லங்கையில் கோலோச்சிய ராஜபக்சேக் களின் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தியிருக்கிறது மக்களின் புரட்சி! இந்த புரட்சிக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே வும், சிங்கள ராணுவத்தின் செயலாளராக இவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவும் இருந்த 2009-ல் தான் விடுதலை புலிகளின் ஈழத்தமிழினத்துக்கான விடுதலைப் போராட்டம் சர்வதேச சதிகளின் துணையுடன் அழித்தொழிக்கப்பட்டது.

srilanka

Advertisment

சிங்கள ராணுவம் தொடுத்த ஈழத்தமிழின அழிப்பில் ஒன்னரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த இறுதி யுத்தத்தில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவென்று இப்போது வரை யாருக்கும் தெரியாது. தமிழர்களைக் கொன்றழித்தோம் என்கிற இறுமாப்பில் மிதந்தனர் ராஜபக்சேக்கள்.

2009-க்கு பிறகு இலங்கையில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறின. அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே பிரதமரானார். ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபாய அதிபராக உயர்ந்தார். சிங்களப் பேரினவாதத்தின் ஆகப்பெரிய அவதார புருஷர்களாக தங்களை காட்டிக்கொண்டதில் இவர்களை அரியணையில் அமர்த்தினார்கள் சிங்களவர்கள். ஆனால், சிங்களவர்களாலேயே தூக்கியெறிப்படுவோம் என ராஜபக்சேக்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

ராஜபக்சேக்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமானது. சகோ தரர்கள், மகன்கள், உறவினர்கள் என அவரவர் களின் படிநிலைக்குத் தகுந்தவாறு அமைச்சர்களாக வும் அதிகாரிகளாகவும் அவர்களை நியமித்தார் கோத்தபாய ராஜபக்சே. மேலும், ராணுவ அதிகாரிகளை அரசு நிர்வாகத்துக்குள் கொண்டு வந்தார். இது தொடர்ந்து வந்த நிலையில், ராஜபக்சேக்களின் குடும்பம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே அரசின் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொழுத்தது.

Advertisment

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சொத்துக் களை குவித்தனர். பல்வேறு நாடுகளில் உள்ள ரகசிய வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆனால், அரசு அதிகாரத் தைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த எந்த அக்கறையையும் காட்டவில்லை. மாறாக, கோத்தபாய நடைமுறைப்படுத்திய பல திட்டங்களும் சட்டங்களும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோதிலும் பொருட் படுத்தவில்லை ராஜபக்சேக்கள்.

இதனால் இலங்கையில் உருவான பொருளா தாரப் பேரழிவு நாட்டையே நிர்மூலமாக்கியது. குறிப்பாக, இலங்கையின் சுற்றுலாத் தொழில் முடங்கியது. இதனால் அந்நியச் செலவாணி கையிருப்பும் தீர்ந்து போனது. உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அத்யாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தப் பொருளாதாரப் பேரழிவை இனியும் பொறுக்கமுடியாத நிலையில் வெகுண்டெழுந் தனர் மக்கள்.

முதல்கட்டமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவை விரட்டியடித்தனர். பதவியைத் துறந்து ஓடிப்போன மகிந்தா, ராணுவ உதவியுடன் தலைமறைவானார். இப்போது வரையில் அவர் எங்கிருக்கிறார் என்பதை மூடி மறைத்தே வருகிறது சிங்கள ராணுவம்.

ss

அந்த சூழலில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் புதிதாக இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து இலங்கையை மீட்க எந்த செயல்திட்டத்தையும் கொண்டுவர ரணிலாலும் முடியவில்லை. பொருளாதார நெருக்கடியும் மாறவில்லை. இதனால் மக்களின் கோபம் போராட்டங்களாக தினமும் புதிய புதிய வடிவில் எழுச்சி பெற்றுக்கொண்டேயிருந்தது. இதனை ஒடுக்க கோத்தபாய அமல்படுத்திய அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்தபடி இருந்தது மக்களின் எழுச்சி.

இந்த எழுச்சி, அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய வெளியேற வேண்டும் என்பதாக உருமாறியது. ஆனாலும் பதவியை விட்டு விலகாததால், கடந்த 9-ந் தேதி கோத்தபாயவுக்கு எதிராக ஆவேசமாக மக்களின் கோபம் மாறிய நிலையில், கொழும்பிலிருந்த கோத்தபாயவின் அதிபர் மாளிகையை முற்றுகையிட மக்கள் திரண்டனர். அதிபர் மாளிகையை நோக்கி மக்களின் படை விரைந்து வருவதை அறிந்தும் கண்டும் அச்சப்பட்ட கோத்தபாய அவசரம் அவசரமாக மாளிகையை விட்டு வெளியேறினார். உயிருக்குப் பயந்து ஓட்டமெடுத்த அவரை தங்களின் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பதுக்கி வைத்திருக்கிறது சிங்கள ராணுவம்.

ss

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர் ஒருவர்,‘"கடந்த காலங்களில், விடுதலைப் போராளிகளும் அப்பாவித் தமிழர்களும் பதுங்கு குழிக்குள் அடைந்து கிடக்கும் அவலத்தை ஏற்படுத்திய கோத்தபாய, தற்போது அதே சூழல்களுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்'' என்கிறார் இயல்பாக.

