ரடங்கை நீட்டிப்பது தொடர்பாக சில முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்துள்ளதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்படும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்கிறது அதிகாரிகள் தரப்பு.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்தார் எடப்பாடி. அந்த ஆலோசனையில், கொரோனாவின் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது மூன்றாவது நிலைக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சீரியஸ் காட்ட வேண்டும். கலெக்டர் அலுவலகத்தை தேடி வரும் மக்களே, முக கவசமில்லாமலும் சமூக விலகலில் அக்கறைக் காட்டாமலும் இருக்கிறார்கள். இதனை கலெக்டர்கள் கண்டு கொள்வதில்லை.

mm

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் எடுக்கும் முடிவுகள், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அமல்படுத்துவதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். மைக்ரோ லெவல் ஆப்ரேச னில் குவாரண்டைன் பண்ணப்பட்டிருக்கும் பகுதிகளை முழுமையாக உங்கள் கட்டுப்பாட் டில் வைத்துக்கொள்ளுங்கள். மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளில் இன்னமும் மக்கள் கூடுதல் கட்டுப்படுத்தப்படவில்லை. விலையேற்ற புகாரும் வருகிறது. நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது‘’ என்பது உள்பட பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்ட எடப்பாடி, மாவட்டம் வாரியாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி அதற்கேற்ப சில யோசனைகளையும் தெரி வித்தார்.

Advertisment

பெரும்பாலான கலெக்டர்கள், ’’மக்களை வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டிருப்பதில் பல பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, மக்களிடம் வாங்கும் சக்தியும் அத்யாவசியப் பொருட்களின் வருகையும் குறைந்துள்ளது. இதனால், கொரோனாவை விட பசியின் கொடுமை இனி வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். அதுகுறித்து அரசு இப்போதே பல முடிவுகளை எடுப்பது நல்லது. சமூக தொற்று பரவியுள்ளதா என்பதில் முழுமையான ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்’’ என்பது உள்பட பல்வேறு சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டி ருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

cm

இதனையடுத்து சுகாதாரம், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடியிடம், தற்போதைய சூழ லில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதோடு நின்று விடப்போவதில்லை. ரேபிட் சோதனை செய்யும் உபகரணங்கள் வாங்க ஆர்டர் தரப்பட்டு விட்டது. அதன் சோதனை முடிவுகள் நமக்கு அதிர்ச்சியைத் தரலாம். அவர்கள் எங்கெங்கு பயணித்தார்கள் என்பதை கண்டறிந்தாலும் அவர்கள் சென்றுள்ள பகுதிகளில் யார் யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினம்.

Advertisment

டெல்லிக்கு சென்று வந்தவர்களை அடையாளம் கண்டறிந்ததில் ஏற்பட்ட கால தாமதம் சமூக தொற்றாக மாறும் மூன்றாவது நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. அதனால், ஊரடங்கை நீட்டிப்பதும் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வராமல் தடுப்பதும்தான் மூன்றாவது நிலை உருவானால் அதனை எதிர்கொண்டு சரி செய்வதற்கான வழி. அதனால், மாவட்ட எல்லைகளை மூடுவதுடன், ஒவ்வொரு பகுதியாக சீல் வைப்பதும் அவசியம். குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏரியா வாரியாக சீல் வைப்பது அவசியம்.

dd

மக்களுக்குத் தேவையான அத்யாவசிய பொருட்களை, அரசாங்கமே விநியோகிக்க வேண்டும். அதாவது, ஏரியாவின் பரப்பளவைப் பொறுத்து 5 அல்லது 10 வீதிகளுக்கு ஒரு குழுவை உருவாக்கி அந்த பகுதியில் அவர்களை பாதுகாப்பு கவசங்களுடன் அமர வைக்கலாம். அந்த பகுதியிலுள்ள மக்கள் தங்களுக்குத் தேவையானதை அந்த குழுவிடம் தெரிவிக்க வேண்டும். 2 அல்லது 3 மணி நேரத்தில் அந்த பொருட்கள் அந்த குழுவிடம் வந்து சேரும்படி செய்து, வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்‘’ என விவரித்த அதிகாரிகள், நிதி பற்றாக்குறை, சுகாதாரப் பணியாளர்களுக்கான உபகரண பற்றாக்குறை குறித்தும் தெளிவுப்படுத்தியிருக் கிறார்கள்.

இதனையடுத்து, நிதித்துறை அதிகாரி களிடம் விவாதித்த தலைமைச்செயலாளர் சண்முகம், நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி விரைந்து நிதி உதவி செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே பிரதமர் மோடியிடம் 12 ஆயிரம் கோடி நிதி உதவியை எடப்பாடி கேட்டிருந்த நிலையில் வெறும் 500 கோடி மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறார் மோடி. இது மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்கிறது கோட்டைத் தரப்பு.

