வாகன ஓட்டிகளை மட்டுமல்ல… அனைத்து பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் டோல்கேட் கட்டண உயர்வானது பா.ஜ.க. அரசின் மாபெரும் ஊழலையும் அம்பலமாக்கியிருக்கிறது.

tt

பிரதமர் வாஜ்பாய் அரசால் 1999 காலகட்டத் தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் இன்னொரு திட்டம்தான் டோல் ரோடு எனப்படும் சுங்கச்சாலை. அரசாங்கத்திடம் நெடுஞ்சாலைகள் அமைக்க போதுமான நிதியில்லை என்று வாகன ஓட்டிகளிடம் வசூலித்து சாலைகளை அமைக்கலாம் என்று முடிவெடுத்தது பா.ஜ.க அரசு. பயண நேரம் மிச்சம், பெட்ரோல், டீசல் மிச்சம், வாகன தேய்மானம் குறைவு என, கணக்கிடும்போது பொது மக்கள் மத்தியில் பயனுள்ள திட்டமாக வரவேற்பை பெற்றது. "நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டாலும் அரசாங்கமும் தனியார் டோல் நிறுவனங்களும் இதை பணம் காய்க்கும் மரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டன' என்ற குற்றச்சாட்டுக்கள் எழ ஆரம்பித்துவிட்டன. அதுவும், கடந்த ஐந்தாண்டுகளில் வழிப்பறிக் கொள்ளை செய்வதுபோல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன மத்திய அரசின் டோல்கேட்டுகள்.

tttt

Advertisment

தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 டோல்கேட்டுகள் உள்ளன. உதாரணத்துக்கு, சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் செங்கல்பட்டிலுள்ள பரனூர் டோல்கேட், திண்டி வனம் டோல்கேட்கள் 2002-களில் போடப்பட்டன. இதற்கு 564 கோடி ரூபாய் செலவானது என்று நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இண்டியாவே ஆர்.டிஐ.யில் தகவல் கொடுத்துள்ளது. ஆனால், இன்றுவரை வசூ லிக்கப்பட்ட தொகையோ 1,098 கோடி ரூபாய்.

சாலை அமைப்பதற் காக நிர்ணயிக்கப்பட்ட 564 கோடி ரூபாயை வசூலித்த பிறகு 60 சதவீதம் கட்ட ணத்தை குறைக்கவேண் டும் என்பது சட்டத்தி லேயே உள்ளது. அதா வது, 100 ரூபாய் வசூ லிக்கப்படும் இடத்தில் 40 ரூபாய்தான் வசூ லிக்கவேண்டும். அப்படியென்றால், போட்ட முதலீட் டுத் தொகையை எடுத்த பிறகு சாலை பராமரிப்பிற்கான செலவை மட்டும்தான் வசூலிக்கவேண்டும். சரி, குறைந்தபட்சம் செலவான 740 கோடி ரூபாய் வசூலித்த பிறகாவது 60 சதவீத மாக டோல்கேட் கட்டணத்தை குறைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்னும்கூட டோல் கேட் கட்டணத்தை குறைக்காமல் "இன்னும் 350 கோடி ரூபாய் வந்த பிறகுதான் 60 சதவீதமாக குறைப்போம்' என்று தெரிவித்துள்ளார் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மண்டல இயக்குநர் பி.டி. மோகன். இதேபோன்று, போட்ட முதலீட்டைவிட பல மடங்கு வசூலித்தபிறகும் குறைக்காமல் ஊழல் செய்யும் 8 டோல்கேட்டுகள் உள்ளன. இதை மாபெரும் ஊழல் என்றே சொல்லலாம்.