அதிபர் மாளிகையை நோக்கிச் சென்ற மக்கள் படை ஆவேசமாக உள்ளே நுழைந்தது. அவர்களை தடுக்க முயன்ற ராணுவத்தையும் தாக்கித் தூக்கி எறிந்தார்கள் சிங்களவர்கள். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள், ராஜபக்சேக்கள் வாழ்ந்த சொகுசு மாளிகையைக் கண்டு அசந்து போனார்கள். அங்கிருந்த இருக் கையில் அமர்ந்தும், படுக்கையில் உருண்டு புரண்டும், நீச்சல் குளத்தில் குதித்து மகிழ்ந்தும் குதூகலப்பட்டனர். மாளிகை யின் ஒவ்வொரு பகுதியாக நுழைந்து பார்த்தனர். மாளிகைக் குள் ரகசிய பாதாள அறை ஒன்று இருந்துள்ளது. அதற்குள் நுழைந்த மக்கள், அங்கு கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டி ருந்த இலங்கை பணத்தையும் வெளிநாட்டு கரன்சிகளையும் கண்டு மிரண்டனர்.

பொருளாதாரச் சீரழிவால் கையில் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், கோத்தபாயவின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணக்குவியலைக் கண்டதால் அவர்களின் கோபம் பலமடங்கு அதிகரித்தது. இதற்கிடையே கோத்தபாய ராஜபக்சேவின் சொந்த பங்களா, ரணிலின் சொந்த வீடு, மகிந்த ராஜபக்சேவின் மகன் வசிக்கும் பங்களா என அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். மக்களின் போராட்டம் உக்கிரம் அடைந்துகொண்டே இருந்தது. அதிபர் மாளிகையை விட்டு மக்கள் வெளியேறவும் இல்லை. முழுமையாக தங்கள் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத் திருந்தனர்.

இந்த நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ரணில் விக்கிரமசிங்கே. அவர் பதவி விலக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவர் ஆரம்பத்தில் மறுத்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் ரணில். அதேபோல, அதிபர் பதவியிலிருந்து கோத்தபாயாவை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டது. இதனை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனா, ராணுவத்தின் உதவி மூலம் கோத்தபாயவுக்கு தெரிவித்திருக்கிறார். கோத்தபாயவும் இதனை ஏற்கவில்லை. ஆனால், மக்களின் போராட்டம் அவருக்கு எதிராக உக்கிரமாக இருந்து வருவதால் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார் கோத்தபாய.

இலங்கையில் அதிபரும் பிரதமரும் ஒரே சமயத்தில் இல்லையென்றால் அங்கு எப்படி சட்டத் தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும்? ஆட்சியை நடத்துவது யார்? என்கிற கேள்வியை தமிழ்த் தேசிய தலைவர்களிடம் கேட்டபோது,”அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டால் இலங்கை அரசியல் சட்டத்தின்படி பிரதமர்தான் தற்காலிக அதிபராக பொறுப்பேற்பார். இதற்கு நாடாளுமன்றம் 1 மாதத் துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலின்படி ஆராய்ந்தால், பிரதமர் பதவியிலிருந்து ரணிலும் ராஜினாமா செய்து விட்டதால் அவருக்கான வாய்ப்பு இல்லை. சட்டரீதியாக அடுத்த வாய்ப்பாக சபாநாயகர் மகிந்த யாப்பா பதவியேற்கலாம். ஆனால், இவர் கோத்தபாயவின் ஆதரவாளர். அதனால் இவரை எதிர்க்கட்சிகள் ஏற்காது. மீறி அவர் பதவியேற்றால் நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பார்கள். சபாநாயகருக் கும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், தற்காலிக அதிபராக இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பேற்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இதற்கு அவசியம். அந்த வகையில் இவரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்குமா என்பது கேள்விக்குறி.

ss

சட்டரீதியாக உள்ள இந்த வாய்ப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 113 எம்.பி.க்களை எதிர்க்கட்சி கள் வைத்திருக்கின்றன. அதனால், எதிர்க்கட்சிகளின் பிரதான தலைவரான சஜீத பிரேமதாசா, ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அந்த வகையில், அதிபரும் பிரதமரும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்களே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்போதைய சூழல் குறித்து இலங்கை பத்திரிகையாளர்களிடம் நாம் பேசிய போது,”"இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி சீனர்களின் செல்லப்பிள்ளையான ராஜபக்சேக்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். தங்களுக்கு தோதான ஒரு பொம்மை அரசாங்கத்தை இலங்கையில் உருவாக்க வேண்டுமென்பது இந்தியாவின் அஜெண்டா! அதற்கேற்ப தங்களின் உளவுப்பிரிவின் (ரா) மூலம் மக்களின் போராட்டங்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தது. ரா அதிகாரிகளின் சில செயல் திட்டங்கள் மெல்ல மெல்ல உள்ளே புகுந்தன. அதிபர் மாளிகையை நோக்கி மக்களின் போராட்டம் நடக்கும் என்பதை யூகித்த இந்தியா, இலங்கை ராணுவத்தின் முப்படை தளபதி சவேந்திர சில்வாவை கடந்த 7-ந்தேதி டெல்லிக்கு அழைத்திருந்தது. இந்தியாவின் யோசனை களை அவர் செவிமடுத்ததாக தெரிகிறது. ராணுவத்தின் உதவியின் மூலம் இந்தியா தனது திட்டத்தை நிறை வேற்றும்''’என்கிறார்கள்.