திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பகுதியில் புதிய கட்டுமானங்கள் நடைபெறுகிறது. இதனை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், ராதாகிருஷ்ணன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், சௌந்தர் அமர்வில் நடைபெற்றுவருகிறது. தடைக்குப் பின்பும் கட்டுமானப் பணிகள் நடக் கின்றன என வாதி சொன்னதால் அக்டோபர் 5-ஆம் தேதி இரு நீதிபதிகளும் நேரடியாக ஆய்வு செய்யவர, அப்போது பொதுமக்கள் சார்பில் சாலையோர ஆக்ரமிப்பு கடைகளை அகற்றவும், ஆட்டோக்களை முறைப்படுத்தவும் மனு தந்துள்ள னர். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “"நகரத்துக்குள் பேருந்துகள், வெளிமாவட்ட கார்கள் அனுமதியில்லை என முடிவுசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும் போக்குவரத்து நெரிசலால் திருவண்ணாமலை தத்தளிக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் சாலையை அடைத்துக்கொண்டு இருபுறமும் தள்ளுவண்டிக் கடைகள், பங்க் கடைகள் வைத் துள்ளார்கள். இதனால் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கிறது. 

Advertisment

திருவண்ணாமலை மாநகரத்துக்குள் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. அதிலும் கோவிலை சுற்றிமட்டும் 40 ஸ்டாண்டுகள். சாலையோரம் ஆட்டோவை நிறுத்துவதற்குப் பதில் சாலை முழுவதையும் ஆக்ரமித்து நிறுத்துகிறார்கள். கேள்விகேட்டால் ரவுடித்தனம் செய்கிறார்கள் சில ஆட்டோ ஓட்டுநர்கள்'' என்கிறார்கள். 

Advertisment

அண்ணாமலையார் ஆலய கட்டிட வாடகைதாரர்கள் சங்கத் தலைவர் சம்பத்குமார் நம்மிடம், "அண்ணாமலையார் கோவிலுக்குள் ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் என இந்த மூன்றின் வழியாகச் செல்லும் பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வருகிறார்கள். உள்ளே 3 மணி நேரம், 4 மணி நேரம் இருந்துவிட்டு வெளியே வரும் பக்தர்கள் சிறுநீர் கழிக்கக்கூட வசதியில்லை. நாங்கள் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வாடகை தந்து கடைவைத்துள்ளோம். எங்கள் கடையை மறைத்தாற்போல் கடை வைக்கிறார்கள், கேள்விகேட்டால் அவ்வளவு மோசமாகப் பேசுகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் பௌர்ணமி, சனிக்கிழமை கடை போடுவார்கள், இதனால் பெரியளவில் எந்த தொந்தரவும் கிடையாது. இப்போது நிரந்தரமாகவே கடை வைத்துள்ளார் கள். சாலையோரக் கடைகளை முறைப்படுத் தச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தோம். நடவடிக்கை எடுக்கச்சொல்லி கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் வந்தது. இது மாநகராட்சி, காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டியது என பதில் சொல்கிறார்கள் கோவில் அதிகாரிகள். மாநகராட்சி யிடம் முறையிட்டால் அந்த தெருக்களில் சாலையோரக் கடைகள் வைக்க நாங்கள் அனுமதி தரவில்லை என்ப வர்கள், காலி செய்யவும் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள்... போக்குவரத்து போலீஸாரும் கண்டுகொள்வதில்லை''’என்றார். 

tmalai1

இதுகுறித்து மாநகர கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “"மாநகராட்சி சார்பில் சாலையில் மற்ற கடைக்காரர்களுக்கு தொந்தரவில்லாமல் இந்த இடத்தில்தான் தள்ளுவண்டி கடை வைக்கவேண்டு மென இடம் ஒதுக்கி அந்த இடத்தில் இன்னாருக்கு என கடை ஒதுக்கப்பட்டு, ஆர்டர் தரப்பட்டு சில்வர் பெட்டிக்கடைகளும் தரப்பட்டுள்ளன. ஆனால் அதைவிட 5 மடங்கு சாலையோரக் கடைகள் உள்ளன. அவர்கள் விரும்பிய இடத்தி லெல்லாம் கடை வைத்துள்ளார்கள். ஒரு ஆர்டர் நம்பரை வைத்து 7 பேர், 8 பேர் கடை வைத்துள் ளார்கள். அதேபோல் சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் அந்த இடத்தை இன்னொருவ ருக்கு 2 லட்சம், 3 லட்சத்துக்கு விற்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்படும் கடைக்காரர்கள், வீட்டுக்காரர்கள், கவுன்சிலர்களான எங்களிடம் முறையிடுகிறார்கள். நாங்கள் ஏதாவது கேட்டால் "மாதம் உனக்கு எவ்ளோ வேணும்னு கேளு தர் றோம், இதெல்லாம் கண்டுக்காதீங்க'ன்னு நேரடியா பேரம் பேசறாங்க. மாநகராட்சி ஆணையாளர் களிடம், மேயர் நிர்மலா தரப்பிடம் பலரும் புகார் தந்தும் இதுவரை கண்டுகொள்ள வில்லை''’என்கிறார்கள். 

Advertisment

tmalai2

இதுகுறித்து அனைத்து அமைப்புசாரா தொ.மு.ச. மாநில அமைப்புச் செயலாளர் (பிரச் சாரம்) திருவண்ணாமலை ஆறுமுகத்திடம் கேட்டபோது, “"திருவண்ணாமலை மாநகரத்தில் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தில் பதிவுசெய்து 2000 பேர் சாலையோர  வியாபாரிகளாக உள்ளார்கள். 3000 தற்காலிகக் கடைக்காரர்கள் உள்ளனர். இவர்களால் சில பிரச்சனைகள் வரும். வேலூர் சாலையில் பிரச்சனை வந்தபோது, சாலையோர வியாபாரிகளுக்கு பெயின்ட்டில் கோடு போட்டு இடமொதுக்கித் தரப்பட்டது. அதேமாதிரி மற்ற இடங்களில் 3 அடி, 5 அடிதான், அதுக்குமேல வைக்கக்கூடாது எனச் சொல்லவேண்டும். பதிவு பெறாதவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க வெட்டிங் கமிட்டி உறுப்பினர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை வைத்து இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை''’என்றார். 

சாலையோரக் கடைக்காரர்கள் போக்கு வரத்து காவல் பிரிவு, மாநகராட்சி, கோவில் அதிகாரிகளுக்கு மாதாமாதம் கப்பம்கட்டுகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினரும் போக்கு வரத்து போலீஸாருக்கு மாமுல் தருகின்றனர். இதனால் இவர்களின் அட்ராசிட்டிகளை போலீஸ் கண்டுகொள்வதில்லை. 

tmalai3

தீபத்திருவிழாவுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளன. அப்போது இன்னும் பலநூறு தற்காலிகக் கடைகள் வரும். அதற்குள் சம்பந்தப்பட்ட துறைகளை இணைத்து மாவட்ட ஆட்சியரும், அமைச்சரும் நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு, செய்வார்களா? 


படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்