க்டோபர் 23-ஆம் தேதி சசிகலாவின் கணவரும் "தமிழரசி' இதழின் ஆசிரியருமான ம.நடராஜனின் 76-ஆவது பிறந்தநாள்.

சசிகலாவை பொதுச்செயலாளராக்கி அ.ம.மு.க.வை நடத்திக் கொண்டிருக்கும் டி.டி.வி. தினகரன், மறைந்த நடராஜனின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவார். தஞ்சை விளார் சாலையில் உள்ள அவரது நினைவகத்திற்குச் சென்று மரியாதை செய்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தினகரனோ, கட்சியின் நிர்வாகிகளோ, அங்கே செல்லவுமில்லை. மாலை மரியாதை செலுத்தவுமில்லை. தினகரன் மட்டுமின்றி, சசிகலா உறவினர்கள் யாருமே அங்கே செல்லவேயில்லை.

diwarakan

நடராஜன் உறவினர்கள் மட்டுமே நினைவிடம் வந்தார்கள். மலர் தூவி மாலை அணிவித்தார்கள்.

தினகரனும் தினகரன் கட்சியினரும் நடராஜனின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை, நினைக்கவுமில்லை என்ற செய்தி நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவிய பிறகு, நடராஜன் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் மலர் தூவுகின்ற ஒரு பழைய படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ஆனால் அது கடந்த ஆண்டு படமென குழந்தைகளும் அறிந்தன.

இந்த நிலையில்தான், சசிகலாவின் தம்பி திவாகரன், தனது அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடராஜனின் பிறந்தநாளைக் கொண்டாடினார். நடராஜன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கட்சி நிர்வாகிகளும், நடராஜனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் ராஜா வெங்கடேசும் கலந்து கொண்டனர்.

திவாகரன் பேசுகையில் ""தனது அரசியலுக்காக சசிகலாவைப் பயன்படுத்திக் கொள்ளும் தினகரன், நடராஜன் பெயரை திட்டமிட்டுப் புறம்தள்ளுகிறார். ஜெயலலிதாவை ராஜீவ்காந்தியிடம் அறிமுகம் செய்தவர் நடராஜன். ஜெயலலிதாவை இந்திய அரசியல் பேச வைத்தவர் நடராஜன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெ.-ஜா அணிகளை இணைத்து இரட்டை இலையை மீட்கக் காரணமானவர் நடராஜன். அவரை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரே ஜெ.யிடம் இருந்து திட்டமிட்டுப் பிரித்தனர். வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்தி ஜெ. பெயரை கெடுத்தனர். தற்போதுகூட அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க நான் சில முயற்சிகளை எடுத்தேன். ஆனால் எடப்பாடி தரப்பு ஒத்துழைக்கவில்லை. நடராஜன் படத்துக்கு நான் மாலை அணிவிப்பதற்குக் காரணம், உறவு இல்லை. அவர் திராவிட இயக்கத்திற்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றிய தொண்டுகளுக்காகவே'' நெகிழ்வோடு பேசினார் திவாகரன்.

ம.நடராஜன் இறந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. மனைவி தரப்பில் முக்கியமானவர்களுக்கு வேண்டாதவர் ஆக்கப்பட்டுவிட்டார் என்கிறது இரட்டை இலை வட்டாரம்.

-இரா.பகத்சிங்