பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்ஸ்னோரா புதிய தொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டுள்ளார். ஏற்கெனவே கொரோனா தொற்றை சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் சுமத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்றைத் தடுக்க பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்தை வாங்க ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
இதுவரை பிரேசிலில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைத் தடுக்க பிரேசில் அரசு பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பிப்ரவரி மாதம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 2 கோடி டோஸ்கள் வாங்க 324 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது பிரேசில். அந்த ஒப்பந்தத் தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளிடமிருந்து வலுவான குரல்கள் எழுந்ததையடுத்து அந்த ஒப்பந்தத்தை அவசர அவசரமாக ரத்துசெய்திருக்கிறது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து ஒரு தடுப்பூசியின் விலை ரூ.1115.25 என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்த பிரேசில், இதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ரூ.334.57 கோடி முன்பணமும் கொடுத்த நிலையில் ஒப்பந்தத்தை பிரேசில் ரத்து செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகளோ, ""மருந்து வாங்குவது இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்திடம். முன்பணம் மட்டும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் செலுத்தப்பட்டுள்ளது ஏன்? தவிரவும், இதைவிட குறைவான விலையில் தடுப்பூசிகள் கிடைக்கும்போது கூடுதல் விலையில் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது சரியா?'' என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிவருகின்றன.
கோவாக்சினை விநியோகிக்கும் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக்கும், இந்த ஒப்பந்தத்துக்காக நாங்கள் எந்த முன்பணமும் வாங்கவில்லை, இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவ்விவகாரத்தில் எல்லா நடவடிக்கைகளும் மின்னஞ்சல் தொடர்பு மூலம் முறையாகவே நடந்துள்ளன என்கிறது.
பிரேசில் சுகாதார அமைச்சர் மார்செலோ கிரோகா, ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லையென மறுத்துள்ளார். இதையடுத்து இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
முறைகேடு நடக்கவில்லை என பிரேசில் சுகாதாரத்துறையின் இறக்குமதிப் பிரிவின் தலைவரான லூயிஸ் ரிக்கார்டோ மிராண்டாவும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின்போது, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை அனைவருக்கும் வழங்கப் பட்டதும் ஏற்கெனவே சர்ச்சையாகியிருந்த நிலையில், புதிய ஊழல் புகாரும் சேர்ந்து கொள்ள அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஜெய்ர் போல்ஸ்னோரா மக்களின் அதிருப்தியை தாராளமாகச் சம் பாதித்துள்ளார்.