பிப்ரவரி 6, திங்கட்கிழமை அதிகாலையில், மரணம் நிலநடுக்கத்தின் வடிவில் வந்து துருக்கி, சிரியா, லெபனான் நாடுகளை நொறுக்கியது. 7.8 அதிர்வெண் கொண்ட நிலநடுக்கம் தாக்கி யதில் 22,000 பேர் வரை பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 19,800 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 3,80,000 பேர்களுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்துதந்திருக்கிறது துருக்கி அரசு.
பூமியின் நில அடுக்குகளின் விளிம்புகள் நகரும்போது மோதிக் கொண்டதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகத் துருக்கியில் பல்வேறு அதிர்வெண்களில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மீட்புப் பணிகளை மேற்கொள்வதை கடுமையாக பாதித்ததுடன், மக்களை பெரிதும் அச்சுறுத்தியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/turkey-earthiquake.jpg)
நிலநடுக்கத்தால் தென்கிழக்கு துருக்கியும், வடக்கு சிரியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சிரியாவில் பல்லாண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போரால், ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் துருக்கியில் வசித்துவரும் பகுதியும் பாதிப்புக்குள்ளாகியது. மேலும், நிலநடுக்கம் அதிகாலையில் நடந்ததால் பலரும் உறக்கத்திலே சரிந்துவிழுந்த கட்டடங்களுக்குள் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது பரிதாபமாகும்.
நிலநடுக்கத்தின் பாதிப்பைப் பற்றிப் பேசிய துருக்கி நாட்டின் துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே முதல் நாள், "குறைந்தபட்சம் 2,300 பேர் காயமடைந்துள்ளனர். 1,700 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன''’எனத் தெரிவித் தார். அவரது கணக்கு நேரம் செல்லச் செல்ல தவறாகத் தொடங்கியது.
உறைந்துபோகுமளவுக்கு குளிர் நிலவுவதால், வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்கு சுற்றுப்புறங்களிலுள்ள பள்ளிவாசல்களைத் திறந்துவிட துருக்கி அரசு உத்தரவிட்டது. பின், வணிக வளாகங்கள், பொதுக் கட்டடங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்டன. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு அவசரகாலச் சூழ்நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் அதிகமாகத் தாக்கக்கூடிய இடத்தில் துருக்கி அமைந்துள்ளது. 1939-க்குப் பின் தற்போதுவரை துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கங்களிலேயே இதுதான் வலிமையானது என இஸ்தான்புல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களில் ஒருவரான ஒகான் தெரிவித்தார். 1939-ல் துருக்கியின் எர்சின்கன் நகரைத் தாக்கிய நிலநடுக்கம் 33,000 பேரின் மரணத்துக்குக் காரணமானது. அதேபோல் 1999-ல் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு 20,000 பேர் பலியாகினர்.
இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க துருக்கி விமானப் படை, மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை அணுக சிறப்பு விமான வழித்தடத்தை அமைத்துள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் பெட்ரோலியக் கிடங்குகள், எரிவாயுக் கிடங்குகளும் தீப்பற்றியுள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்புக் குழுக்களை உடனடியாக அனுப்பியுள்ளது. நிலநடுக்கத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நாடுகளும் நிவாரண உதவி அறிவிப்புகளை மேற்கொள்ளத் தொடங்கின. இந்தியா, 100 நபர்கள் அடங்கிய தேசியப் பேரழிவு மீட்புப் படையின் இரு குழுக்களை துருக்கிக்கு அனுப்பிவைத்துள்ளது. இதில் சிறப்பு பயிற்சிபெற்ற நாய்கள், மருத்துவக் குழுக்கள், சிறப்பு உபகரணங்கள் அனைத்தும் அடக்கம். துருக்கி அதிபர் எர்டோகன், "ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ இவற்றுடன் 45 நாடுகள் எங்களுக்கு உதவிசெய்வதாக ஆர்வத்துடன் முன்வந்துள்ளன'’எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/turkey-earthiquake1.jpg)
இந்த நிலநடுக்கத்தில் துருக்கியைப் போலவே பாதிக்கப் பட்ட மேலும் இரு நாடுகள் சிரியா, லெபனான். இதில் சிரியா வில் அலெப்போ, லதாகியா, ஹமா, டார்டஸ் உள்ளிட்ட இடங் களில் ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அரசுக்கெதி ரான கிளர்ச்சிக் குழுக்கள் வசமுள்ள பகுதிகளிலும் பாதிப்பு அதி கம். மீட்புப் பணியில் காவல்துறை, ராணுவம், அரசு ஊழியர்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானில் பெரிய அளவு உயிரிழப்பு இல்லை.
