தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக… பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் மறைந்தாலும், அவனது அடிப்பொடிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்துக்கு தலைவலியாக மாறியிருக்கின்றனர். போலீசாரின் என்கவுன்டருக்குப் பயந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றான் ஸ்ரீதர். வெளிநாடு சென்ற நிலையிலும் அடிப்பொடிகள் மூலம், காஞ்சிபுரத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தான். போலீசாரின் வலை இறுகிய நிலையில், கடைசியில் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டான் ஸ்ரீதர். அவன் உடல் காஞ்சிபுரத்துக்கு வந்தபோது எந்தவித ஆரவாரமோ... அட்டகாசமோ நடக்கவில்லை.
பிரச்சினை தீர்ந்ததென காஞ்சிபுரம் மக்கள் சற்று நிம்மதியாக இருந்த நிலையில்தான், ஸ்ரீதர் சாம்ராஜ்ஜியத்தை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றிய ஏ.எஸ்.பி. ஸ்ரீநாதா கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக செல்லவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்றிருந்த, ஸ்ரீதரின் வலது இடதாக விளங்கிய தினேஷ் மற்றும் தணிகா இடையே, ஸ்ரீதர் இடத்தைப் பிடிப்பது யார் என்ற மோதல் எழுந்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக தணிகாவின் வழக்கறிஞர் சிவக்குமாரை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, பிள்ளையார்கூட பள்ளிக்கூட தெருவில் வைத்து பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள் கொண்ட குழு வழிமறித்து வெட்டியது. காயத்துடன் அலறி ஓடிய சிவக்குமார் அருகேயிருந்த வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டதால் உயிர்பிழைத்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றுவருகிறார்.
சிறைக்குள் இருந்தபடியே ஸ்கெட்ச் போடும் ஸ்ரீதர் ஸ்டைல் பார்முலாவில்தான் சிவக்குமாரை போடவும் திட்டம் வகுத்திருந்திருக்கிறான் தினேஷ். சரி, சிவக்குமாரை ஏன் தினேஷ் போடவேண்டும்? கடந்த முறை காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு வாய்தாவுக்கு வந்த தினேஷை பார்த்து, “""எஸ்கார்டுலயே (போலீஸ் காவலிலே) காலிபண்ணணும்'' என்று பேச, இதைக் கேட்ட தினேஷ், தன் கூட்டாளி மணிமாறனிடம் சிவக்குமாரைத் தீர்த்துக்கட்டும் அசைன்மெண்டை ஒப்படைத்தான்.
தவிரவும், ஸ்ரீதரின் குருநாதரான சாராய வியாபாரி சக்கரவர்த்தி நாயகர் மகள்வழிப் பேரன் தணிகா. இவனிடம்தான் ஸ்ரீதர்மூலம் சம்பாதித்த சொத்துகள் உள்ளன. ஸ்ரீதர் கதையை முடிக்க காவல்துறைக்கு துப்புக்கொடுத்த ராகவேந்திரா ரியல் எஸ்டேட் அதிபர் இளங்கோவுடன் தணிகா கூட்டுச்சேர்ந்துள்ளான். சமீபத்தில் காஞ்சிபுரம் பழைய ரயில்நிலையம் வையாவூர் சாலையில் தினேஷ் காரில் வந்தபோது, நாட்டு வெடிகுண்டுவீசி கொலைமுயற்சி நடந்தது. அது தணிகாவின் முயற்சியென தினேஷ் நம்புகிறான். அதற்குப் பதிலடியாகவும் சிவக்குமாரை தீர்த்துக்கட்ட முயற்சி நடந்துள்ளது என்கிறார்கள் இருதரப்பையும் அறிந்தவர்கள்.
இது ஒருபக்கமிருக்க காஞ்சிபுரம் தி.மு.க. ஒன்றியச் செயலாளரான பி.எம். குமாரை பிரபல துணிக்கடை அதிபரும் ரவுடி ஸ்ரீதரின் நண்பருமான மகேஷ் ஷா ஆட்கள் தாக்கவந்தனர். குமார் வீட்டிலில்லாததால், வீட்டினை அடித்துநொறுக்கி மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் சமீபத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கட்சிப் பிரமுகர்கள் கதியே இப்படியிருக்க, காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகளையும், ரியல் எஸ்டேட்காரர்களையும் ஸ்ரீதர் கும்பல் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. பெயர் சொல்லவிரும்பாத வியாபாரி ஒருவர் நம்மிடம், “""முன்னயாச்சும் ஸ்ரீதருக்கு மட்டும்தான் பணம்தர வேண்டியிருக்கும். ஆனா இப்போ வசூல்ராஜா, தணிகா, தினேஷ், பொய்யாகுளம் தியாகுனு நாலு க்ரூப் பணம்கேட்டு மிரட்டுது'' என்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானியோ, ""புகார்கள் வந்தால் பாரபட்சமில்லாம கைது செய்துவருகிறோம்'' என்கிறார்.
-அரவிந்த்
_____________________________
சிறு தொழில் அதிபர்களைக் குறிவைக்கும் மாஃபியா!
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சிறு, குறு தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம்பறிக்கும் கும்பலால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இப்படி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஒன்பதுபேர் கும்பலை கத்தி மற்றும் துப்பாக்கியுடன் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். கும்பல் தலைவன் திலக்கும் மற்றவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஏராளமானவர்களை மிரட்டி பணம்பறித்தது தெரியவந்துள்ளது. கூடுவாஞ்சேரி பகுதியில் ரியல்எஸ்டேட் தொழில்செய்யும் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சஞ்சீவிநாதன் என்பவரை வேறொரு கும்பல் மிரட்டியபோது, அதற்குப் பயப்படாத அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதேபாணியில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கும்பலின் மிரட்டலால், பலர் புகார் கொடுக்கக்கூட முன்வருவதில்லை.