தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சீதாராஜ், பிரேமா தம்பதியரின் நான்கரை வயது மகள் இசக்கியம்மாள், பக்கத்து வீட்டில் விளையாடச் சென்றபோது, அங்கிருந்த வாஷிங் பவுடரைத் தவறுதலாகத் தின்றிருக்கிறாள். சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் ரத்த வாந்தி எடுத்து அலறித் துடித்தவளை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அடுத்து தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள்.

cc

Advertisment

சிகிச்சையளிக்க முடியாததால், பாளை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சையளித்தும் முன்னேற்றமில்லை. 20 நாட்களாக உணவே உண்ண முடியாமல் எலும்பும்தோலுமாக உருக்குலைந்து உயிருக்குப் போராடியிருக்கிறாள்.

சிறுமியின் துயரம் குறித்து "நக்கீரன்' இதழ் மற்றும் நக்கீரன் இணையதளம் மூலம் வெளிப்படுத்தியிருந்தோம். அச்செய்தி வைரலாகப் பரவ, தமிழக அரசிடமிருந்து உதவிக்கரம் நீண்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நெல்லை கலெக்டர் விஷ்ணு மேற்பார்வையில், சிறுமி இசக்கியம்மாள் அவசர ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு ஒன்றரை மாதத் தொடர் சிகிச்சையால் மறு ஜென்மமெடுத்துத் திரும்பியிருக்கிறாள் சிறுமி.

அந்த குழந்தையைப் பார்ப்பதற்காக செங்கோட்டையிலிருந்த வீட்டிற்குச் சென்றபோது, சிறுமி பழைய உருவத்துக்குத் தேறிவந்தது கண்டு நமக்கு ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. முதல்வரின் கருணைப் பார்வையால் தங்கள் மகள் மறு ஜென்மமெடுத்ததை ஆனந்தக் கண்ணீருடன் சீதாராஜூம், பிரேமாவும் நம்மிடம் விவரித்தார்கள்.

Advertisment

"பத்திரிகை மூலமா முதல்வரய்யாவுக்குத் தகவல் தெரிஞ்சி அதிகாரிக மூலமா எங்கள குழந்தையோட சென்னைக்கு கூட்டிப் போனாக. அங்க எக்மோர்ல சிறப்பு பேபி வார்டில சேத்து இசக்கியம்மா ளுக்கு டாக்டர்கள் சிகிச்சை செஞ்சாக. முதல் ரெண்டு வாரம் எங்கள உள்ள அனுமதிக்கல. டாக்டர்களோட சிறப்பு சிகிச்சையிலிருந்தா. லேசுல சொல்ல முடியாது. பெரிய பெரிய டாக்டர்லாம் வந்து சிகிச்சை குடுத்தாக. ஆபரேசன் பண்ணதோட, பக்கத்துல வயித்துக் குள்ள ஒரு ஓட்டயப் போட்டு கொஞ்ச நாளுக்கு அது வழியா உணவு குடுத் தாக. ஆரம்பமா வயித்துல சிகிச்சை பண்ணப்ப புள்ளைக்கு தெம்பானதும், அந்த சைடு டியூப் வழியா பச்சை முட்டை, வெள்ளைக் கரு, ஆரஞ்சு பழம், ஹார்லிக்ஸ்னு எல்லாத்தையும் தனியா சூஸ் பண்ணி குடுத்தாக. 10 டாக்டர்களுக்கு மேல கவனிச்சுக்கிட்டாக.

அமைச்சர் மா.சுப்பிரமணியம், எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனும் அடிக்கடி வந்து கவனிச்சுக்கிட்டாக. நாங்க தங்க சிரமப்படுறது தெரிஞ்ச அமைச்சர் மா.சு., எங்களுக்கு எம்.எல்.ஏ. குவார்ட்டர்சுல தன்னோட ரூமை ஒதுக்கிக் கொடுத்தார். எங்களுக்குச் செலவு இல்லாம அமைச்சர் கவனிச்சது பெரிய விஷயம்யா. அமைச்சர் மா.சுப்பிரமணியம் டாக்டர்கள்ட்ட பேசிட்டு வந்து, 'அம்மா ஒங்க புள்ள ஆரம்பத்தில எப்புடி ஆரோக்கியமா இருந்தாளோ அதே மாதிரி ஒங்ககிட்ட அவள ஒப்படைப் போம்மா'ன்னு அவுக சொன்னத மொதல்ல நாங்க நம்பலய்யா. அப்பறமா தொடர்ச்சியா சிகிச்சைக்குப் பொறவு அவ தேற ஆரம்பிச்சி, சூஸ் சாப்பிட்டா. அவளே இட்லி, இடியாப்பம், முட்டைன்னு கையால எடுத்துச் சாப்புட்டதப் பாத்தப் பொறவு தாம்யா எங்களுக்கு நம்பிக்கை வந்திச்சி.

cc

அவுக சொன்ன மாதிரி சிகிச்சைக்கப்புறம் அவ தேறுனதப் பாத்ததும் தான் எங்களுக்கு தெம்பும் தைரியமும் வந்திச்சி. ஆரம்பத்தில 15 கிலோ எடையிருந்தவ, பவுடரத் தின்னு எலும்பும் தோலுமா மூணரைக் கிலோ எடையாயிட்டா. இப்ப தேறுனப் பெறவு 14 கிலோ எடைக்கு வந்திட்டா.

"அம்மா நாங்க சொன்ன மாதிரி, ஒங்க புள்ளைய பழைய நிலைமைக்குக் கொண்டுவந்து ஒங்ககிட்ட ஒப்படைச் சிட்டோம். ccகவனிச்சுக்கங்க'ன்னு டாக்ட ரய்யா சொன்னப்ப... நாங்க அழுதுட் டோம். பதில் சொல்ல வார்த்தை வரல. டாக்டர்க கால்ல விழுந்து கும்பிட்டு, எங்க நன்றியச் சொன்னோம்யா. முதல்வர் ஸ்டாலின் அய்யா தலையீட்டால எங்க புள்ளைக்கி இப்புடி ஒரு ராச வைத்தியம் கெடைக்கும்னு நாங்க சொப்பனத்திலயும் நெனைச்சுப் பாக்கலய்யா. அவுகளப் பாத்து நன்றி சொல்லணும்னு சொன்னப்ப, அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஏற்பாடு பண்ணுனாக. முதல்வரய்யாவப் பாத்து நன்றி சொன்னோம். அப்ப முதல்வரய்யா புள்ளயக் கூப்பிட்டு, 'ஒம் பேரு என்னம்மா?'ன்னு கேட்டாக. சொன்னா. "என்ன சாப்பிட்ட?'ன்னு கேட்டதுக்கு இட்லி சாப்பிட்டேன்னா. அவுளுக்கு ஆறுதல் சொன்னவுக, நாங்களே கொஞ்சம் கூட எதிர்பாக்கல்ல, 5 லட்சம் ரூவா செக் குடுத்து புள்ளையோட வைத்தியத்திற்கு வைச்சுக்குங்கன்னாக. ஒலகத்தில யாரு இப்புடி செய்வாகய்யா! எங்க புள்ளைக்கி உசுரக் குடுத்து மறுஜென்மம் எடுக்க வைச்ச முதல்வர் ஸ்டாலின் அய்யாவ நாங்க சாகுற வரைக்கும் மறக்க மாட்டோம்யா'' என கண்ணீருடன் உருகினார்கள்.

இது மக்களின் அரசு. அரசும், அரசு இயந்திரங்களும் மக்களுக்கானதே என்பதே நடைமுறையாகிக்கொண்டிருக் கிறது.