வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
தூத்துக்குடியின் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். வடபகுதி பகுதிச் செயலாளர். ஒட்டுமொத்த குடும்ப நபர்கள் மீதும் அந்த கேப்பிட்டல் கிரிமினல் வழக்கு பதிவாகியிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-partyman1.jpg)
பொன்ராஜின் மகன் கவிராமுக்கும் நகரின் சிவந்தாக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினிக்கும் கடந்த 10.12.2023 அன்று திருமணமானது. பொன்ராஜின் மகன் ஹோட்டல் வைத்திருப்பவர். ஆசிரியை பயிற்சி முடித்துவிட்டு தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. மணிராஜையும் அவரது மகள் திவ்யதர்ஷினியையும் அவர்களின் இல்லத்தில் சந்தித்தபோது தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையையும், சித்ரவதையையும் தந்தை விவரித்தார்.
"புரோக்கர் ஒருவர் மூலமா பொன்ராஜ் மகன் கவிராமை பற்றித் தெரிந்து, ஜாதகம் பார்த்து திருமணத்தை நடத்தினோம். எங்களுக்கு ஜாதகம் பார்க்கிற பழக்கமெல்லாம் கெடையாது, மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்துக்குவோம்னு சொன்னார் பொன்ராஜ். என்னோட ரெண்டு மகள்களையும் 100 பவுன் நகை போட்டு சிறப்பா கல்யாணம் முடிச்சுவைச்சேன் அதமாதிரி என் வீட்டுக்கு வர்ற மருமகளும் அந்தளவுக்கு நகை, ரொக்கத்தோட வரணும்னு சொல்லி அழுத்தினார் பொன்ராஜ். ஒரே பெண் என்பதால் வரதட்சணையாக 80 பவுன் நகை, 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசையா 7 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்தோம்.
திருமணத்திற்குப் பின் தென்காசியிலிருக்கும் தன் சகோதரியின் வீட்டிற்கு மனைவியுடன் சென்ற கவிராம், அங்கு ஓரிரு நாட்களிருந்துவிட்டுத் திரும்பிவந்தனர். அதற்கு இரண்டு நாள் பின்னர்தான் அந்தச் சம்பவம். 10.01.2024 அன்று மாலை கணவர் கவிராமும் அவரது தாய் லீலாவதியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரவு 10.30 மணிக்கு என் மகள் தனது அறையின் படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கிட்டிருந்தா. அப்ப வீட்டிலிருந்த மாமனார் பொன்ராஜ், திவ்யதர்ஷினி அறைக்குள் நுழைந்தவர் அவளைப் பார்த்து ரசித்ததோடு தன் நிலை பற்றி துளியும் யோசிக் காமல் திவ்யதர்ஷினியிடம் அத்துமீறி சீண்டலில் ஈடுபட்டிருக்கார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-partyman.jpg)
திடுக்கிட்டு விழித்த திவ்யதர்ஷினி, தன்னைச் சீண்டிய தன் மாமனார் பொன்ராஜையும் அவரது நிலையையும் கண்டு பதறி "என்ன இது... இப்படியா நடந்துக்கிறது' என திட்டினா. அதன்பிறகும் பொன்ராஜ், இணங்கிப் போகும்படி சொன்னதும் கொதிப்பில் அவ அவரைக் கடுமையாகத் திட்டி வெளியே அனுப்பியிருக்கிறா. மறுநாள் விடிஞ்சதும் அறையில் நடந்ததை தன் கணவரிடமும், மாமியார் லீலாவதியிடமும் சொல்லிக் கதறியிருக்கிறா திவ்யதர்ஷினி. அவளுக்கு ஆறுதல் சொல்லி பொன்ராஜைக் கண்டிக்கவேண்டிய அவங்க, சப்பைக் கட்டு கட்டியிருக்காங்க.
"இதப் பார் இங்கெல்லாம் இப்படித்தான்... ஒத்துப்போவணும்...… இல்லன்னா' என கணவரும் மாமியாருமா மிரட்டல் விடுத்தவங்க, "நீ சாதாரண குடும்பம், எங்களுக்கு அரசியல் செல்வாக்கிருக்கு ஒண்ணுமில்லாம ஆக்கிருவோம்'னு சொல்ல... திவ்யதர்ஷினி பயந்துட்டா. இதையடுத்து அங்கே என் மகளை தொடர்ந்து டார்ச்சர், அடி உதை, சித்ரவதைனு படுத்தியிருக்காங்க. அப்புறமா என் மனைவிக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி வரச்சொல்லி கணவனும் வீட்டாரும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்திருக்காங்க. ஒருகட்டத்திற்கு மேல் இந்த சித்ரவதைகளைத் தாங்கமாட்டாம, என் மக தனக்கு நடந்ததை, மாமனாரின் மோசமான நடவடிக்கையை, நிலம் கேட்டதைப் பற்றி என்னிடம் போனில் பேசி கண்ணீர் வடிச்சா. இதனால கொதிச்சுப் போய் நான், என் உறவினர்களோட போய் பொன் ராஜிடம் நியாயம் கேட்டேன்.
"அன்னைக்கித் தெரியாம குடிபோதையில அப்படி நடந்துக்கிட்டேன், மன்னிச்சுக்குங்க'ன்னு எங்களோட வந்தவங்ககிட்ட பொன்ராஜ் கைகூப்பிக் கேட்டுக்கிட்டதால, சரி ஒருமுறை விட்டுப்பிடிப்போம்னு திரும்பினோம்.
