்டிருப்பது தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஹாட்டாவே இருக்குது. தனது மாவட்டத்தை உடைக்கக் கூடாதுன்னு வலியுறுத்தி வந்த திண்டுக்கல் சீனிவாசன், ஒரு வேளை மாவட்டத்தைப் பிரித்தால், திண்டுக்கல் மேற்கு மா.செ.வாக தன்னையும், கிழக்கு மா.செ.வாக மருதராஜையும் நிய மிக்கனும்ங்கிற நிபந்தனையையும் விதிச்சிருந்தார்.''
""ஆமாம்பா, எந்த சூழல்லயும் மாஜி மந்திரி நத்தம் விஸ்வநாதனுக்கு பதவியைக் கொடுத்துடக் கூடாது என்பதுதானே, சீனிவாசனின் கோரிக்கை?''
""ஆமாங்க தலைவரே, ஆனால் நத்தம் விசுவநாதனோ கரன்ஸியை வைத்து மேஜிக் செய்து பதவியை வாங்கிட்டார்னு அவங்க மாவட்டத்து ர.ர.க்களே சொல்றாங்க. திண்டுக்கல்லை இரண்டாக உடைத்த அ.தி.மு.க. தலைமை, மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் திண்டுகல் சீனிவாசனையும், கிழக்கு மாவட்டத்துக்கு நத்தத்தையும் மா.செ.வா அறிவிச்சிடுச்சி. எரிச்சலான சீனிவாசன், தலைமைமீது கடும் கோபத்தில் இருக்கார். சமீபத்தில் வனத்துறை பற்றிய சில புகார்கள் குறித்து சீனிவாசனிடம் விவாதிக்க நினைச்ச எடப்பாடி, அவரைப் பலமுறை தொடர்புகொண்டும், அட்டெண்ட் பண்ண மறுத்திட்டாராம் திண்டுக்கல்.''
""அமைச்சர்கள் பலரின் மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் முழு பவரும் அவங்க கையிலேயே இருக்குதாமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தேர்தலைக் காரணம் காட்டி, அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்த அ.தி.மு.க. தலைமை, புதிய மா.செ.க்களை நியமிச்சாலும், அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர், தங்கமணியின் நாமக்கல், வேலுமணியின் கோவை, சி.வி.சண்முகத்தின் விழுப்புரம், விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைப் பிரிக்காமல் விட்டுவிட்டது. இதேபோல் முதல்வர் எடப்பாடி மா.செ.வாக இருக்கும் சேலம் புறநகர் மாவட்டத்தையும் எடப்பாடி பிரிக்க விரும்பலையாம். இதைப்பார்த்த கட்சிப் பிரமுகர்கள், இவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியான்னு பொங்கறாங்க.''
""தி.மு.க.விலும் மா.செ. நியமன விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கே?''
""தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வகித்து வந்த, சென்னை மேற்கு மா.செ. பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்கனும்னு துரைமுருகனும் தயாநிதி மாறனும் வலியுறுத்தி வந்தாங்க. இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசுவை நியமித்திருக்கிறது அறிவாலயம். சீனியர்களான பகுதிச் செயலா ளர்கள் பலர் இருக்கும் நிலையில், சிற்றரசுவை நியமிக்க உதயநிதி காட்டிய அக்கறையை மு.க.ஸ்டா லினால் மீற முடியலைன்னும் சொல்றாங்க. சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மா.செ.வால் செயல்படமுடியுமாங்கிற கேள்வியும் இருக்குது. அதனால், ஸ்டாலின்-உதயநிதி அட்வைஸ்படி சீனியர்களை சந்திக்கிறாரு புது மா.செ. சிற்றரசு. பகுதிச் செயலாளர் பதவிகளிலும் இளையவர்கள் நியமிக்கப்படலாம்னு பேச்சு அடிபடுது. மா.செ. நியமனங்கள் கழகங்களில் கலகத்தை உண்டாக்கியிருக்குது.''
""சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷாம், கைதான வேகத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்காரே?''
""இயற்கை, 12 பி, உள்ளிட்ட படங்களில் ஹீரோவா நடித்த ஷாமின் வீடு சென்னை லயோலா கல்லூரி அருகில் இருக்கு. அவர் வீட்டுக்கு நேரம் காலம் இல்லாம சந்தேகப்படும்படியாக நிறைய பேர் வந்து போறதா, காவல்துறைக்குப் புகார்கள் போயிருக்கு. இதைத் தொடர்ந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போலீஸ் டீம் அவர் வீட்டை முற்றுகையிட்டபோது, அங்கு சூதாட்டம் விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருந்திருக்கு. ஷாம் உள் ளிட்ட அத்தனை பேரையும் கைது செய்து, காவல் நிலையத்துக்குக் கொண்டுபோயிருக்காங்க.''
""ம்...''
""ஷாம் தரப்பு மேலிடங்களைத் தொடர்பு கொண்டிருக்கு. இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்திலிருந்து காவல் நிலையத்துக்கு போன் போக , நடிகர் ஷாமை ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பிவச்சிட்டாங்க. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவின் அரவணைப்பில் நடந்துவரும் சூதாட்ட விடுதிகளில் ஒன்னுதானாம் அது. சென்னை முழுக்க இதுபோல் ஏராளமான சூதாட்ட விடுதிகளும் கிளுகிளுப்பூட்டும் மசாஜ் பார்லர்களும் நடந்துக்கிட்டுதான் இருக்குதாம். சென்னையில் இருக்கும் 10 காக்கி உயரதிகாரிகளுக்கு, மாதந்தோறும் 8 முதல் 10 சி வரை இதற்கான மாமூல் போகுதாம்.''
