ஆறுகளில் இருந்து மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த தைத் தொடர்ந்து, கழுகுக்கு மூக்கு வியர்த்த தைப் போல், மணல் மாஃபியாக்கள் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை விரித்தபடி ஆறுகளைக் குறிவைக்கத் தொடங்கி விட்டனர். இதற்காக அவர்கள் பவர் புள்ளிகள் பலரையும் வளைத்து வருகின்றனர் என்பதுதான் அடுத்த கட்ட அதிர்ச்சி!
மணல் குவாரிகளின் அனுமதி குறித்து ஜனவரியில் அறிக்கை வெளியிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமை யாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்''’என்று அதில் குறிப்பிட்டி ருந்தார்.
இதன்படி ஆற்றில் இருந்து மணலை எடுத்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிற செய்திதான். அதேசமயம் இங்கே ஆறுகளில் இருந்து மணலை எடுத்து, விநியோகிக்கப் போவது யார்? என கேள்வி எல்லோர் மனதிலும் முளைத்தது.
இதற்கு விடையாக "மணல் மாஃபியாக் கள்தான் ஆற்றைச் சுரண்டி, அதில் சிறிய அளவை மட்டும் கணக்கில் காட்டி ஆறுகளையே முழுதாக விழுங்கப்போகிறார்கள்''’என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதிகாரிகள் தரப்போ, "ஆறுகள், கால்வாய்களில் கடந்த 3 ஆண்டுகளாக பெய்த கனமழையால் மணல் நிரம்பியுள்ளது. இதனால் அரசின் வருவாயைக் கருதியும் மணல் அள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும். தோராயமான ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு மணல் அள்ள அனுமதிக்கப்படும்''’என்கிறது கூலாய்.
"மணல் குவாரிகளைத் திறப்பதற்கான பணிகளையும் நீர்வளத்துறை வேகமாக செய்துவருகிறது. இதில் இப்போதே பல விதிமீறல்கள் தொடங்கிவிட்டன'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
"மணல்குவாரிகளை டெண்டர் விட்டாலும் அதை எவராலும் எடுக்க முடியாதாம். அ.தி.மு.க. ஆட்சியிலும் கொடிகட்டிப் பறந்த மணல் ராமச்சந்திரன், கரிகாலன் உள்ளிட்டவர்கள் கைக்குதான் குவாரிகளின் காண்ட்ராக்ட் போகும்'' என்கிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகளே.
இவர்களில் இப்போது பரபரப்பாக அடிபடும் கரிகாலன் எனப்படும் குளந்திரான்பட்டு கரிகாலன் யார்?
அ.தி.மு.க. ஆட்சியில் செல்வாக்காக மணல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியவர்தான் இந்த கரிகாலன்.
திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம் என்னும் மணல் குவாரி அதிபரிடம், உறவினர் என்ற உரிமையில் குவாரி கணக்குகளை கவனித்துக்கொள்ளச் சென்ற கரிகாலன், அங்கே மணல் தொழிலின் அத்தனை நெளிவு சுழிவுகளையும் கற்றுக்கொண்டா ராம். ரத்தினத்தின் மூலம் அப் போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கும் பின்னர் எடப்பாடி வகையறாவுக் கும் அவர் நெருக்கமானவ ரானார் என்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பாலாற்றில் அள்ளப்பட்ட மணல் வருவாய் முழுவதையும் கையாண்டு, பெரிய இடங் களுக்கு செட்டில்மெண்ட் செய்தவரும் இவர் தானாம்.
இடைக் காலத்தில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டதும், கல் குவாரிகள், க்ராவல் மண் பக்கம், மணல் மாஃபியாக்களின் பார்வை திரும்பியது. அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் வசம் கனிமவளத் துறை இருந்தது. அவருடன் கரிகாலன் நெருக்கமாகி, அவருக்குத் தேவையான அனைத்தையும் சப்ளை செய்து, "ஆல் இன் ஆல்' ஆக தன்னை ஆக்கிக்கொண்டார். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பவர் புள்ளிகளோடு கொடி கட்டிப் பறந்த கரிகாலன்தான், இப்போது தி.மு.க. பவர் புள்ளிகளை நெருங்கியிருக்கிறார் என்கிறார் கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஒப்பந்ததாரர், "தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது என்று தெரிந்தவுடனேயே மணல் மாஃபியாக்கள், தி.மு.க. வின் மூத்த தலைவர்களை கிரிவலம் போல சுற்றி வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு தேர்தல் நிதியை எல்லாம் வாரி வாரித் தந்தார்கள். அதேபோல் தி.மு.க ஆட்சி அமைந்ததும், நீர்வளத்துறை என தனியாக ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்பட்டதும் அவரை நெருங்கினார்கள்.
