"ராமநாத சுவாமி திருக்கோவில் பெயரை பயன்படுத்தி போலியான வலைத்தளம் உருவாக்கி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களிடம் சட்டவிரோதமாக வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலின் இணை ஆணையர்.
இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்கத் தலம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில். வருடந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் இக்கோவிலில், கட்டணமில்லா தரிசனம் (இலவச தரிசனம்) ரூபாய் 100 மற்றும் ரூபாய் 200 மதிப்பிலான விரைவுக் கட்டண தரிசன வரிசை முறைகள் ஏற்படுத்தப்பட்டு பக்தர் கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கோவில் மூலம் பன்னீர் அபிஷேகம், கோடி தீர்த்த அபிஷேகம், கங்காபிஷேகம், ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், 1008 கலச அபிஷேகம், 1008 வெள்ளிக் கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், 108 கலச அபிஷேகம், 108 வெள்ளிக் கலச அபிஷேகம், விபூதி அபிஷேகம் போன்ற அபிஷேகங்களும் பக்தர்களின் வேண்டுதலுக்காக இக்கோவிலில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனிக்கட்டணம் உண்டு. உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள், தரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்கு முன்பதிவு செய்து பயன்பெறும் வகையில் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான "https://www.rameswaramramanathar.hrce.tn.gov.in" பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் ராமநாதசுவாமி திருக்கோவில் பெயரில் போலியான வலைத்தளங்களை இயக்கி பக்தர்களை ஏமாற்றி பணம் பார்த்து வருகின்றனர் சைபர் க்ரைம் குற்றவாளிகள்.
"சமீபத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து ஜெய்சுக்பாய் என்பவர் திருக்கோவிலுக்கு வந்து, 18.08.2025-ல் காலை 8.00 மணிக்கு நடைபெறும் ருத்ராபிஷேகம் பூஜை வகைக்கு ரூ.5,499/-செலுத்தியுள்ளேன். இன்னும் ஏன் ஆரம்பிக்க வில்லை? என ரசீதுடன் வந்து கேட்கையில்தான், மோசடி யான வலைத்தளத்தில் சிக்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்து அவர் ஏமாந்திருக்கின்றார் என்று எங்களுக்கு தெரியவந்தது. அதுபோல், உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து 30.08.2025 தரிசனத்திற்கு வருகை தந்த பிரியங் ரஸ்டோகி மோசடியாக, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, (Booking ID No. YPJP100600285, Payment INR 4899 via UPI. Transaction ID T2508291517237202664327 in favour of Yatradhameservi648852.rzp@raxi) நடவடிக்கை எடுக்கக் கேட்டு புகார் மனு அளித்தார். இரு வேறு புகார்களால் விழிப்படைந்த நாங்கள், இதனை கண்டறிய புதிய மொபைல் எண், இமெயிலைக் கொண்டு தூண்டில் போட்டோம். அப் பொழுதுதான் இந்த வலைத் தள மோசடி தெரிந்தது. இத்தகைய மோசடிகளை தடுக்கவும், மக்கள் விழிப் படையவும் அத்தனை ஆதா ரங்களையும் சேகரித்துக் கொண்டு காவல்துறையிடம் புகார் கொடுத் துள்ளேன்'' என்கிறார் ராமநாதசுவாமி திருக்கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரை.
போலி வலைத்தளமான www.yatradham.org வலைத்தளப் பக்கத்தில் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும் என திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் திருக்கோவில் பணியாளரான ரஞ்சித்குமார் என்பவ ரது அலைபேசி எண்ணை பதிவுசெய்து காத்திருந்த பொழுது www.yatradham.org சார்பாக பேசியவர் இந்தியில் பேசியிருக்கின்றார். அதனால் இந்தி தெரிந்த இன்னொரு திருக்கோவில் பணியாளரான நாகராஜனை வைத்து பேசி அதனை ஆடியோவாக பதிவு செய்திருக்கின்றது கோவில் நிர்வாகம். இதுபோல் விசாரணை யை திருக்கோவில் நிர்வாகம் துரி தப்படுத்திய நிலையில் ராமேஸ் வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்த மான வலைத்தளம் என்பதுபோல்(https://temple.yatradham.org/puja/rameshwaram- rudrabhishek -puja,https://dorituals.com/listing/rudrabhishek -at -rameswaram, https://gotirupati.com/rameswaram -rudrabhishekam மற்றும் https://www.panditinrameshwaram.com) நான்கு போலியான வலைத்தளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டம் மற்றும் COLLECTION OF INCOME AND THE INCURRING OF EXPENDITURE RULES #6 Indian Penal Code (Central Act XLV of 1860) என்று வகைப்படுத்தப்பட்டதின் மூலம் இவ்வாறான சட்டவிரோத வசூல்கள் இந்திய தண்டனை சட் டத்தின்கீழ் (தற்போது பாரதிய நியாய சன்ஹிதா) தண்டிக்கப்பட வேண்டிய குற்றச்செயல்பாடுகள் ஆகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 23-ன்படி முறைகேடான வழியில் இலாபமடைதல், முறைகேடாக நஷ்டம் ஏற்படுத்துதல், தவறான வழியில் இலாபமடைதல், தவறாக நஷ்டம் ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.. மேலும் புதிய சட்டமான BNS (Bharatiya Nyaya Sanhita) திருக்கோயில் தொடர்புடைய பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் தொடர்பாக கட்டணம் மற்றும் நன்கொடைகளை தனி நபர்கள் பெறுவது சட்டப் பிரிவு 2(36), 2(37), 2(38)-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை இது சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுத்து மோசடி நபர்களிட மிருந்து திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர் களை காக்கவேண்டுமென்பதே கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோள்.
-நா.ஆதித்யா