புனிதமான மருத்துவத் தொழிலை ஒரு சில மன்மத ஓநாய்கள் கேவலப்படுத்தி வருகின்றன என்கிற குற்றச்சாட்டு நம்மை ரொம்பவே அதிரவைக்கிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 26-ஆம் தேதி, 26 வயது இளம்பெண் ஒருவர் ரேடியாலஜி ஆய்வகத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றார். அன்று ஸ்கேன் எடுக்க முடியாது எனக் கூறி மறுநாள் வருமாறு அனுப்பியுள்ளார் ரேடியாலஜி மருத்துவர் சக்ரவர்த்தி. மறுநாள் சென்ற அந்த இளம் பெண்ணை, ஆய்வகத்திற்குள் அழைத்துச் சென்ற சக்கரவர்த்தி, முதலில் அங்கே இருந்த செவிலியரை வெளியே அனுப்பியுள்ளார். கதவு மூடப்பட... அடுத்த சிறிது நேரத்தில் ஆய்வகத் தில் இருந்து அழுதுகொண்டே வெளியே வந்த அந்த இளம்பெண், தனக்கு சக்கரவர்த்தி பாலியல் டார்ச்சர் கொடுத்ததாகக் கூறி தனது தாயாரிடம் கதறியழுதார்.
இதைத் தொடர்ந்து, அவரது தாயார் உடனடியாக இது குறித்து மருத்துவத்துறை தலைவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரிடம் புகார் அளித்தார். விசாரணையில் சக்கரவர்த்தி மீதான புகார் உறுதியாக, மருத்துவமனை டீன் ரத்தினவேல், அந்த ஆபாச டாக்டர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சக்கரவர்த்தியைக் கைது செய்யவேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாதர் சங்க தலைவி சசிகலா நம்மிடம், "சார், கடவுளுக்கு நிகராகப் போற்றப்படும் மருத்துவர்களை நம்பித்தான் சிகிச்சைக்குச் செல்கிறோம். ஆனால் அவர்கள் இந்த மாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டால், விட்டுவைக்கலாமா? அந்த ஆளைக் கைது செய்யவேண்டும். இதேபோல், இதே மருத்துவத்துறையில் உள்ள பெண் டாக்டர் ஒருவரே, ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் தன் டாக்டர் கணவரைப் பற்றி காவல்துறையில் பலருக்கும் ஆபாச டார்ச்சர் கொடுக்கிறார் என்று புகார் கொடுத் திருக்கிறார்''’என்று அதிரவைத்தார்.
நாம் அந்த பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் கவிதாவையே (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சந்தித்தோம். அப்போது அவர்...
"என் கணவர் பெயர் டாக்டர் ஸ்டெபனோ ஜோனத்தன். அவர் ராமநாதபுரம் மாவட்ட உச்சிப்புளி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். அவரைப் போல மோசமான ஒருத்தரைப் பார்க்க முடியாது. என்னையே அந்த ஆள் பாடாய்ப்படுத்தினார். பல பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறார்''’என்றவர், அது குறித்து விரிவாகப் சொல்லத் தொடங்கினார்...
"என் கணவரின் அப்பாவே மோசமானவராம். 10 வருடத்திற்கு முன் தன்னிடம் பியானோ கற்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஊர் மக்களிடம் உதை வாங்கியிருக்கிறாராம். இது பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. நான் திருமணமாகி போனபோது, என் கணவரைப் பற்றிய லீலைகள் நிறைய என் காதுக்கு வந்தது. என் கணவருடன் உச்சிப்புளியில் வேலை பார்க்கும் ஒரு நர்ஸுடன் நெருக்கமாகி, அது பெரிய பிரச்சினையானது. அடுத்தடுத்து தன்னிடம் வைத்தியத்திற்கு வரும் கணவர் இல்லாத பெண்களை வீழ்த்தி தன் இச்சையைத் தீர்த்து வந்தார்.
அவரது செல்போனை ஆராய்ந்த போது, அதில் ஒரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததை பார்த்தேன். அது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு டீச்சர் என்பது தெரியவந்தது. அடுத்து சில மாதத்தில் வேறொரு பெண் படம் இருந்தது. ஒருநாள் அந்தப் பெண்ணே என்னிடம், "உங்க புருசன் தனக்கு கல்யாணமே ஆகவில்லைன்னு சொல்லிதான் என்னை வச்சிருந்தார்'னு சொன்னவள், "உன் கணவனை நம்பாதே. அவன் எனக்குத் தெரிந்து 10 பெண் களிடம் உறவு வைத்திருக்கிறான். என்னையே ஒருமுறை குரூப் செக்ஸுக்கு அழைத்தான்' என்றார்.
