கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் கட்சிரீதியாக அ.தி.மு.க.வில் நான்கு மாவட்டச் செயலாளர்களும், தி.மு.க.வில் இரு மாவட்டச் செயலாளர்களும் இங்கு கோலோச்சி வருகின்றனர். இதில் கடலூர், காட்டு மன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் சீட்டுக் காய்ச்சலில் இருப்பவர்களை முதலில் பார்ப்போம்.
கடலூர் :
இங்கு தி.மு.க. சார்பில் 2021-ல், ஐயப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மீண்டும் இவர் அல்லது இவரது மகன் பிரவீன் ஐயப்பன் இருவரில் ஒருவர் போட்டியிடுவதற்காக கட்சி மேலிடம்வரை நெருக்க மாக இருந்துவருகிறார்கள். அதேபோல் பிரபல நுரையீரல் சிறப்பு மருத்துவர் கலைக்கோவன், அமைச்சர், எம்.ஆர்.கே.வின் பக்தரும் மேயரின் கணவருமான ராஜா போன்றவர்களும் சீட்டு கோதாவில் குதிப்பதற்கு முனைப்புடன் உள்ளனர். சீட்டுக்கு அமைச்சரிடம் முட்டிமோதும் நிலை ஏற்பட்டால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு இத்தொகுதியைத் தள்ளிவிடலாம்.
அப்படி காங்கிரசுக்கு ஒதுக்கினால் வழக்கறிஞர் சந்திரசேகருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத், மீண்டும் கடலூரில்தான் போட்டியிடுவார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள். அதோடு ஜெ. பேரவையைச் சேர்ந்த கார்த்திகேயன், சேவல் குமார் போன்றவர்களுக்கும் தீராத ஆசை. தொழிலதிபர் பாஷ்யம் மகன் சுதாகருக்கு எடப்பாடியார் வாய்ப்பளித்தாலும் வியப்பதற் கில்லை என்கிறார்கள் ர.ர.க்கள்.
காட்டுமன்னார்கோவில்: இத்தொகுதி வி.சி.க.வுக்கு ஒதுக்கப்படலாம். தற்போது சிந்தனைச்செல்வன் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதேநேரத்தில் தலைவர் திருமாவளவன் சட்ட மன்றம், எம்.பி. தேர்தல் எதுவாக இருந்தாலும், தொகுதியில் இல்லாதவர் களையே வேட்பாளராக அறிவித்து வெற்றிபெற வைக்கிறார் என்றொரு முணுமுணுப்பிருக்கிறது. கட்சிக்காக உழைக்கும் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று திருமாவிடம் கோரிக்கை வைத்துவருகிறார்கள். தி.மு.க. சார்பில் முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர், தலைமைக்கழக பேச்சாளர் கட்சிப் போராட் டங்களில் கலந்துகொண்டு 13 முறை சிறைசென்ற வாஞ்சிநாதன் காட்டுமன்னார்கோவில் அல்லது திட்டக்குடி இரு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கட்சித் தலைமை வாய்ப்புத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்போடு உள்ளார்.
இவரைப் போலவே எம்.பி. கனிமொழியின் தீவிர ஆதரவாளர் கிள்ளை ரவீந்திரன், கட்சியின் மாவட்டத் துணைச்செயலாளர் சக்திவேல் போன்றவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே தொழிலதிபர் மணிரத்தினம் போன்றவர்கள் சீட்டுக்காக முயற்சிசெய்து வருகிறார் கள். அ.தி.மு.க. சார்பில் எக்ஸ் எம்.எல்.ஏ. முருகு மாறன் இத்தொகுதியில் இரண்டு முறை போட்டி யிட்டு வெற்றிபெற்றவர், மீண்டும் களத்திலிறங்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்
சிதம்பரம் தொகுதி: தி.மு.க. சார்பில் நகரமன்றத் தலைவராக உள்ளவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் எம்.ஆர்.கே.வின் சகோதரியின் மகன், கடந்த முறை அ.தி.மு.க. பாண்டியனிடம் தோல்வியுற்றவர். இவருக்கு வரும் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித்தருவாரா அமைச்சர்? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் நிலவுகிறது. அமைச்சர் நேரு தன் மகன் அருண் நேருவை அரசியலுக்கு கொண்டுவந்து பெரம்பலூர் எம்.பி.யாக வெற்றிபெற வைத்துவிட்டார். அதேபோன்று தனது மகன் கதிரவனை எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. இரண்டில் ஒரு பதவியில் அமர்த்தவேண்டுமென்ற தீராத ஆசை அமைச்சருக்கு உண்டாம். அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிதம்பரத்தில் தனிக்கவனம் செலுத்திவருகிறார் என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.
இந்த அடிப்படையில் கதிரவன், சிதம்பரம் அல்லது புவனகிரி ஆகிய இரு தொகுதிகளில ஒன்றில் வேட்பாளராகக் களமிறக்கப் படலாம்.
தி.மு.க. கூட்டணியி லுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதி சீட்டைப்பெறுவதில் முனைப்பாக உள்ளாராம். அதேநேரத்தில் தி.மு.க. கூட்டணியிலுள்ள சி.பி.எம். கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், ஏற்கனவே சிதம்பரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர், கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.க.விடம் இந்த தொகுதியைக் கேட்கும்நிலை உள்ளது. அ.தி.மு.க. சார்பில் பலர் சீட்டு கேட்டாலும்கூட கட்சியையும் தொண்டர் களையும் தொய்வின்றி வழிநடத்தி வரும் மா.செ., சிட்டிங் எம்.எல்.ஏ. பாண்டியனைத்தான் எடப்பாடியார் களமிறக்கு வார் என்கிறார்கள் அ.தி. மு.க.வினர். அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ். குமார், ஜெயந்தி சண்முகம், முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு சுந்தர் போன்றவர் களும் முயற்சியில்உள்ளனர்.
புவனகிரி
கடந்த இரண்டு தேர்தல்களாக இந்தத் தொகுதியில் வெற்றிபெறுகிறவர்கள் எதிர்க் கட்சி வரிசையில் அமர்கிறார்கள் என்றொரு சென்டிமெண்ட் நிலவுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றவர் திட்டக்குடி அருண்மொழித்தேவன். இவர் இந்தமுறை விருத்தாசலம் தொகுதிக்கு மாறப்போகிறார் என்றொரு பேச்சு. ஆனால் சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அருண்மொழித்தேவன் "விருத்தாசலத்தில் நான் போட்டியிடப்போவதில்லை. கட்சி விரும்பினால் மீண்டும் புவனகிரியில் போட்டியிடுவேன்' என்று கூறியுள்ளார். இருந்தும் மகளிரணிச் செயலாளர் எக்ஸ் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாசம், உமா மகேஸ்வரன் போன்றவர்களுக்கும் போட்டியிட ஆசை உள்ளது. தி.மு.க. சார்பில் கடந்தமுறை துரை. சரவணன் இங்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்தமுறை தி.மு.க. சார்பில் அவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பளிக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
(கடலூர் மாவட்ட மீதி தொகுதிகள் வரும் இதழில்...)
-எஸ்.பி.எஸ்.