60 கிலோமீட்டருக்கு அப்பால்தான் அடுத்தடுத்த டோல்கேட்கள் இருக்கவேண்டும் என மத்திய அரசாங்கத்தின் தேசிய நெடுஞ்சாலை சட் டம் சொல்கிறது. ஆனால், இந்த விதியை மதிக்கா மல் வானகரம் சூரப்பட்டு, விக்ரவாண்டி ஆத்தூர், சமயபுரம், செங்குறிச்சி. பள்ளிக்கொண்டான் வாணி யம்பாடி, திருமாந்துறை உள்ளிட்ட டோல்கேட்டு கள் 60 கிலோமீட்டருக்குள்ளே சட்டத்துக்குப் புறம்பாக வசூலித்துக்கொண்டிருக்கின்றன.

Advertisment

மாநகராட்சி எல்லைக்குள் டோல்கேட்டுகள் இருக்கக்கூடாது. இதை மீறுவதுபோல் இரண்டு டோல்கேட்கள் உள்ளன. மதுரை அருப்புக் கோட்டை சாலையிலுள்ள மேன்கான் டோல்கேட் நிறுவனம் சாலைகளை சரிவர பராமரிக்காததால் 30 சதவீதத்திற்கு குறைவாகத்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. இதைவிடக் கொடுமை, ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும்கூட டோல் வசூலித்துக்கொண்டி ருக்கிறார்கள்.

ttat

இதுகுறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொறுப்பாளர் ரங்கபிரசாத் நம்மிடம், “""நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் ஹோண்டா சிட்டி கார் வாங்குறார் என்று வைத்துக்கொள் வோம். அதன் ஒரிஜினல் மதிப்பு 8 லட்சத்து 12,000 ரூபாய்தான். ஆனால், ஜி.எஸ்.டி. 2 லட்சத்து 80,000 ரூபாய். ரோடு டேக்ஸ் 1 லட்சத்து 40,000 ரூபாய். இன்சூரன்ஸ் பிரிமியத்தின்மீது போடப்படும் ஜி.எஸ்.டி. வரி 4,000 ரூபாய். பதிவுக் கட்டணம் 10,000 ரூபாய். வரிகள் மற்றும் இன்ஸூரன்ஸ் தொகை எல்லாம் சேர்த்து ஹோண்டா சிட்டி காரின் விலை 12 லட் சத்து 32,000 ரூபாயாக உயர்கிறது. அதாவது, 50 சதவீதம் தொகையை கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டிய நிலை. அதே போல், டூவீலர் ஓட்டிகள் உட்பட ஒவ்வொருவரும் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 2 ரூபாய் சாலை வரியாக பெட்ரோல் பங்குகளில் செலுத்திவிடுகிறோம். இப்படி, ஏற்கனவே சாலை பராமரிப்பிற்கும் சேர்த்து வரிகளை வசூலித்துவிட்டு தற்போது மீண்டும் மீண்டும் டோல்கேட்டுகள் மூலம் சாலை பராமரிப்பு என்கிற பெயரில் வசூலிப்பது நியாயமா?

சென்னை டூ கன்னியாகுமரி செல்லவேண்டும் என்றால் ஒரு வழிக்கு 1440 ரூபாய். திரும்பி வருவதையும் சேர்த்தால் 2,880 ரூபாய். சென்னை டூ சேலம் 430 ரூபாய். போக வர 860 ரூபாய். இது, நான்குசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. பேருந்துகளில் செல்லும் பயணி களிடமும் டோல்கேட் கட்டணத்தை சேர்த்துதான் வசூலிக்கிறார்கள். சென்னை -செங்கல்பட்டு டூ திண்டிவனம் சாலையில் 35,000 வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகளை அமைத்துள்ள தாக கூறியிருந்தார்கள். ஆனால், சாதாரண நாட்களில் 95,000 வாகனங்களும் வீக் எண்ட் மற்றும் விழாக்காலங்களில் 1 லட்சத்து 35,000 வாகனங்களும் செல்வதாக மத்திய அரசின் புள்ளிவிவரமே கூறுகிறது.

