கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மார்ச் 16ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இன்று நூறு நாட்களைக் கடந்தும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாததால், பொதுத்தேர்வுகளை நடத்த முடியவில்லை. 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகளையும் தொடங்க இயலவில்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, கட்டணக் கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுகின்றன.

cதனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று விமர்சனங்கள் கடுமையாக உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டு மல்ல, தனியார்ப் பள்ளிகள் என்றாலும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பானது நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களிடையே வேறுபடுகிறது. காணொளி வகுப்புக்கான ஸ்மார்ட்போன், லேப்டாப், இணைய வசதிகள் எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது.

2017-18 தேசிய மாதிரி கருத்துக்கணிப்பு, நகர்ப்புறங்களில் 42 சதவீதம் வீடுகளிலும், கிராமப் புறங்களில் 15 சதவீதம் வீடுகளில் மட்டுமே இணைய வசதி இருக்கிறது என்கிறது. அதனால், நகர்ப் புறத்திலும் வசதி’படைத்தவருக்கே ஆன்லைன் வகுப்பு என்ற பாகுபாடு உருவாகிறது. இவையனைத்தும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கே துணை போகிறது என்கிறார்கள்.

ஊரடங்கு நெருக்கடியில் பொருளாதாரம் முடங்கிப்போன பெற்றோர், தனியார் பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு களுக்காகவும், கல்விக் கட்டணத்துக்காகவும் திண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மன, உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரையுள்ள குழந்தை களுக்கான ஆன்லைன் வகுப்புகளை கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில அரசுகள் தடை செய்துள் ளன. தமிழ்நாட்டிலோ எல்.கே.ஜி. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.

Advertisment

துள்ளிக் குதிக்கும் பச்சிளம் பருவத்தில், ஊரடங்கால் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்லைன் கல்வி மேலும் மன உளைச்சலையே தரும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிறார் எழுத்தாளரான விழியன், ""இந்த ஊரடங்கு காலத்தில் வகுப்பறைக்கு மெய்நிகரான ஒரு கட்டமைப்பு மட்டுமே, ஆசிரியர்-மாணவர்- பெற்றோர் தொடர்பை சமன்செய்யும். 25 ஆண்டு களுக்கு முன்பு இப்படியொரு பெருந்தொற்று நேர்ந்திருந்தால் என்ன மாற்றுவழி யோசித் திருப்போமோ, அதனோடு தற்போதைய தொழில்நுட்ப வாய்ப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

வளர்ந்து வரும் இளம் பருவக் குழந்தைகளை தவறான வழிக்கு இழுத்துச்செல்ல தற்போதைய செல்போன் தொழில்நுட்பம் போதுமானதாக இருக்கிறது. பெற்றோருக்கே செல்போனை உபயோகிக்கும் வழிகளை பிள்ளைகள்தான் கற்றுத் தருகிறார்கள். எனவே, அனைத்துத் தரப்பு குழந்தைகளும், மாணவர்களும் பாதுகாப்புடன் பயன்படுத்தும் விதமாக, ஒரு தொழில்நுட்பத்தை அரசு கூடியவிரைவில் உருவாக்கித் தரவேண்டும். முக்கியமாக, வகுப்பறைக்கு ஆன்லைன் வகுப்புகள் மாற்று என்ற பிரச்சாரத்தை முதலில் நிறுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

பாகுபாடுகள் நிறைந்த நம் இந்திய சமூகத்தில், அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. இப்படியிருக்க, வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கல்வி கற்க முடியுமென்றால், மீண்டும் குலக்கல்வியை நோக்கி செல்கிறோமோ என்ற அச்சம் உண்டாகிறது. இவர்களுடன்தான் வசதி வாய்ப்பற்ற, கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள் ஒன்றாக தேர்வெழுதி தங்களது திறனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்று வேதனையை வெளிப்படுத்தும் தோழமை அமைப்பின் இயக்குனர் தேவநேயன், ""ஏற்கனவே தாமதமாகி விட்டதால், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக காரணம் சொல்கிறார்கள். 2011ல் சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வரான உடனேயே, அதைத் தரமற்றது என அறிவித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, செப்டம்பரில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பிறகே வகுப்பறையில் பாடம் நடந்தது. இப்போது மட்டும் ஏன் இத்தனை அவசரம். ஒவ்வொரு பேரிடருக்குப் பின்னும் குழந் தைத் தொழிலாளர்களும், குழந்தைத் திரு மணங்களும் அதிகரிக்கின்றன என்பது எங்கள் களப்பணியில் கிடைத்த தகவல். இதற்கு கொரோனாவும், இதில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் காரணமாகிவிடக் கூடாது.

