Skip to main content

கமலுக்கு ஆபத்து! குறிவைக்கும் கோட்சேக்கள்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என கோட்சேவைக் குறிப்பிட்டு கமல் பேசிய வார்த்தைகளால் அதிகம் அலறியது, நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம்தான். அரவக் குறிச்சியில் முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதியில் வாக்கு சேகரித்த கமலின் இந்தப் பேச்சு வெளியானதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடனடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தைக் கூட்ட உத்தரவிட்டார் என்கிறார்கள் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

d


ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பில் கோட்சே அஸ்தி!

திடீர்க் கூட்டம் நடை பெற்ற இடத்திற்கும் கோட்சே விற்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இந்தியா விலிருந்து kamalபிரிக்கப்பட்ட பாகிஸ் தான் உட்பட பல நாடுகளை இணைத்து அகண்ட பாரதம் உருவாக்க நினைத்த கோட்சே, காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, மரண தண்டனைக்குள்ளானான். அப் போது தனது உயிலில் அகண்ட பாரதம் உருவாகும் வரை தனது அஸ்தியை கரைக்கக் கூடாது என சொல்லியிருந்தான். அதனால் கோட்சேவின் அஸ்தி கரைக்கப் படாமல் ஆர்.எஸ்.எஸ்.சின் நாக்பூர் தலைமை அலுவலகத்தில் ஒரு வெற்றுக் கோப்பையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. தினமும் அதற்கு மாலை அணிவித்து விட்டுதான் ஆர்.எஸ்.எஸ். தலைமை யகத்தின் பணிகள் தொடங்கும். அதனால்தான் கமல் பேச்சால் அதிர்ந்தது ஆர்.எஸ்.எஸ். பீடம்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, கமலின் பேச்சு அரசியல்ரீதியாகத் தனக்கு லாபம்தான் எனக் கருதியது. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் பெருமளவில் தி.மு.க. பக்கமும் அதனையடுத்து, தினகரன் பக்கமும் போகும் நிலை யில், கமலையும் இந்து விரோதியாகக் காட்டினால், பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் அவர் பக்கம் செல்லும், அதன் மூலம் தி.மு.க.வின் எதிர்கால வெற்றிகளைத் தடுக்கலாம். பா.ஜ.க. வையும் தமிழகத்தில் வளர்க்கலாம் என்பதுதான் பா.ஜ.க. மேலிடக் கணக்கு. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதனால், பா.ஜ.க.வுக்கும் வேறு வழியில்லை.

இந்து தத்துவ அரசியல்!

பா.ஜ.க.வின் பொதுச் செய லாளராக உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியரான ராம் மாதவ் தலைமையில் கமல்ஹாசனின் பேச்சை எப்படி எதிர்கொள்ளலாம் என வியூகம் அமைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இந்த உலகத்தை வசுதேவ குடும்பம் என வர்ணிக்கிறது. உலகத்தில் உள்ள அனைவரும் இந்த வசுதேவ குடும்பத்தின் உறுப்பினர்கள். இந்த குடும்பத்தில் உள்ள அனைவரை யும் எந்த வித்தியாசமில்லாமல் இந்து மதம் ஒருங்கிணைக்கிறது என்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். இந்து மதம் உயர்ந்தது என சொல்கிறது. இந்து மதத்தில் கொலை செய்யும் எண்ணம் அறவே இல்லை. தீவிரவாதி களுக்கு இந்து மதத்தில் இடமில்லை. தீவிரவாதியாக இருப்பவர் இந்துவாக இருக்க முடியாது என்பது அதன் நிலைப்பாடு.
dd
ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளுடன் இந்து மகா சபையில் வளர்ந்த நாதுராம் கோட்சே அகண்ட பாரதம் அமைவதற்கு தடையாக இருந்த மகாத்மா காந்தியை கொன்றார். அதனால்தான் கோட்சேவை கமல் இந்து மதத்துடன் சம்பந்தப்படுத்தி னார். ஐ.எஸ். தீவிரவாத அமைப் போடு தொடர்புடைய அஜ்மல் கசாப்பை முஸ்லிம் தீவிரவாதி என அழைப்பதைப் போல நாதுராம் கோட்சேவை கமல் இந்து தீவிரவாதி என அழைத்துள்ளார். இது இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நாம் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத் திற்கும் நாம் அவர்களுக்கு சுமத்தி யிருக்கும் தீவிரவாத முத்திரைக்கும், அது ஓட்டு அரசியலில் சாதகமாக இருப்பதற்கும் எதிரான பெரிய தாக்குதல்.

