மிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழகத்தில் தனிப்பெரும் மரியாதை இருக்கிறது. பிற சைவ மடங்களுக்கு வழிகாட்டுமளவுக்கு தருமபுரம் ஆதீனமும், திருவாவடுதுறை ஆதீனமும் விளங்கிவந்தன. ஆனால் சமீபகாலமாக பெரிய பெரிய சர்ச்சைகளையும் கண்டனத்தையும் சந்தித்துவருவது பொதுமக்களையும், ஆன்மீக வட்டாரங்களையும் வேதனையடையச் செய்துள்ளது.

ஆதீன குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து, ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்கள் தோளில்சுமந்து வீதியுலா செல்வதே பட்டினப்பிரவேசம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு பெரும் எதிர்ப்பு, போராட்டம், வழக்கு நீதிமன்றம்வரை சென்றது. 26-வது ஆதீனகர்த்தரே இனி பட்டினப்பிரவேசம் வேண்டாம் என நிறுத்திக்கொண் டார். அவர் மறைந்து 27-வது சன்னிதானம் பொறுப்பேற்றதும், இந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் களும், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கத்தினரும் மனிதனை மனிதன் சுமக்க வைக்கும் செயல், மனித உரிமை மீறல் என எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனுவைப் பரிசீலித்த கோட்டாட்சியர் பாலாஜி, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

add

Advertisment

இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், "சைவத்தையும் தமிழையும் பாதுகாக்கும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம். ஆளுநர் வருகை விவகாரம்தான் இந்த தடைக்கு காரணம். உடனடியாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி யை நடத்த தமிழக அரசு அனுமதிக்கவேண்டும். அதோடு முதல்வரே நேரில் வந்து நடத்தவேண் டும். இல்லாவிட்டால் நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கைச் சுமப்பேன். என் உயிரே போனா லும் பரவாயில்லை. கட்டாயம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கும்''’என பேசி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுகாலம்வரை தருமை ஆதீனத்திற்கு எதிரும் புதிருமாக இருந்த மன்னார்குடி ஜீயர், சந்தடி சாக்கில், “"பட்டினப்பிரவேசத்தை தடுக்கக் கூடிய அதிகாரம் எந்த அரசாங்கத்திற்கும் எந்த ஒரு இயக்கத்துக்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ் யர்கள் செய்யக்கூடிய ஒரு பணி. அதை அவர்கள் செய்தே தீருவார்கள். இந்து தர்ம துரோகிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும் நாங்கள் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறோம். இதேபோல் இந்து விரோதச் செயல்கள் இந்து கோயில்களில், இந்து தர்மத்தில் தலையிட்டால் அரசாங்கத்தின் எந்த ஒரு அமைச்சரும் ரோட்டில் நடமாட முடியாது''’என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இதுதான் வாய்ப்பு என சட்டசபையில் அரசியல் செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச் சாமி. பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினரும் பட்டினப்பிரவேசத்தை ஆதரித்துப் பேசினர்.

முதல் ஆளாக கண்டனக் குரலைப் பதிவிட்ட பழ.நெடுமாறனோ, "பட்டினப்பிரவேசம் பாரம்பரியம் என்றால் ஆதீனகர்த்தர்களுக்கு நவீனம் எதற்கு கார், ஏசி, செல்போன் எதற்கு? காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்''’என கூறியிருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “"பிரச்சினை இல்லாமல் நடுநிலையாக நல்ல முடிவை முதல்வர் எடுப்பார், அரசியலாக்க வேண்டாம்''’என விளக்கமளித்திருக்கிறார்.

