கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் கடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை கடந்த இதழில் பார்த்தோம். மிச்சமுள்ள ஐந்து தொகுதிகளின் நிலவரம் இது.
குறிஞ்சிப்பாடி: ஸ்டார் தொகுதி. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் சந்தித்தவர். ஆனாலும் குறிஞ்சிப் பாடியைவிட்டு அவர் வேறு தொகுதிக்கு மாறியதில்லை. இந்த முறை அவர் தொகுதி மாறலாம் என்ற மனநிலையில் உள்ளதாக கட்சி முன்னோடிகள் கிசுகிசுக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அமைச்சர் சிதம்பரத்தைத்தான் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள் கட்சியினர். அமைச்சர் தொகுதி மாறினால் குறிஞ்சிப்பாடியில் அவரது உறவினரும் ஒ.செ.வு மான சிவக்குமாருக்கு வாய்ப்பு அதிகம். அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் இந்த தொகுதிமீது மிகுந்த ஆவலாக உள்ளார். சமட்டிக்குப்பம் ஏ.கே.சுப்பிரமணியன், ஒ.செ. கோவிந்தராஜ் போன்றவர்களுக்கும் கோதாவில் குதிக்க ஆசையுள்ளதாம்.
நெய்வேலி: தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று வருபவர் சபா ராஜேந்திரன். இந்த முறையும் அவருக்கே தலைமை வாய்ப்பளிக்கும் நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நெய்வேலி தொகுதிமீது விருப்பமாக உள்ளார். தற்போது பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளதால் அவருக்கு மீண்டும் பண்ருட்டியையே தி.மு.க. தலைமை கைகாட்டும் என்கிறார்கள். அ.தி.மு.க. சார்பில் சொரத்தூர் ராஜேந்திரனுக்கும் நெய்வேலியில் நிற்க ஆசை. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் போன்றவர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
விருத்தாசலம்: இங்கு கடந்த முறை தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த முறையும் காங்கிரஸுக்கே தொகுதி கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. அப்படி கிடைத்தால் அந்த கட்சியில் சீட்டுக்குப் போட்டி கடுமையாக இருக்கும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் நின்று தோல்வியுற்றவர் நீதிராஜன். இவரது தந்தை தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தந்தையைப்போல் தானும் ஒருமுறையாவது சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நம்பிக்கையிலுள்ள நீதிராஜன் காங்கிரஸில் சீட்டுக்கு மோதுவார். இந்த முறை தி.மு.க.வுக்கே தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று கட்சியினர் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதன்படி தி.மு.க. இங்கு போட்டியிட்டால், 2011-ல் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட தொ.மு.ச. தங்க.ஆனந்தன் மீண்டும் விருத்தாசலத்தை குறிவைத்துள்ளார். அதேபோல் இளைஞரணியைச் சேர்ந்த கணேஷ்குமார், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசனின் புதல்வியும் நகரமன்ற தலைவருமான டாக்டர் சங்கவி முருகதாஸ், உதயநிதிக்கு நெருக்கமான எக்ஸ் எம்.எல்.ஏ. பி.வி.பி. முத்துக்குமார், அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு தாவிய எக்ஸ் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் என்று தி.மு.க.வில் பட்டியல் நீண்டுசெல்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/cuddalore1-2025-10-23-17-41-31.jpg)
அதேநேரத்தில் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.கணேசன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க. கூட்டணியிலுள்ள வி.சி.க.வும் பொது தொகுதியை பெற்று அதில் நின்று வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறது. விருத்தாசலம் கிடைத்தால் வேட்பாளராக நிற்பதற்கு கட்சி மாநில பொறுப்பிலுள்ள அன்வர் பாஷா தயாராக உள்ளார். அ.தி.மு.க. சார்பில் மாநிலப் பேரவை துணைச் செயலாளர் அருளழகன், ரவீந்திரன் ரெட்டியார், எக்ஸ் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர். மகன் ரமேஷ், அட்வகேட் விஜயகுமார், முன்னாள் நகர சேர்மன் சந்திரகுமார் இப்படி அ.தி.மு.க.விலும் சீட்டுக்கு போட்டி நிலவுகிறது. எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் விருத்தாசலம் தொகுதிமீது தே.மு.தி.க. தலைவி பிரேமலதாவுக்கு தனி கண் இருக்கிறது.