Advertisment

oo

இந்த நெருக்கடியான தருணத்தில் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்களின் மூலமாக ஆலோசனைகள்தான் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஆன் லைன் வகுப்புகள் அல்ல. பள்ளிக்கல்வித்துறை அமைத்திருக்கும் உயர் மட்டக் குழுவில் மாணவர் நலன்சார்ந்த கல்வியா ளர்களும், ஆசிரியர்களும் இல்லாததும் வேதனைக் குரிய விஷயம்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

ஆன்லைன் வகுப்புகள் நம் எதிர்கால சமூகத்தை பேராபத்தில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ""உலக வர்த்தக அமைப்பின் கீழ், சேவை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து, எந்த நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகமும், எந்த நாட்டிற்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்; அதை அனுமதிக்க வேண்டும் என்கிறது. இதன்மூலம் உள் நாட்டு அறிவுக்கான வேலை இல்லாமல் போகிறது. மனித உரிமை, கண்ணியமான வாழ்வு என்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், சந்தைக்கு லாபத்தை ஏற்படுத்தித் தரும் உற்பத்தி இயந்திரங்களாக பிள்ளைகளை மாற்றும் முயற்சியே இது. நடை முறைக்கு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் பெரும்பகுதி இதையே வலியுறுத்துகிறது.

குழந்தைக்கான முழுமையான கற்றல் செயல்பாடு வகுப்பறையில்தான் நடக்கிறது. அங்குதான் கேள்வி எழுப்பவும், விவாதம் நடத்தவும் செய்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கான உரையாட லையே குழந்தைகளுக்கு வழங்காத ஆன்லைன் கல்விமுறையை, பேரி டர் காலத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி மக்களிடையே பழக்கப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்ற நோக்கம்தான் இதன் பின்னணி. நாளை இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பேரிடர் காலத்திலேயே ஆன்லைன் மூலமாகத்தானே பிள்ளைகள் படித்தார்கள் என்று கேட்பதற்கான ஏற்பாடுதான் இது.

கல்வியியல் செயல்பாட்டில் இருந்து ஒரு சமூகம் விலகுகிறது என்றால், அது ஆபத்துக்கான அறிகுறி. வேலை வாய்ப்புக்கான திறன் மட்டுமே கல்வி அல்ல. சமூகத்தை சமத்துவப்படுத்துவது, மக்களை ஒன்றுபடுத்துவது, மனித சிந்தனைகளை மேம்படுத்துவதுதான் கல்வியின் பணி. இதை ஆன்லைன் கல்வி ஒருபோதும் வழங்காது'' என்றார் அழுத்தமாக.

-ச.ப.மதிவாணன்

____________________

வகுப்பறைக்கு இணையாகுமா?

dd

வசதி வாய்ப்புகள் போன்ற காரணங்களால் பெற்றோர், குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகும் நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் ஏராளம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், “""வகுப்பறையில் கண்ணைக் காட்டினாலே அமைதியாகிவிடும் குழந்தைகள், கம்ப்யூட்டரின் முன்பாக சுதந்திரமாக ஓடி விளையாடுகிறார்கள். இல்லையென்றால் படுத்து உறங்குகிறார்கள். இதற்காக குழந்தைகளின் தாத்தா, பாட்டியை உடன் வைத்தே வகுப்பு களை நடத்துகிறோம். தொழில்நுட்ப வசதி இல்லாத காரணங்களால் சரிபாதி குழந்தைகள் வகுப்பில் கலந்து கொள்வதில்லை. மிக முக்கியமாக வகுப்பறைக்கு இணையான சூழலை ஆன்லைன் வகுப்பில் துளியளவும் கொண்டு வரமுடியாது. நாம் சொல்லித்தந்த விஷயம் மாணவர்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பதைப் புரிந்துகொள்வதும் கடினம். வகுப்பு நடக்கும்போது மாணவர்களை மியூட்டில் வைத்திருப்போம். வகுப்பு முடியும்போது ஐந்து நிமிடம் சந்தேகங்களை எழுப்புவதற்காக ஒதுக்குகிறோம்'' என்றார் நம்மிடம்.

கண்ணைக் கெடுக்கும் ஆன்லைன்!

கட்டாய ஆன்லைன் வகுப்புகளால், குழந்தைகளின் பார்வைத் திறனில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள். ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி போன்ற மின்திரை தொழில்நுட்பங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, குழந்தைகளின் கண்களை நேரடியாக பாதிக்கின்றன. கண்களில் இருக்கும் கார்னியா எனப்படும் விழி வெண்படலமும், சிலியரி தசைகளும் பாதிக்கப்படுவதால் கண்களில் வலி, ஈரப்பதம் குறைந்து தலைவலி ஏற்படுவது, சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீண்டநேரம் மின்திரையைப் பார்ப்பதால் இமைகளை மூடுவதும் குறைகிறது. இதனாலும் கண்கள் பாதிப்படைகின்றன.

தொடர்ந்து மணிக்கணக்கில் ஆன்லைன் வகுப்புக்கான கேட்ஜெட்டுகளை பார்ப்பதால் சிரமத்துக்குள்ளாகும் குழந்தைகள், சிறுவயதிலேயே கண்ணாடி அணியவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகிறார்கள். இதிலிருந்து விடுபட குழந்தைகளுக்கு கண் பயிற்சி கற்றுக் கொடுக்கலாம். பார்வைத் திறனை வளப்படுத்தும் உணவு வகைகளைக் கொடுக்கலாம். நீண்ட நேரம் மின்திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்யலாம். பாதிப்பின் வீரியம் அதிகமாக இருந்தால், கண் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது என்கிறார்கள்.