பிப்ரவரி 8-ஆம் தேதி துருக்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப் புப்படி 11,342 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கி, சிரியா நாடுகளின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 என்ற அளவில் தற்போது இருந்தாலும், உலக சுகாதார நிறுவனத்தின் யூகத்தின்படி பலி 30,000-ஐ தாண்டுமென நம்பப்படுகிறது.
பல்வேறு இடங்களிலும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் கூக்குரல் கேட்டாலும், உடனடியாக இடிபாடுகளை அகற்றி மீட்கமுடியாமல் மக்கள் கையறுநிலையில் நிற்கின்றனர். மீட்புக் கதைகளில் சில நெஞ்சுருகவும் கண்ணீர் சிந்தவும் வைப்பவை.
கஹ்ராமன்ராஸ் நகரில் பெரிய கட்டடமொன்றின் இடிபாட்டில் மகள் சிக்கியிருக்க, வெளியே தெரிந்த மகளின் கையைப் பற்றிக்கொண்டு தந்தை நம்பிக்கையளித்தபடி இருக்க, கடைசியில் மகளை மீட்கவே முடியாமல்போய் குழந்தை உயிரிழந்த காட்சி, பார்த்தவர்களைக் கண்ணீர்விட வைப்பதாக இருந்தது. சிரியாவில் ஜின்டெரிஸ் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளின்போது இடிபாடுக ளுக்கு இடையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை கண் டெடுக்கப்பட்டது. தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந் தையின் தாய் இறந்துபோயிருந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை அஃப்ரின் பகுதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக் கப்பட்டுவருகிறது. போரால் அகதி யாக மாறியிருந்த குழந்தையை, நிலநடுக்கம், பெற்றோரற்ற குழந்தை யாக மாற்றியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய சிறுமி, தன் தம்பியின் தலையில் அடிபடாத வாறு தனது கைகளால் இடிபாடு களைத் தாங்கியபடி, தம்பிக்கு 17 மணி நேரம் நம்பிக்கையளித்தபடி இருந்த நிகழ்வு உலகையே நெகிழவைத்திருக் கிறது. இவர்கள் இருவரும் பாதுகாப் பாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மீட்புப் பணி களுக்கு வந்திருந்த ஐ.நா. உறுப்பினர் முகம்மது சபா பகிர்ந்த அவர்களின் புகைப்படம் உலகெங்கும் வைரலானது.
அலி பத்தல் எனும் முதியவரின் கதையோ நெஞ்சைக் கனக்கவைப்பது. தன் வீட்டின் இடிபாடுகளுக்கு அரு கேயே அமர்ந்தபடி, “எனது குடும்பத் தினர் இந்த கட்டடத்துக்குக் கீழே தான் உள்ளனர். அவர்களின் குரல்களை என்னால் கேட்கமுடிகிறது. அவர் களை மீட்கத்தான் யாரும் இல்லை'' என்று புலம்பியபடியே இருக்கிறார். நிலநடுக்கம் நடந்து ஐந்து நாட்களான நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர் கள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது என்பதே யதார்த்தம். எனினும் வந்து குவியும் நிவாரணப் பொருட்களும், உதவிகளும் இரு நாடுகளையும் ஆசுவாசம்கொள்ள வைத்துள்ளன. மக்கள் இடிபாடுகளிலிருந்து நிவாரண மையங்களை நோக்கி நகரத் தொடங்கி யுள்ளனர். எத்தனை இருண்ட இரவும் விடிந்துதானே ஆகவேண்டும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/turkey-earthiquake-t.jpg)