இரண்டு மூன்று வருடங்களாக சுழற்சி முறையில்தான் கட்டணத்தை உயர்த்தினார்கள். ஒரு வருடத்தில் குறிப்பிட்ட டோல்கேட்டுகள் கட்ட ணம் விலை உயரும். பிறகு, மற்ற டோல்கேட்டுகளில் கட்டணம் உயரும். ஆனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20 டோல்கேட்டுகள், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 20 டோல்கேட்டுகள் என ஒரே வருடத்தில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து டோல் கேட்டுகளிலும் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இப்படி, மத்திய அரசு உயர்த்துவதைப் பார்த்து மாநில அரசும் இதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டது.

உதாரணத்துக்கு, சென்னை யில் உள்ள ஓ.எம்.ஆர். சாலையில் 5 டோல்கேட்டுகள் அமைத்து வசூலித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு ரோடு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மேனேஜர் பன்னீர்செல்வத் திடம் நாங்கள் கேட்டபோது, "30 வருடங் களுக்கான சாலைப் போக்குவரத்து வளர்ச்சி யானது... 7-8 வருடங்களிலேயே நடந்துவிட்டதால் வாகன நெரிசலை சமாளிக்க முடியவில்லை' என்று சொன்னார். அப்படியென்றால், 32 வருடம் வசூலிக்கலாம் என்று விதி இருந்தாலும் 10-15 வருடங்களிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால், இங்கேயும் கொள்ளை அடிக்கிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் டோல்கேட்டுகளில் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது, சாலை அமைத்ததற்கான செலவு எவ்வளவு? பராமரிப்புச்செலவு எவ்வளவு? வசூலிக்கப்பட்ட தொகை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை'' என குற்றம்சாட்டுகிறார்.

சி.ஐ.டி.யூ. மாநிலத்தலைவர் அ.சௌந்தர ராஜன் நம்மிடம், ""சாலை கட்டமைப்பு என்பது அரசாங்கத்தின் அடிப்படை கடமை. இதை அரசாங்கம்தான் போடவேண்டும். ஆனால், ஏற்கனவே வரிகளின் மூலம் வசூலித்துக்கொண்டு தனியாரைப்போல மொத்தச் செலவையும் பொதுமக்களிடமே வசூலிப்பது வர்த்தக சிந்தனை. சாலை அமைப்பது, விபத்தை குறைத்தோம்,… வாகன தேய்மானத்தை குறைத்தோம் என்றெல்லாம் கூறும் மத்திய அரசாங்கம் ஏற்கனவே சாலைகளை ஒழுங்காக போடாததன் விளைவுதானே? அதுவும், போட்ட முதலீட்டைவிட இரண்டு மடங்கு வசூலித்த பிறகும் தொடர்ந்து வசூலிப்பது, குறைக்காமல் கூட்டுவது மாபெரும் கொள்ளை'' என்கிறார்.

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ் நம்மிடம், ""வாகன ஓட்டிகளிடம்தானே வசூலிக்கிறார்கள் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. காரணம், சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் லாரி போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனச் செலவுகளும் அதிகமாகி விலைவாசியும் உயர்வதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. 43 சுங்கச்சாவடிகளில் பரனூர், மதுரவாயல் டூ தாம்பரம், வாலாஜா என 33 சுங்கச்சாவடிகளில் வேலையே முடிந்துவிட்டது. அப்படியென்றால், பராமரிப்பிற்கு மட்டும்தான் -அதாவது 40 சதவீத கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றி கேட்டபோது, "நாங்கள் சாலை போடுகிறோம் அதனால்தான் இப்படி வசூலிக்கிறோம்' என்று சமாளித்தார். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் எந்த தேசிய நெடுஞ் சாலைகளிலும் சாலைப்பணிகள் செய்யாமலேயே ஒருநாளைக்கு 60 லட்ச ரூபாய் சுங்கச்சாவடி மூலம் வசூலித்து விட்டனர். இப்படி, மத்திய அரசும் டோல்கேட் நிறுவனங்களும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றன'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.

டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து டோல்கேட் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. கட்டணக் கொள்ளை மூலம் சங்கை அறுக்கின்றன சுங்கச்சாவடிகள்.

-மனோசௌந்தர்