தற்போதைய சூழல் குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மத்திய அரசின் செயல்பாடுகளை கவனித்து வருபவருமான டாக்டர் விஷ்ணுபிரசாத்திடம் பேசிய போது, ‘’சீனாவில் கொரோனா வைரசின் உக்கிரம் கடந்த டிசம்பர் மாதமே அதிகரித்துவிட்டது. சீனாவிலுள்ள இந்திய தூதரகம்,ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொடூரங்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்தே வந்திருக்கிறார்கள். ஆனால், அதன் மீது மோடி அக்கறை காட்ட வில்லை.

vv

உலகளாவிய பாதிப்புகளை அறிந்த மத்திய அமைச்சர்களும் எம்.பி.க்களும் (பாஜக எம்.பி.க்கள் உட்பட ) நாடாளு மன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தியா வுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் வழிகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்துங்கள் என கெஞ்சினர். பிரதமர் மறுத்துவிட்டார். பிரதமர் அலுவலகத்துக்கும் மத்திய சுகாதாரத் துறைக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதேபோல, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பாஜக அரசை கொண்டு வரும் அரசியல் தில்லுமுல்லுகளுக்காக மோடியும் அமித்ஷாவும் திட்டமிட்டு செயலாற்றி வந்ததாலும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க மறுத்தார்.

வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் வருவதும், வெளிநாட்டுக்கு சென்ற இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்புவதும் சர்வசாதாரணமாக நடந்தது. அவர்களுக்கான சோதனைகள் செய்யவில்லை. முகக்கவசங்கள், கவச உடைகள், சானிடைசர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் கடந்த 4 மாதங்களாக அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக கடந்த 15 நாட்களாகத்தான் கடுமையான ஆக்சனை எடுக்கிறார் மோடி.

21 நாட்கள் தேசிய ஊரடங்கினை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், மூத்த அரசியல்வாதிகளுடனும் விவாதிக்காமல் சர்வாதிக்காரத்தனமாக ஒரு முடிவை எடுத்து அமல்படுத்திவிட்டு இப்போது அவர்களிடம் ஆலோசனை பெறுவதில் என்ன பொருள் இருக்கிறது. இனி வரும் நாட்களில் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளால் தன்னை நோக்கி குற்றச் சாட்டுகள் வீசப்படாமல் இருப்பதற்காகத் தான் இந்த ஆலோசனையை வைத்திருக் கிறார். ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், அனைத்து கட்சி தலைவர்களுடனும் விவாதித்துதானே முடிவுகளை எடுத்தேன் என சொல்லி மோடி தப்பித்துக்கொள்ளும் முயற்சி இது.

டெல்லியில் நாங்கள் விசாரித்த வகையில், ஊரடங்கை இன்னும் 15 நாட்கள் முழுமையாக நீட்டிக்கவும், அதனை மத்திய அரசு அறிவிக்காமல் மாநில அரசுகளை வைத்தே அறிவிக்க வைக்கலாமா என்றும், தேசம் முழுவதும் அறிவிக்காமல் அதிகம் பாதிக் கப்பட்ட 274 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை தொடரலாமா என்றும் அதி காரிகள் விவாதித்துள்ளனர். ஆனால், சமூக தொற்றாக பரவியிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் 274 மாவட்டங்களை மட்டும் தனிமைப்படுத்துவது சரி அல்ல. இப்போதைய ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றே அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் என்ன முடிவை எடுப்பதுங்கிறது மோடிக்கு மட்டுமே தெரியும். கடுமையான எமர்ஜென்சியை அமல்படுத்தவும் அவர் தயங்க மாட்டார் ‘’ என்கிறார்.

இந்திராகாந்தி நடைமுறைப்படுத்திய நெருக்கடி நிலை காலத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான தேவசகாயத்திடம் பேசியபோது, ‘’கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்க முடியும். தடுக்க வேண்டிய காலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்த பிரதமர் மோடி , இப்போது அனைவரிடமும் ஆலோசிப்பதும் விவாதிப்ப தும் தன் மீதுள்ள எதிர்மறை விமர்சனங்களை மறைப்பதற்காகத்தான். கொரோனாவை தடுப்பதில் இப்போது இவர்கள் எடுத்து வரும் பல செயல்பாடுகள் தவறானவை. குறிப்பாக, 144 தடை உத்தரவே பிறப்பிக்கக் கூடாது. அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான சூழல் இதுவல்ல. ஆரம்ப முதலே பல தவறுகளை செய்து வரும் மோடி, ஃபைனான்ஸ் எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு செய்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் வருகிறது‘’ என்கிறார் தேவசகாயம்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் மூன்றாவது நிலைக்கு நகராமல் இருக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், கண்காணிப்பில் இருக்கும் பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

-இரா.இளையசெல்வன்