அரசியல் சூழல்களால், மகாத்மா காந்தியை தேசப்பிதா என பா.ஜ.க. தலைவர்களே வணங்கும் போது அவரை கொன்றவர் இந்து தீவிரவாதி என வர்ணிப்பது ஒட்டுமொத்த பா.ஜ.க.வையே மக்கள் மத்தியில் இருந்து அழித்துவிடும் என ஆர்.எஸ்.எஸ்.சின் ஒட்டுமொத்த கூடாரமே யோசித்தது. கமலின் சொல் பிரயோகம் இந்துத்வா தத்துவத்தின் அஸ்திவாரத்திற்குள் செலுத்தப்பட்ட குண்டு என கொந்தளித்தது. அதற்கு எதிரான கட்டளைகள் உடனடியாக நாக்பூரிலிருந்து பறந்தன. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கமல் பேசியுள்ள நிலையில், எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு என விவாதிக்கப்பட்டது.

பற்ற வைத்த தலைமை!

தேர்தல் நேரத்தில் மதம் தொடர்பாக பேசக்கூடாது என யோகி ஆதித்யநாத்திற்கும் மாயாவதிக்கும் குறிப்பிட்ட சில மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் பேசிய பேச்சுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்தான் தடைவிதித்தது. எனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு போட பா.ஜ.க.வின் வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் இருந்து உத்தரவு பறந்தது. கோட்சேவை இந்து தீவிரவாதி என்ற கமலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளை உருவாக்குங்கள் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு கட்டளை பறந்தது.

அரசியல் கட்சிகள் சார்பில் எதிர்ப்புகளைக் கிளப்புவதுடன், மத அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் வழியாகவும் எதிர்ப்புகளை முடுக்கி விடத் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்துதான் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னர் ஜீயர், இந்துக்களைப் பற்றிப் பேசிய கமல் நடமாட முடியாது என்றும், கமலுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்ப தாகவும் கொளுத்திப் போட் டார். ஜக்கி, ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களையே பா.ஜ.க. விரும்பிவரும் நிலையில், கட்சியின் கவனத்தை ஈர்க்க மன்னார்குடி ஜீயர் இந்த உத்தியை கையிலெடுத்து, தனக்கான பிரபலத்தைத் தேடிக் கொண்டார் என்கிறார்கள் அவரது வட்டாரத்தினர்.

kk


பிரதமருக்கு உத்தரவிட்ட ஆர்.எஸ்.எஸ்.!

பிரதமர் நரேந்திர மோடிக்கும், கமலின் பேச்சை எதிர்த்துப் பேசுங்கள் என உத்தரவு பறந்தது. அவரும் உடனே நியூஸ் எக்ஸ் சேனலை அழைத்து பேட்டி கொடுக்க தயாரானார். அந்த பேட்டியின் ஹைலைட்டாக கமலின் பேச்சு பற்றிய கேள்வி எழுப்புமாறு, பிரதமர் அலுவலகம் நியூஸ் எக்ஸ் சேனலை கேட்டுக் கொண்டது. ஏற்கனவே இது போல ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு டி.வி. பேட்டி யில்தான், "மேகத்துக்குள் ராணுவ விமானங்கள் சென்றால் எதிரியின் ரேடாரை ஏமாற்றிவிடலாம் என்பதால், மோசமான வானிலை காரணமாக ரேடார்கள் சரியாக செயல் படாத சூழலைப் பயன் படுத்தி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க நான் உத்தர விட்டேன்' என ரேடார் பற்றியும் விமானப் படை தாக்குதல் பற்றியும் உளறிக் கொட்டிய மோடியின் வார்த் தைகள் இந்திய அளவில் பெரும் கேலிக்குள்ளாகி, தேர்தல் நேரத்தில், பா.ஜ.க. வையும் அதன் ஆதரவாளர் களையும் பெரும் சங்கடத் திற்குள்ளாக்கின.
kk
அதிலிருந்து தப்பிக்க வசதியாக, கமலின் பேச்சு பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் உதவும் என்பதால் மோடி உற்சாகமாக அந்த கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமான வசுதேவ குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, "தீவிரவாதியாக இருப்பவன் நிச்சயம் இந்து அல்ல' என பதிலளித்தார். தமிழ்நாட்டிலும் கமலுக்குப் பதில் தர வேண்டும் என்பதற் காக நியூஸ் எக்ஸ் சேனல் எச்.ராஜா போன்ற தமிழக தலைவர்களிடமும் பேட்டி எடுத்தது. பிரதமரின் கமல் பற்றிய கேள்விக்கான பதிலை மட்டும் ஹைலைட் செய்து ஒளிபரப்பியது.