பட்டினப்பிரவேசம் குறித்து பேராசிரியரும், தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளருமான ஜெயராம னிடம் கேட்டோம். “"26-வது ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் சண்முக தேசிக ஞானசம்பந்தர் பட்டினப்பிரவேசம் செய்ய வில்லை. 2019 டிசம்பர் 4-ஆம் தேதி அவர் இறந்தார். டிசம்பர் 13-ஆம் நாள் 27-வது ஆதீன கர்த்தராக பொறுப்பேற்ற சீர்வளர்சீர் மாசிலாமணி தேசி கர் ஞானசம்பந்தர், அன்றைக்கே பட்டினப்பிரவேசம் செய்ய முன்வந்தார். சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பே தருமபுர ஆதீனகர்த்தர் பட்டினப்பிர வேசம் செய்வதைக் கைவிட்டு விட்டார். இப்போது அதற்கு புத்துயிர் அளிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஆர். எஸ்.எஸ். இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியம் என்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பின்பற்றினால் இப்போது கைவிடமுடியாதா என்ன? கடந்த காலத்தில் ஒரே ஒரு சாதியிடமிருந்து எந்தெந்த சாதிகள் எவ்வளவு தூரத்தில் நிற்கவேண்டும் என்பது வரை யறுக்கப்பட்டிருந்தது. மரபு என்று கூறி மீண்டும் அதனை அனுசரிக்கத் தொடங்கலாமா? கணவன் இறந்த வுடன் அவன் மனைவி உடன்கட்டை ஏறும் சதி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அப்படி உடன் கட்டை ஏறி இறந்த பெண்களை இங்கு தீப்பாய்ந்த அம்மன் என்று கோயில்கள் வைத்து வணங்கு கிறார்கள். பாரம்பரியம் என்ற பெயரில் உடன் கட்டை ஏறுவதை தொடர்ந்துவிடலாமா?

கோயில்களில் கருவறைக்குள் திருவுருவச் சிலையைத் தொடுவதற்கு உரிமை பெற்ற சாதி, கருவறைக்கு வெளியே நிற்கவேண்டிய சாதி, அர்த்த மண்டபம்வரை செல்லும் அனுமதிபெற்ற சாதி, கோபுரம் தாண்டி நுழைய உரிமை பெற்ற சாதி, கோபுரத்துக்கு வெளியே நின்று கோபுரத்தை அண்ணாந்து பார்த்து மனநிறைவு அடையவேண் டிய சாதி, கோயில்கள் இருக்கும் அந்த தெருக்களில் நடமாடக்கூடாத சாதி என்றெல்லாம் இருந்தன. இந்த பாகுபாடுகள்கூட பாரம்பரியம் தான்.

கடந்த காலத்தில், பார்ப்பனர்கள் தங்க ளுடைய மலத்தை தீண்டப்படாதவர்கள் எடுக்கக் கூடாது, சூத்திர சாதியினர்தான் அள்ளவேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள். சூத்திரர்கள் பட்டியலில்தான் இன்று மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசம் நடத்தத் துடிக்கும் மடாதிபதிகளும் அடங்குவர். பார்ப்பனர் கள் சொன்னதைச் செய்துவிடலாமா?

add

Advertisment

சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மடங்களை யும் பாதித்துள்ளன. சில சீர்திருத்தங்கள் இயல் பாகவே மடங்களில் நிகழ்ந்துள்ளன. சாட்டையடி, சாணிப்பால் கொடுமைகள் தனி நிலவுடைமை யாளர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்திய ஒன்றல்ல, ஆதீனங்களிலும் நடைமுறைப்படுத்திய கொடுமைதான். இதிலிருந்துதான் இன்றைய தமிழ்ச் சமூகம் விடுபட்டிருக்கிறது. இன்னமும் விடுபட வேண்டிய நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் பக்கங் கள் இருக்கின்றன. அந்த பழைய அதிகாரத்தின் குறியீடாகத்தான் பல்லக்கில் ஆதீனகர்த்தர் அமர்ந்துவர, அதை சக மனிதர்கள் தோளில் தூக்கிக்கொண்டு வருவது. இதை நிறுத்துவதுதான் மனித இனம் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறு கிறது என்பதற்கு அடையாளம். பட்டினப்பிரவேசத் தை ஆதீனகர்த்தர் தாமே முன்வந்து கைவிட்டால் அது பெருந்தன்மைக்குரியது. அவ்வாறின்றி அதைத் தொடர்வது என்று முயற்சித்தால் எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் அதை கைவிடச்செய்யும்'' என்கிறார் விரிவாக.