குறிப்பாக, மணல் குவாரி ஒப்பந்தக்காரர் குழு என்ற பெயரில் கரிகாலன், அமைச்சர் துரைமுருகனின் பேரன்பைப் பெற்றார். தனி கரிசனம் காட்டும் அளவிற்கு அமைச்சரிடம் நெருங்கிவிட்டார். அமைச்சரின் மகன் கதிர் ஆனந்திடமும் கரிகாலன், நகமும் சதையுமாக ஆகிவிட்டார். அதனால் இனி மணல் டெண்டர் அவருக்கும் அவர் சொல்லும் நபர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது. தன்னை தி.மு.க பிரமுகராகவே காட்டிக்கொள்ளும் இந்த கரிகாலன், சில மாதங்களுக்கு முன்பு கறம்பக்குடி தி.மு.க. பிரமுகர் பாஞ்சாலன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த, உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்து, இதை இளைஞரணி வளர்ச்சி நிதியாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்மூலம் அவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த கரிகாலனின் சகோதரர் கருப்பையா, அ.தி.மு.க. பாசறையில் இன்றுவரை இருக்கிறார்''’என்று சொன்னார்.
காட்பாடியைச் சேர்ந்த அந்த தி.மு.க. பிரமுகரோ, "இந்தக் கரிகாலன், தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடனேயே வலம் வருகிறார். அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் இப்போது கரிகாலன்தான் எல்லாமே. அமைச்சரின் சில விசயங்களையும் கரிகாலன்தான் கவனித்துக் கொள்கிறார். குறிப்பாக கடந்த டிசம்பரில் அமைச்சரின் அண்ணன் துரை.மகாலிங்கம் மரணமடைந்தார். அப்போதும், அவரது 12-ஆவது நாள் சடங்கின் போதும், கரிகாலன் அமைச்சர் அருகிலேயே இருந்தார். மணல் குழுவைச் சேர்ந்த முத்துப்பட்டி னம் ராமச்சந்திரன் முதல் பல முக்கிய தலைகள் வருகை தந்து அமைச்சருக்கு அப்போது ஆறுதல் கூறினார்கள். அவர்களை எல்லாம் ஆர்கனைஸ் செய்தவர் கரிகாலன். இப்போது அமைச்சர் வீடு உள்ள காட்பாடியில், கரிகாலன் தனியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருக்கிறார். இதிலேயே அவருக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் புரியும்''’என்கிறார் ஆதங்கமாய்.
ஒரு காலத்தில் மணல் ராமச்சந்திரன், சேகர் ரெட்டி போன்றவர்களுக்காக, அவர்களின் எடுபிடியாக அரசு அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் ஃபைல்களை மூவ் செய்தும் தன் செல்வாக்கைக் காட்டி இருக்கிறாராம். அதுமட்டுமல்ல ஆட்சியின் பவர் பர்சனின் குடும்பத்தில் உள்ள சிலரோடும் இரண்டு அமைச்சர்களோடும், ஒரு எம்.எல்.ஏ. வழியாக நெருக்கமாகி, மணல் குவாரிகளை திறப்பதற்கான உத்தரவாதத்தையும் கரிகாலனும், அவர் தரப்பினரும் பெற்றுவிட்டார்கள் என்றும் டாக் அடிபடுகிறது.