முதல்வர்-தலைமைச் செயலாளருக்கு அசைன்மெண்ட்!

அதே நேரத்தில், ஆர்.எஸ். எஸ். தலைமை ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலா ளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை தொடர்பு கொண் டது. ஆர்.எஸ்.எஸ். சொன்னதற் கேற்ப எடப்பாடியும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டார். கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் கூறியிருப் பதை சுட்டிக்காட்டி, "கமலின் நாக்கை அறுப்பேன் எனச் சொல் லுங்கள்' என்றார்.. கிளிப்பிள்ளை போல ராஜேந்திர பாலாஜியும் சொன்னார். அத்துடன் வழக்க மாக கமலை திட்டும் அமைச்சர் ஜெயக்குமாரிடமும் எடப்பாடி பேச, ஜெயக்குமாரும் கமலை விமர் சித்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் கோட்சே பற்றி கமல் பேசிய அரவக்குறிச்சியில் வழக்குப் போடச் சொன்னது ஆர்.எஸ். எஸ். மேலிடம். கிரிஜாவும் தமிழக தேர்தல் கமிஷனர் சத்ய பிரதா சாகு மூலம் கமல் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத் திடம் "கமலின் மக்கள் நீதி மய் யத்தை தடை செய்ய முடியுமா' என ஆர்.எஸ்.எஸ். கேட்டது. தேர்தல் ஆணையம், "கமல் மீது போலீசார் மூலம் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஒரு பேச்சுக்காக ஒரு கட்சியை தடை செய்ய முடியாது. அந்த வாதப்படி பார்த்தால் முஸ்லிம் களை எதிர்த்து பா.ஜ.க. பல முறை பேசியுள்ளது. அந்த விவகாரம் கோர்ட்டுக்கு போகும்' என மறுத்தது.

நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள்!
kk
கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன் றத்தில் தொடர்ந்த வழக் கிலும், கமல் மீது தமிழகத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது என தனது பதிலையும் தேர்தல் ஆணையம் பதிவு செய் தது. அதனடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் கமலுக்கெதிரான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தமிழக அரசு பதிவு செய்த வழக்குக்கு எதிராக கமலும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வியாழனன்று, பா.ஜ.க.வின் போபால் தொகுதி வேட்பாளரும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை எதிர்கொள்பவரு மான சாத்வி பிரக்யா ஆவேச மாக, "கோட்சே ஒரு தேச பக்தர். அவரை தீவிரவாதி என்பவர்கள் தண்டிக்கப்படு வார்கள்' என்றார். இது தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை உண் டாக்க, அவரது கருத்துக்கு சொந் தக் கட்சியான பா.ஜ.க. கண்டன அறிக்கை வெளி யிட வேண்டியதாயிற்று. டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மூலம் புதிய மனு தாக்கல் செய்யப் பட, "கமல் பேசியதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள், அதனடிப்படையில்தான் அவருக்கு சம்மன் அனுப்புவதா வேண்டாமா' என முடிவு செய்யப்படும் என்றது.