கடந்த காலத்தில் பட்டினப்பிரவேச நிகழ் வில் பல்லக்கு சுமந்து, பிறகு அதற்கு எதிராக போ ராட்டத்தில் ஈடுபட்டு வழக்குகளைச் சந்தித்த ஒருவர், பெயரையும் முகத்தையும் மறைத்துப் பேசினார். "தருமபுரம் ஆதீன சன்னிதானத்தை பல்லக்கில் சுமப்பவர்கள், மதுரை ஆதீனம், ஜீயர், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், அண்ணா மலை ddகூறுவதுபோல சிஷ்யர்களோ, ஆதீனத் தின் அடிப்பொடிகளோ இல்லை. இந்த மண்ணின் பூர்வகுடிகளான, குடிப்படையான வன்னியர் சமூக மக்கள்தான். தர்மபுரம் மடத்தைச் சுற்றியுள்ள மூங்கில் தோட்டம், அச்சுதராயபுரம், மணக்குடி, கருங்குயில்நாதன்பேட்டை ஆகிய கிராமங்களி லுள்ள அனைத்து நிலமும், மனைகளும் மடத்திற்கு சொந்தமானது. இந்த கிராமங்களில் 80% பேர் வன்னியர் சமூக மக்களே வசிக்கிறார்கள். அவர்கள் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் பாரம்பரிய மாக குடியிருக்கிறார்கள். பரம்பரையாக குத்தகை சாகுபடி செய்கிறார்கள். அதனால் அவர்கள் மடத்திற்கு அடிமை வேலை செய்யவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய பி.ஜே.பி. அரசு அறிவித்ததிலிருந்தே சைவ வெள்ளாளர்கள் பி.ஜே.பி. ஆதரவு வாக்கு வங்கியாக திரண்டுவருகிறார்கள். அதன் வெளிப் பாடுதான் ஆளுநர் தர்மபுரம் மடத்திற்கு வருகை தந்ததும் அதனைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோன மனிதர்கள் பல்லக்குத் தூக்கும் நிகழ்வைப் புதுப்பிப்பதும்'' என்கிறார் வருத்தமாக.

ஆதீனத்திடம் இதுகுறித்து கேட்பதற்கு முயன்றோம். அவரது உதவியாளரே பேசினார், “"இது சன்னிதானம் எடுத்த முடிவு இல்லங்க, காலம் காலமா இருக்கிற வழக்கத்தை மாற்றவேண்டாம்னு அவரது சிஷ்யர்களும், அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களும் விரும்புறாங்க''” என்கிறார்.

இந்நிலையில்... "மரபாக சைவ வெள்ளாளர் கள் மட்டுமே பங்கு கொள்ளும் பல்லக்கு தூக்கும் நிகழ்வில் பா.ஜ.க. அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது'' என தர்மபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் கூறியிருப்பது பா.ஜ.க.வின ரை மனம்நோகச் செய்திருக்கிறது.

___________________________

தமிழகத்தில் சைவ ஆதீன மடங்களை கையிலெடுக்கிறதா ஆர்.எஸ்.எஸ்?

மிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்களும் இருக்கின்றன. தமிழகத்திலிருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத் துறை தகவல் தெரிவிக்கிறது. இந்த மடங்கள் அனைத்தும் தமிழ் மரபுப்படி இயங்குபவை. சனாதனத்திற்கு எதிரான அணுகுமுறையும் திராவிட சித்தாந்தத்தோடான நெருக்கமும் கொண்டவை. இவற்றை நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவைத்து, இந்துத்துவப் போக்குக்குத் திருப்பும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். முயற்சி எடுக்கத் தொடங்கியுள்ளது.

