அவர் ஒரு தீவிர தி.மு.க. அனுதாபி. “"ஜெயலலிதா உயிரோடு இருந்து, கலைஞருக்கு உணர்வுபூர்வமாக தமிழகம் அளித்த இறுதி மரியாதையைப் பார்த்திருக்க வேண்டும்'’என்றார். ‘"இது எந்தவிதத்தில் சேர்த்தி?'’என்றோம் அவரிடம். “அதாவது, ஜெயலலிதாவும் இன்றைய அமைச்சர்களும், இறுதி வரையிலும், அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்காமல், கண்மூடித்தனமாக கலைஞர் எதிர்ப்பில் தீவிரமாகவே இருந்தார்கள். கலைஞரின் இறுதியாத்திரைக்குப் பிறகு, தன்னையும் அறியாமல் அ.தி.மு.க.வினரில் ஒருசிலர் கனத்த மனதோடு பேசினார்கள் என்றார்.
""அண்ணாவே வியந்த தலைவர்; எம்.ஜி.ஆரும் போற்றிய தலைவர்; கலைஞருக்கு நிகரான ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது. கடந்த இரண்டு தடவையும், ஆட்சிப் பொறுப்பை மக்கள் தி.மு.க.வுக்கு வழங்கவில்லை. ஆனாலும், கலைஞர் இறந்தவுடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஓர் உன்னத மரியாதையை ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு அளித்திருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வேறு எந்த தலைவருக்கும் இப்படி ஓர் அம்சம் இருந்தது கிடையாது. எதிரிகளும் பொறாமைப்படும் அளவுக்கு, சாவிலும் கலைஞரின் தனித்தன்மை வெளிப்பட்டிருக்கிறது''’என்று உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் அ.தி.மு.க. கொடிகளும் அரைக்கம்பத்தில் பறந்தன. கோவைக்கள்ளிமடை கட்சிக் கிளை அலுவலக வாசலில் கலைஞரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க.வினரும் உண்டு.
தமிழகத்தில் தனது உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையை முழுவதுமாகப் பெற்றுவிட்டுத்தான், தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கினார் கலைஞர். அது என்ன மாயமோ தெரியவில்லை. தி.மு.க.வினர் நினைத்ததற்கும் மேலாகவே, எல்லாம் நடந்திருக்கிறது. முதலமைச்சராக இறந்த எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் தேசிய அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கலைஞரோ முன்னாள் முதல்வர். மத்தியில் நடப்பதோ ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ காண பேராசைப்படும் பா.ஜ.க. ஆட்சி. ஆனாலும், ஒருதடவை கூட எம்.பி. பதவி வகிக்காத கலைஞருக்காக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மக்களவையும் மாநிலங்களவையும் அவருக்கு இரங்கல் தீர்மானத்தால் புகழாரம் சூட்டி, ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய பாராளுமன்றத்திலேயே தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். துக்கம் அனுசரிக்கப்படுவதாக இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. பிஹாரோ, இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது. தேசமே வியந்து மரியாதை செய்த தலைவர் கலைஞர் என்றால் மிகையில்லை.
இந்த மரியாதை கலைஞருக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. சுதந்திரதின விழாவில் தேசியக்கொடி ஏற்றுவதிலிருந்து திட்டங்களுக்கான நிதி பெறுவது வரையிலும் மாநிலங்களுக்கான பல உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் கலைஞர். அவரது அருமையை உணராதவர்கள், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், அடக்கம் செய்வதற்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க முடியாது என்பதற்கு முன்வைத்த காரணங்களில் ஒன்றாக, கலைஞரோடு வி.என்.ஜானகியை ஒப்பிட்டார்கள். கொடுமை அல்லவா?
உயிரற்ற உடலாகக் கிடத்தப்பட்ட நிலையிலும், கலைஞரின் போர்க்குணமானது, தான் துயில் கொள்ளவேண்டிய இடத்துக்காகப் போராடி வெற்றி பெற்றதை என்னவென்று சொல்வது? அந்தப் போராட்ட உணர்வுதான் கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு இறுதி மரியாதையைப் பெற்றுத்தந்தது.
தனது கல்யாண மண்டபத்தை தி.மு.க. ஆட்சியில் இடித்தார்கள் என்ற கோபம், விஜயகாந்த்தை அவசரமாக தனிக்கட்சி தொடங்க வைத்தது. அந்த விஜயகாந்த், அமெரிக்காவில் இருந்தபடி கலங்கி கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்திய வீடியோ எல்லாரையும் நெகிழ வைத்தது. பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான சி.பி.எம். தோழர் சங்கரய்யா தனது தள்ளாத வயதிலும் டி.வி.யில் கலைஞரின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு, பிரியா விடை கொடுத்த காட்சி உலுக்கிவிட்டது.
சிறுவர்கள் "தாத்தா... தாத்தா' என்றும், பெண்கள் "அப்பா... அப்பா...' என்றும், இளைஞர்கள் "அய்யா... அய்யா...' என்றும், தொண்டர்கள் "தலைவா... தலைவா...' என்றும், ஒட்டுமொத்த தமிழர்களும் "தமிழே... தமிழே' என்றும் தங்கள் சொந்தக் குடும்பத்தின் பெரியவரை இழந்தது போல கதறி அழுதது கலைஞரின் சளைக்காத உழைப்புக்கும் சாதனைகள் நிறைந்த பொதுவாழ்வுக்குமான மரியாதை. அரசியல் களத்தில் அவரை வில்லனாகவே சித்தரித்து ஒரு தரப்பு செயல்பட்டு வந்தது. அதனை எதிர்த்து தனது கொள்கைவழி யுத்தத்தை தொடர்ந்து நடத்திய கலைஞர், தனது மரணத்தில் இந்தியா போற்றும் மாபெரும் ஹீரோவாக மாவீரனாக உயர்ந்து நின்றார்.
-சி.என்.இராமகிருஷ்ணன்