""அப்படிப்பட்ட காவல்துறைகிட்டேயே கலெக்ஷன் நடக்குதாமே?''
""ஆமாங்க தலைவரே, போனமாசம் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான மெஹா டிரான்ஸ்பர் மேளா நடந்துச்சு. முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் மற்றும் முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோரின் சிபாரிசின் பேரில் நடந்ததாகச் சொல்லப்பட்ட அந்த டிரான்ஸ்பரில் பெரும்பாலும் முதல்வரின் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்ததா சர்சைகள் எழுந்தன. இப்ப டி.எஸ்.பி.க்களுக்கான டிரான்ஸ்பர் பட்டியல் ரெடியாகுது. இதை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தரப்புதான் தயாரிக்கு தாம். இதற்கான டீலிங்குகளும் பேரங்களும் நடந்துக்கிட்டிருக்குதாம் . இதிலும் அதே சமுதாயத்துக்கே முன்னுரிமையாம். மற்ற சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் எரிச்சலில் இருக்காங்களாம்.''
""ஜெ’வின் நினைவு இல்லமாக ஆக்கப்படும் போயஸ்கார்டன் இல்லத்தை, கொரோனா நிதி நெருக்கடிக்கு நடுவிலும், 68 கோடிக்கு எடப்பாடி அரசு விலை கொடுத்து வாங்கியிருக்கே?''’
""அதன் சட்ட சர்ச்சையை நம்ம நக்கீரனில் படிச்சேங்க தலைவரே, அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் போயஸ் தோட்ட வீட்டில் இருந்த பொருட்களைக் கணக்கெடுத்து பட்டியல் எடுத்திருக்காங்க. அதில் சசி தரப்பு எடுத்துக்கொண்டு போனது போக மிச்சமிருந்த பொருட்கள்ன்னு பார்த்தா, 4 கிலோ 372 கிராம் தங்க பொருட்கள், 14, 602 கிலோ வெள்ளிப் பொருட்கள், 36 குளிர்சாதன கருவிகள், 556 பர்னிச்சர் பொருட்கள், 11 தொலைக்காட்சிப் பெட்டிகள், 10 பிரிட்ஜ்கள்னு மொத்தம் 32,721 பொருட்கள் இருப்பதாகக் கணக்குகள் எடுக்கப்பட்டிருக்கு.''
""ஜெ. ஏதோ தவ வாழ்க்கை வாழ்ந்ததா சொன்னாங்களே.. தவ வாழ்க்கைக்கே இவ்வளவு தேவைப் பட்டிருக்குன்னா, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருந்தா?''
""தலைவரே, பீகார் சட்ட மன்றத்துக்கு நவம்பரில் தேர்தலை நடத்தியாகனும். ஆனால் கொரோ னா நெருக்கடியைக் காரணம் காட்டி, தேர்தலை தள்ளிவச்சிடலாம்னு மோடியும் அமித்ஷாவும் நினைக்கிறாங்க. இதே பாணியில் மற்ற மாநிலங்களின் தேர்தலையும் தள்ளி வைச்சிடலாம்ங்கிறது அவங்க எண்ணம். இதுக்காக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி பீகார் தலைவர்கள் பலரையும் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும்படி பா.ஜ.க.வே தூண்டியிருக்கு. ஆனால் பா.ஜ.க,.கூட்டணியில் இருக்கும் பீகார் முதல்வர் நித்திஷ்குமாரோ தேர்தலை நடத்தியே ஆகனும்ன்னு கொடி பிடிக்கிறார். அதனால் மோடிக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கு.''
""ரஜினி, அரசியலுக்கு ரெடியாயிட்டாருன்னும், அவர் இவரைச் சந்திக்கிறார், அவரைச் சந்திக்கிறாருன்னும், இன்னாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் போறாருன்னும் புதுசு புதுசா செய்திகள் வந்துக்கிட்டே இருக்கேப்பா?''
""தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள்ளே ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகளோடு, ரஜினியின் முதல்வர் வேட்பாளர்னும் புதுசு புதுசா கிளம்பியிருக்காங்களே?''“
""லேட்டஸ்ட்டா. ஐ.பி.எஸ் போஸ்ட்டை விட்டுட்டு ஆடு-மாடு-விவசாயம்னு தற்சார்புக்கு வழிகாட்டும் அண்ணாமலையை தான் தொடங்கப்போகும் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் போறாருன்னு புதுசா கிளப்பி விட்டிருக்காங்க. இப்ப ரஜினி எந்த முடிவும் எடுக்கலை. அவர் விருப்பமில்லாமலேயே அவரைச் சுற்றி பரபரப்பு செய்திகள் கும்மியடிக்குதுன்னு சொல்றாங்க.''
""கமல் நடத்தும் பாலிடிக்ஸ் பற்றி தனி கட்டுரை வந்திருக்கு. கூடுதலா ஒரு செய்தி. தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் பல்ஸ் ரேட் பத்தி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளிடம் விசாரிக்கும் அவர், வரும் தேர்த லில் அ.தி.மு.கவும் தி.மு.க.வும் யார்யாரை வேட்பாளர்களாக நிறுத்தும், அவர்களை எதிர்க்க நம்ம வேட்பாளர்களுக்கு வலிமை இருக்குதான்னு டிஸ்கஸ் பண்ணியிருக்காரு.''