நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் மார்க்கரெட் தெரசா. இதே மாவட்டத்தில் வி.கே.புரம் நகரைச் சேர்ந்தவர். 2016-ஆம் ஆண்டில் டைரக்ட் எஸ்.ஐ.யாகப் பணியில் சேர்ந்தவர். கடந்த ஓராண்டாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியிலிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்வதாகப் பெயரெடுத் தவர் மார்க்கரெட் தெரசா.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவூர் பால் பண்ணைத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ஆறுமுகம் (40) குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்திருக்கிறார். அது சமயம் வாகனச் சோதனையிலிருந்த எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா, பைக்கில் வந்த ஆறுமுகத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் குடிபோதையில் பைக் ஓட்டி வந்தது தெரிய வர, குடி போதையில் வாகனம் ஓட்டியதற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டக்கூடிய வழக்கைப் பதிவு செய்து அபராதம் விதித்தார்.
தன்மீது குடி போதைக்கான பத்தாயிரம் ரூபாய் அபராத கேஸ் போட்டதால் பெண் எஸ்.ஐ. மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் ஆறு முகம். திருமணம், ஆலய விழாக்கள் மற்றும் பொது இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள் கட்டுகிற கூலித் தொழிலாளியான ஆறு முகம், தொழிலின் பொருட்டு தன்னிடம் எப்போதும் மடக்குக் கத்தி வைத்திருப்பாராம். இந்தச் சூழலில் பழவூரிலுள்ள உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடைத் திரு விழாவின் பாதுகாப்புக்காக எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா உள்ளிட்ட போலீசார், கடந்த 22-ம் தேதி இரவு சென்றிருக்கிறார்கள். அந்த கொடை விழாவிற்கு ஆறு முகமும் வந்திருக்கிறார். அங்கே எஸ்.ஐ.யைப் பார்த்ததும் ஆத்திரமடைந் தவர், அவரைப் பழி தீர்ப் பதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துத் திட்ட மிட்டிருக்கிறார்.
நடு இரவு 12.45 மணியளவில் எஸ்.ஐ. மார்க்க ரெட் தெரசா விழா நடக்கு மிடத்தின் ஓரத்தில் நின்றிருந்தபோது திடீரென்று தன் மடக்குக் கத்தியோடு பாய்ந்துவந்த ஆறுமுகம், "என்னய அன்னைக்கி டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ் போட்டு அபராதம் போட்டவ தான நீ. ஒன்னயக் கொல்லாம விடமாட்டேன்'' என்று கத்தியபடி தன் கத்தியால் எஸ்.ஐ.யை வெட்ட முயல, எதிர்பாராமல் வந்தவ னைக் கண்டு சுதாரித்த பெண் எஸ்.ஐ., தனது கையால் தடுக்க, வெட்டு அவரது தலையில் விழாமல் போக, வெறியானவன், எஸ்.ஐ.யின் கன்னம், கழுத்து, நெஞ்சுப் பகுதிகளில் குத்திக் கீறி யிருக்கிறான். படுகாயமுற்ற எஸ்.ஐ. கதறியபடி மயங்கிச் சரிந்திருக்கிறார். உடனே அருகிலிருந்த சக போலீசார் ஆறுமுகத்தை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். அந்த சம்பவத்தால் பதறிய போலீசார், வெட்டுக்காயங்களோடு மயங்கிய எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசாவை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஆரம்பகட்டச் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, பிடிபட்ட ஆறுமுகத்தை சுத்தமல்லி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போலீசாரிடம், "எஸ்.ஐ., எம்மேல டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ் போட்டு பத்தாயிரம் அபராதம் போட்டதால, ஆத்திரத்தில் வெட்டினேன்" என்று தெரிவித்திருக்கிறாராம். பெண் எஸ்.ஐ.யை வெட்டிக் கொல்ல முயன்ற தகவலால் நெல்லை காவல்துறையே பரபரப்பானது. தகவலறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன், பின்னிரவு இரண்டு மணியளவில் பாளை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையிலிருந்த எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசாவுக்கு ஆறுதல் தெரிவித்து, நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.
"எதிர்பாராமல் தன்னை வெட்ட முயன்றபோது சுதாரித்து சமயோஜிதமாக எஸ்.ஐ. தடுத்திருக்கிறார். அதனால் அவரது கன்னம் நெஞ்சுப் பகுதியில் வெட்டு விழுந்திருக்கிறது. குடி போதையில் வாகனம் ஓட்டியதற்கு அபராதம் விதித்ததால் இப்படி செய்ததாகக் கூறியிருக்கிறார்'' என்று நம்மிடம் பேசினார் எஸ்.பி. சரவணன்.
பணியில் சுறுசுறுப்பாகவும் அலர்ட்டாகவும் இருக்கும் எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கொண்டாநகரம் ரயில்வே பகுதியில் ரவுண்ட்ஸிலிருந்து திரும்பி யிருக்கிறார். அது சமயம் ரோட்டோரம் ஒரு பெண்ணிடம் தகராறு செய்த ஒரு தரப்பினர், அவளை அரிவாளால் வெட்ட முயல, அதைப் பார்த்தப் பதறிய எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா, துளியும் அச்சமின்றி, அரிவாள் கும்பலை அடித்து விரட்டி அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார். அதோடு, அரிவாள் ஆசாமிகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.
தாக்குதலுக்குள்ளான பெண் எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசாவுக்கு, தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பெண் எஸ்.ஐ.யை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜகண் ணப்பன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார்
-பி.சிவன்
படங்கள் : ப.இராம்குமார்