பண்ருட்டி: தி.மு.க. கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலத்தில் நடைபெற்ற தனது கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, பண்ருட்டி தொகுதியை தேவையான அளவுக்கு வளர்ச்சியடையச் செய்துள்ளேன். எனவே வரும் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நிற்கப்போவதில்லை. விருத்தாசலம், நெய்வேலி, புவனகிரி உட்பட ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன் என்றுள்ளார். வேல்முருகன் தொகுதி மாறினால் தி.மு.க. சார்பில் மறைந்த எக்ஸ் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தியின் மகன் வழக்கறிஞர் வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஆனந்திசரவணன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அ.தி.மு.க. சார்பில் இந்தத் தொகுதியில் 2011-ல் வெற்றிபெற்ற சத்யா பன்னீர் செல்வம், மீண்டும் இங்கு போட்டியிட எடப்பாடியாரை அடிக்கடி தரிசனம் செய்துவருகிறார். கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வேல்முருகனிடம் தோல்வியடைந்த சொரத்தூர் ராஜேந்திரனுக்கு மீண்டும் இங்கே கட்சித் தலைமை வாய்ப்பு வழங்க சான்ஸ் உண்டு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, காலத்தில் மாவட்ட அரசியலில் கொடிகட்டிப் பறந்த எம்.சி.தாமோதரன் தம்பிதான் முன்னாள் அமைச்சர் சம்பத். பழைய முகமான தாமோதரனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். 2011-ல் தே.மு.தி.க. சார்பில் வெற்றிபெற்றவர் சிவக்கொழுந்து. பலமான கூட்டணியில் கட்சி இடம்பெற்றால், மீண்டும் நிற்பதற்கு தயாராக உள்ளார் சிவக்கொழுந்து. அதேபோல் மாவட்ட அவைத் தலைவர் ராஜாராமுக்கும் சீட்டுப் பெற ஆசையுள்ளதாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/cuddalore2-2025-10-23-17-41-46.jpg)
திட்டக்குடி: மாவட்டத்தின் மேற்குக் கடைக்கோடியிலுள்ள மிகவும் பின்தங்கிய தொகுதி. இங்கு தி.மு.க. சார்பில் கடந்த 2016, 2021 ஆகிய இருமுறை தொடர்ந்து வெற்றிபெற்று அமைச்சராக உயர்ந்தவர் சி.வி.கணேசன். அரசின் திட்டங்களை அதிக அளவு கொண்டுவந்து வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளார். மீண்டும் கட்சித் தலைமை அவருக்கே வாய்ப்பளிக்கும் நிலையுள்ளது. திட்டக்குடி மங்களூர் தொகுதியாக இருந்தபோது சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற இளமங்கலம் கிருஷ்ணனின் மகன் செல்வக்குமார், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் நெருக்கமாக உள்ள. இவரும் தனது தந்தையைப் போல் மக்கள் பணியாற்ற கட்சிக் தலைமையிடம் சீட்டு கேட்க ஆவலோடு உள்ளார். அ.தி.மு.க.வில் எக்ஸ் எம்.எல்.ஏ. பெரியசாமி மகன் அய்யாசாமி, இறையூரில் இ-சேவை மையம் மூலம் மக்களிடம் நெருக்க மாகவுள்ள ராஜேந்திரன், மகளிரணி யைச் சேர்ந்த எக்ஸ் கவுன்சிலர் பொன்னேரி பத்மாவதி, எக்ஸ் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், எக்ஸ் எம்.எல்.ஏ. பெண்ணாடம் ராமு ஓய்வுபெற்ற வட்டாட்சியர் பாலு இப்படி பெரும் பட்டியலே நீளுகிறது. அ.தி.மு.க.வில். இந்தத் தொகுதியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்தவர் புரட்சிமணி. அவருக்குப் பிறகு தற்போது காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை கிடைத்தால் இறையூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவி செல்வமணி, கந்தசாமி மகன் கருப்பையா மூப்பனார், ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்க வீரப்பன் ஆகியோர் சீட்டு பெறுவதற்கு ஆவலாகவே உள்ளனர்.
எந்த கட்சியில் கூட்டணி வைத்தாலும் திட்டக்குடி தொகுதி யைப் பிரேமலதா கேட்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டதன் விளைவாக, அந்த கட்சியின் மா.செ. உமாநாத், விருத்தாசலம் நகர கவுன்சிலர் ரமேஷ், கம்மாபுரம் மத்திய ஒ.செ. வீரமணி, தொழுதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் போன்றவர்களுக்கு கட்சியில் சீட்டு கேட்கும் ஆசை தோன்றியுள்ளது. கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி. சார்பில் தடா பெரியசாமி வேட்பாள ராக நின்று கணேசனிடம் தோற்றுப் போனார். தடா பெரியசாமி அ.தி.மு.க.வுக்குச் சென்றுவிட்டதால் பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள எக்ஸ் எம்.எல்.ஏ. தமிழழகன், இறையூர் விநாயகமூர்த்தி போன்றவர்கள் கூட்டணி சார்பில் இந்த முறை சீட்டுப் பெறுவதில் முனைப்பாக உள்ளனர்.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/cuddalore-2025-10-23-17-41-19.jpg)