அப்புறம் இரண்டு மாசத்துல மகள் கர்ப்பமாகவும், மருமகன் அவளை, எங்க வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றார். நாங்களும் இங்க இருந்தவரை அவளை நல்லா பார்த்துக்கிட்டோம். அப்புறம் அவளை கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவந்தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-partyman2.jpg)
அப்புறம்தான் அந்த வேலையைப் பார்த்துட்டாங்க. தங்களுக்கு ஒத்துவராத என் மக மீது ஆத்திரப்பட்ட கணவர் மற்றும் அவரது பெற்றோர், அவ கருவைக் கலைச்சுடணும்கிற திட்டத்தில் சென்னையில் சித்த மருத்துவராக இருக்கும் கவிராம் சகோதரியான கீதாவை வரவழைத்திருக்கிறார்கள். கணவர் கவிராம், மாமனார் பொன்ராஜ், மாமியார் லீலாவதி, மகள் கீதா நான்கு பேரும் எம்மகளை வலுக்கட்டாயக் கருக்கலைப்பிற்கு உட்படுத்தியிருக்காங்க. மாமியார் லீலாவதி இஞ்சியை நிறைய அரைத்து அதன் சாறை மக வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியிருக்கிறார். இதில் எரிச்சல் தாங்காமல் திவ்யதர்ஷினி கதறிக்கொண்டிருக்க, அவளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார் கீதா. இந்த குடைச்சலில் மறுநாளே அவளுக்கு அபார்ஷன் ஆயிருக்கு.
அதோட நிறுத்தாம பொன்ராஜ் குடும்பத்தார், “"இங்க நடந்ததை வெளிய சொன்ன ஒன்ன கொலை பண்ணிட்டு அதத் தற்கொலைன்னு முடிச்சிருவோம்'' என்று கொலை மிரட்டலும் விட்டிருக்காங்க. இதுல மக பீதியில் ஒடுங்கிப் போயிட்டா. அப்படி மிரட்டிட்டு பின்னாலயே 01.10.2024 அன்று எங்க வீட்டில் கொண்டுவந்து விட்டாங்க.
இந்நிலையிலதான், திவ்யதர்ஷினி மனநிலை சரியில்லாதவ. அதை மறைச்சி எனக்கு கட்டி வைச்சுட்டாங்கனு மருமகன் கவிராம் என் மேல வழக்கு போட்டிருக்கார்.
இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்த நான், என் மகளை அழைத்துக் கொண்டுபோய் அவளுக்கு மாமனார் வீட்டில் நடந்த கொடுமைகளுக்கு நடவடிக்கை வேண்டி தூத்துக்குடியின் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்''’என்கிறார் திவ்யதர்ஷினியின் தந்தை.
ஸ்டேஷன் விசாரணையில் 20 பவுன், 10 பவுன் நகைதான் போட்டாக அந்தளவு போடல என்று கணவர் கவிராம் சொல்ல, அங்கே தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திய பொன்ராஜ், புகார் மனுவை நீர்த்துப்போகச் செய்ய, கவனிக்கப்பட்ட எஸ்.ஐ. சிவகுமாரும் திவ்ய தர்ஷினியின் மனுவை ஒரு ஓரத்தில் வைத்து விட்டாராம். தொடர்ந்து இந்தப் பஞ்சாயத்தை தன் கட்சியின் அந்த மாஜி முக்கிய புள்ளியிடம் கொண்டுபோயிருக்கிறார் பொன்ராஜ். ஒழுக்கமே உன் விலை என்ன? என்று கேட்கிற அந்தத் தலைவரோ, தப்பானவரைக் கண்டிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம், பொறுத்துப் போ, அனுசரிச்சுப்போ என்று அவர்களின் வேதனையைக் கிளறியுள்ளாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-partyman3.jpg)
அதையடுத்தே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் செய்திருக்கிறார் திவ்யதர்ஷினி. ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, கணவர் கவிராம், பொன்ராஜ், கட்டாயக் கருக்கலைப்பு செய்த கீதா, தாய் லீலாவதி ஆகியோர் மீது 498 (ஆ), 354 (ஆ), 403, 506 (ஒஒ) உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
வலியோடிருந்த திவ்ய தர்ஷினியோ... "இஞ்சித் தண்ணி, டேப்லட்ஸ்கள ரெண்டு நாளா டார்ச்சர் பண்ணி ஃபோர்ஸ் பண்ணிக் குடிக்கவைச்சதில அபார்ஷனாயிருச்சி. கடுமையான வலி. வெளிய சொன்னா அரிவாளால வெட்டிருவோம்னு மெரட்டுனாக. அந்த வலியோடதான் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் பண்ணோம். எஃப்.ஐ.ஆர். போட்டும் அவங்கள அரஸ்ட் பண்ணல. அரசியல் பவர அந்தளவுக்கு யூஸ் பண்றாக''’என்றார் வேதனையோடு.
"விசாரணைக்குப் பின்பு எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. அதன்மீது மேல் நட வடிக்கையை மேற்கொண்டுவருகிறோம்''’என்கிறார் டவுன் ஏ.எஸ்.பி.யான மதன்.
வழக்கறிஞர் ஜெயச்சந்திரனோ, “"இத்தனைக்கும் அடிப்படை காரணமே பொன்ராஜோட செக்ஸ் டார்ச்சர்தான். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்கூட அத்தனை எளிதில் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடல அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தினார் பொன்ராஜ். எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்கலன்னா நடுரோட்ல உக்காந்திருவோம்னு சொன்னப்புறம்தான் போட் டாங்க''’என்கிறார்.
நடந்தவை குறித்து விளக்கமறிய நாம் பொன்ராஜின் வீட்டிற்குச் சென்றபோது, மொத்த குடும்பமும் வெளியேறியிருந்தது. பொன்ராஜின் மொபைலும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் அதனை வெளியிடத் தயாராக உள்ளோம்.
-ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/admk-partyman-t.jpg)