இது உண்மைதானா? என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் நாம் விசாரித்தபோது... "இதிலே என்ன டவுட்? தமிழ்நாட்டில் 110 இடங்களில் மணல் குவாரிகளை அமைக்க இருக்கிறது அரசு. வேலூர் மாவட்டத்தில் 10, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4, திருப்பத்தூர் மாவட்டத்தில் 12, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மட்டும் 4 குவாரிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னி ஆறு என ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இடங்களில் குவாரியைத் திறப்பது என முடிவு செய்து அதற்கான ஃபைல்கள் நீர்வளத்துறையில் தயாராக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாட்டுவண்டி குவாரிகளும் பெயரளவுக்கு அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மணல் அள்ளும் பகுதியும் 25 ஹெக்டர் முதல் 50 ஹெக்டர் பரப்பளவு வரை இருக்கவேண்டும் என்றும், ஒன்றரை மீட்டர் ஆழம்வரை மட்டுமே ஆற்றில் மணல் அள்ள வேண்டும் என்றும் ஃபைலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மணலை அள்ளும்போது அவர்கள், ராட்சதர்களாக மாறி ஆறுகளையே ஸ்வாஹா செய்துவிடுவார்கள். இதற்கான காண்ட்ராக்ட்டை சேகர் ரெட்டி, ராமச்சந்திரன் வகையறாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சேகர் ரெட்டி பெயர் ஏற்கனவே டேமேஜ் பட்டியலில் இருப்பதாலும், தமிழக முதலமைச்சரை நிவாரண நிதி தருகிறோம் என்கிற பெயரில் சந்தித்தது சர்ச்சையானதாலும், சேகர் ரெட்டிக்கு நேரடியாக டெண்டர் கொடுக்கமாட்டார்கள். அவருக்குப் பதில் ராமச்சந்திரன் மற்றும் கரிகாலனின் நிறுவனங்களின் பெயரில் குவாரிகளைத் தர முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலை களும் நடக்கின்றன''’என்றார் உறுதியான குரலில்.
மணல் மாஃபியாக்கள் தங்கள் கரன்ஸி பலத்தால் இங்கே இன்னும் என்னென்ன மேஜிக்குகளை செய்யப் போகிறார்களோ? பொறுத் திருந்து பார்ப்போம்.
-து.ராஜா, செம்பருத்தி
______________________
வளைக்கப்படும் கட்சிப் புள்ளிகள்!
மணல் மாஃபியாக்கள் பற்றி நம் காதுக்கு வரும் தகவல்கள் பலவும் அதிர்ச்சி ரகத்தைச் சேர்ந்தவை. மணல் குவாரிகளை தடுக்கும் விதமாக எதிர்கட்சிகளிடமிருந்து எந்தக் குரலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலான கட்சிகளின் மாநிலத் தலைவர்களை மணல் மாஃபியாக்கள் சந்தித்து, கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து, அவர்களின் வாயை அடைத்துவிட்டார்களாம். அதிலும், கட்சிகளின் வேல்யூக்கு தகுந்தார்போல் அந்த கவனிப்பு இருந்ததாம். மேலும், மாதந்தோறும் கவனிப்பு இருக்கும்’என்ற உத்திரவாதமும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளதாம்.
________________
டீலிங்கும் காணிக்கையும்!
பவர் செக்டார் குடும்பப் பிரமுகர் ஒருவரிடமும் டீலிங் நடந்திருக்கிறதாம். வருமானத்தில் 50 சதவீதம் என்று டிமாண்ட் வைக்கப்பட... டீலிங் பேசியவர்களோ, உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால், அந்தந்த பகுதி ஊராட்சிமன்றத் தலைவர், சேர்மன், கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களையும் கவனிக்க வேண்டும், இல்லையேல் சிக்கல் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதனால் ஆந்திராவில் தருவதுபோல் 30 சதவீதம் தருகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். எனினும், டீலிங் தொடர்கிறதாம். இந்த நிலையில், கிச்சன் கேபினட் வழியாக சில மூவ்கள் நடந்திருக்கின்றன. பெங்களுரூ உறவு ஒருவர் மூலம் முதற்கட்டமாக 500 "சி' கை மாறியதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே அண்மையில் தன் திருமணநாளைக் கொண்டாடிய ஒரு பவர் புள்ளிக்கு, 5 கிலோ தங்கத்தை மணல் புள்ளிகள் காணிக்கையாகச் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.