சட்டரீதியாக கமல் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லையென்றால், சட்டத்தைக் கையில் எடுத்து, கமலைக் குறி வைப்பது, அவருக்கு அரசியல் களத்திலும் தனிப்பட்ட செயல்பாடுகளிலும் ஆபத்தை உண்டாக்குவது என்பதே இந்துத்வா சக்திகளின் லேட் டஸ்ட் வியூகம். இதற்காக ஆர்.எஸ்.எஸ். அபிமான நவீன கோட்சேக்களின் கூட்டம் ரெடியாகிறதாம்.

-தாமோதரன் பிரகாஷ்

________________
சரித்திர உண்மை!

அரவக்குறிச்சியில் கமல் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இரண்டு நாட்கள் அவர் எங்கும் பிரச்சாரம் செய்யாமல் kkஇருந்தது, மேலும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், மே 15 அன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தார்.

தோப்பூர், விரகனூர், பழங் காநத்தத்தோடு வேகவேகமாக முடித்துவிட்டு பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று தனது ஆதரவாளர் களோடு ஆலோசனையில் ஈடுபட்டார். கமல் பிரச்சாரம் பாதியில் ரத்து என செய்தி பரவியது. ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் பிரச்சாரத்தை தொடர்ந்த கமல் வில்லாபுரம், அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் பொதுக் கூட்ட மேடைக்கு பலத்த பாதுகாப்போடு வந்தார்.

பக்கத்தில் உள்ள சிறிய சந்திலிருந்து அனுமன் சேனா, இந்துமுன்னணியை சேர்ந்த 11 பேர் செருப்பு வீசி, "இந்து நாடு எங்கள் நாடு கமலே இங்கிருந்து ஓடு' என கோஷம் போட்டபடி, போலீசிடம் சிக்கினர். "இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்பட மாட்டேன்' என மைக்கைப் பிடித்த கமல், "இது வட நாடல்ல பக்குவப்பட்ட தமிழ்நாடு. நான் பேசியதி லிருந்து என்றும் பின்வாங்க மாட்டேன். நான் சொன் னது சரித்திர உண்மை. "கோட்சே தீவிரவாதி என்பதில் மாற்றமில்லை.. காந்தியை கோட்சே சுட வில்லை என்கிறார்களா?' என்று ஆவேசமானார்.

கோட்சே பற்றிய கமலின் பேச்சுக்கு 76 புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் கமல். தான் பேசியவற்றை வேண்டு மென்றே திரித்து வெளியிடுவ தாக கமலின் மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், "கோட்சே பற்றி கூறுவதற்கு இந்து என்ற அடையாளம் தவிர வேறு இல் லையா?'‘ எனக் கேட்டதுடன், "தேர்தல் முடியும்வரை ஊடகங் கள்-அரசியல் கட்சிகள் இது பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என வலியுறுத்தி, மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதற்கிடையே, கமலின் நாக்கை அறுக்கவேண்டும் எனப் பொங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார்களை வேகப்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது மக் கள் நீதி மய்யம்.

-அண்ணல்

________________
ஹேராம்!

kk

"காந்தியைக் கொன்ற கோட்சேவின் தீவிரவாதம் பற்றி "ஹேராம்' படத்திலேயே தெரிவித்திருக்கிறேன்' என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் பேசினார் கமல். 1999-ல் கமல் இயக்கத்தில் வெளியான ஹேராம் படத்தில், காந்தியின் கொள்கைகளை வெறுக்கும் சாகேத்ராம் என்ற பிராமணர் கேரக்டரில் கமல் நடித்திருப்பார். காந்தியை சுட்டுக் கொல்ல இந்துத்வா இயக்கத்தினருடன் சாகேத்ராம் திட்டமிட்டு, அதற்காக செல்லும்போது, காந்தியின் அருமையை உணர்வார். சாகேத் ராமின் கொலைத்திட்டம் கைவிடப்படும். ஆனால், இந்துத்வா அமைப்பில் பயிற்சி பெற்ற கோட்சே, காந்தியை சுட்டுக் கொல்வார். அப்போது, காந்தியைக் கொன்றவன் இந்து என்பதும் படத்தில் வெளிப்படும்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்