அதைவிடக் கொடுமை என்னன்னா, ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்குப் போனபோது, அங்கிருந்த பெண் டாக்டர் ஒருவர், என்னை தனியா அழைத்து ஒரு பையனைக் காட்டி, அவனோடு அட்ஜெஸ்ட் பண்ணச்சொன்னார். என் கணவர் மட்டுமல்ல. அவன் நட்பு வட்டாரமும் அசிங்கமான தாகவே இருக்கிறது. அதுமட்டு மல்ல... எனக்குத் தெரிந்து மருத் துவர்களில் பலர் அந்த விசயத்தில் மோசமாக இருக்கிறார்கள். என் கணவர் இப்போது என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்த தால், நான் இனியும் தாங்கமுடியாது என்று புகார் கொடுத்தேன்''’என்றவர், தன் கணவரின் இன்னும் சில லீலை களையும் பட்டியலிட்டார்.
அந்த டாக்டரிடம் சிக்கிய இன்னொரு பெண்ணோ, "சார் அவன் பெரிய கில்லாடி சார். நான் நர்ஸாக இருந்தேன். என் பிறந்தநாளைக்கு எனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து, ஒரு ஸ்டார் ஹோட்டலில் அவனோடு இருக்கும் நண்பர்கள் மற்றும் மருத்துவமனையில் வேலை செய்பவர்களோடு கொண்டாட வைப்பான். கல்யாணத்திற்கு முன்னாடி எல்லாத்தையும் அனுபவிக்கணும். அப்புறம் பெண்களுக்கு கல்யாணம் ஆகிட்டா குடும்பம், கணவன், குழந்தைகள் என்றாகிவிடும் என்று அட்வைஸ் பண்ணுவான். வீட்டில் பணப் பிரச்சனை என்றால் உடனே பணம் கொடுத்து நம்மை வாய் பேசாமல் வைத்துவிடுவான். கூல்டிரிங்ஸில் ஓட்கா கலந்து குடிக்க வைப்பான். நைட் டூட்டி போட்டா அவ்வளவுதான்... மாடியில் இரவு டார்க் ரூம் இருக்கு. அங்கு வச்சு எல்லாத்தையும் முடித்துவிடுவான். ஆனால் நான் மட்டும்தான் அவனிடமிருந்து தப்பித்தவள். அவன் போலீஸையே பணத்தால் வாங்குகிறவன்''’என்று மிரளவைத்தார்.
டாக்டர் ஸ்டெபனோ ஜோனத்தனை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். "என் மனைவி சொல்லுவது அனைத்தும் பொய். இது எங்க குடும்ப பிரச்சினை. இதுவரை என்னைப் பற்றி நான்கு தடவைக்கு மேல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எதுவுமே அவருக்கு சாதகமாகவில்லை. எனக்கு கலெக்டர் முதல் அனைத்து உயரதிகாரிகளும் நல்ல பழக்கம். என்னை ஒன்றும் செய்ய முடியாததால் இப்ப மீடியாவுக்கு வந்துள்ளார்'' என்றவரிடம் நாம், "சார் உங்களுக்கு நிறைய பெண்களிடம் பழக்கம் உள்ளது, பல பெண்களை ஏமாற்றியுள்ளீர்கள் என்றும் அவர்கள் பேசும் கதறலான ஆடியோவை எங்களிடம் காண்பித்தார்... அதில் இரு பெண்கள் தங்களை ஏமாற்றி வாழ்க்கையை தொலைத்ததாகவும், வேறு சில பெண்களின் பெயர்களை சுட்டிக்காட்டி பேசுவதாக இருக்கிறது.
மேலும் நீங்கள் பல பெண்களிடம் மிக நெருக்கமாக இருக்கும் படங்களையும் கான்பிக்கிறார். இது குறித்து உங்கள் விளக்கம் என்ன?'' என்று கேட்டபோது, "எதுவும் சொல்வதற்கில்லை எல்லாமே பொய்'' என்று முடித்துக் கொண்டார் டாக்டர் ஸ்டெபனோ ஜோனத்தன்.
காவல்துறை இதுபோன்ற மருத்துவர்களைக் கண்காணித்து கருப்பு ஆடுகளைக் களை எடுக்கவேண்டும். வருகின்ற புகார்களை அலட்சியம் செய்யாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், மருத்துவமனை என்றாலே மக்கள் மிரண்டு ஓடுவார்கள்.