addd

தருமபுர ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கில் வைத்து தூக்குவதற்கு அரசு தடைபோட்ட அடுத்த நிமிடமே இந்து மக்கள் கட்சி அலுவலகத்தி லிருந்து அனைத்து பத்திரிகையாளர் களுக்கும் போன் வருகிறது. மதுரை ஆதீனம் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

"என்னை ஆளும் தரப்பினர் மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நானே சென்று தருமபுர ஆதின பல்லக்கைச் சுமப்பேன். உயிரே போனாலும் பரவாயில்லை. அமித்ஷாவையும் பிரதமரையும் சந்திக்கவுள்ளேன். இவர்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும். அனைத்து ஆதீன மடாலயங்களையும் ஒன்றிணைத்துப் போராடப்போகிறேன். நானே களத்தில் இறங்கவுள்ளேன்.”"இப்படி தடாலடி யாக பேசிய மதுரை ஆதீனம், “"மத்தியில் இந்து தர்மத்தை காப்பாற்றக்கூடிய ஒரு ஆட்சி நடக்கிறது. அங்கு முறையிடப் போகிறோம். இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பதிலடி கிடைக்கும்'’என்று ஆவேசமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

தமிழ் சமயங்களைக் காக்க, தமிழ் மந்திரங்களை ஓதிய ஆதீன மடாலயங்கள் காலம்காலமாக சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் இருந்தன. எப்படி இப்படி ஒரு திடீர் மாற்றம்?

மதுரை ஆதீன மடத்தில் அங்கிருக்கும் ஒரு நபரின் பெயரைச் சொல்லி பார்க்க வேண்டும் என்று விசாரிக்க, அதற்கு அவர்... "சார் அவரெல்லாம் வெளியே போய்விட்டார். பழைய ஆட்களையெல்லாம் வெளியேற்றிவிட்டார்கள். பழைய ஆதீனகர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட இந்து அமைப்புகள் எல்லாம் இப்போது மிகவும் நெருக்கமாகிவிட்டன. ஆதினத்திற்கு எதிராக காலம் காலமாக போராட்டம் நடத்தியவர்கள், போஸ்டர் ஒட்டியவர் கள்தான் இப்போது ஆதினத்திற்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இப்ப கூட விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் வந்து ஆதீனத்தை சந்தித்துவிட்டுப் போனபிறகுதான் பத்திரிகை யாளர்களை அழைத்தார்கள். என்னமோ நடக்கிறது''’என்று சொன்னார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணன் வந்தார். அவரைப் பார்த்ததும், "என்ன அண்ணே எப்போதுமே மதுரை ஆதீனத்திற்கு எதிராகவே அரசியல் செய்வீர்கள். திடீரென ஆதரவு நிலைப்பாடு'' என்றோம். அதற்கு அவர், “அது அந்த ஆதீனம், இப்போது இருப்பது எங்கள் ஆதீனம். இப்போதைய ஆதீனத்தின் உயிருக்கு தி.மு.க.வினரால் ஆபத்து. அனைத்து இந்து அமைப்புகளும் ஒன்றாக ஆதீனத்தைக் காப்போம்'' என்றார்.

இந்த திடீர் மாற்றம் குறித்துப் பேசிய திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜன், “"புதிய மதுரை ஆதீனம் திடீரென இவ்வளவு நாட்கள் கடைப்பிடித்த வழக்கங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு தடம் மாறத் தொடங்கி யிருக்கிறார். என் சந்தேகம் என்ன வென்றால், பழைய ஆதீனம் உடல்நிலை சரியில்லாமல் இருக் கும்போதே இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இங்கு வரத்தொடங்கினார்கள். அவர்களின் ஏற்பாட்டில்தான் இந்த ஆதீனம் கொண்டுவரப்பட்டார் என நினைக்கிறோம்''’என்றார்

வடமாநிலங்களைப் போல் தமிழக மக்களை மதத்தை மையமாக வைத்து சிந்திக்க வைக்க முயற்சிகள் நடக்க ஆரம்பித்துள்ளன. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது.

-அண்ணல்