மிழகத்தில் விருது வழங்கும்போது சர்ச்சை ஏற்படு வது வழக்கம். "என்னைவிட அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.… அவருக்கு எப்படி விருது கொடுக்கலாம்'…என ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்பும். அதிலுள்ள மனநிலை யைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அறிவுலகச் செயல்பாடு எனப்படும் புத்தகக் கண் காட்சிக்கு எதிராக சர்ச்சைக் குரல்கள் எழுவதும், கண்ட னங்கள் வெடிப்பதும் புதிதுதான்.

bbபுத்தகக் கண்காட்சியோடு தொடர்பில்லாதது என்றாலும் வாசிப்பு தொடர்பாக வேறொரு சர்ச்சையும் கடந்த வாரம் நிகழ்ந்தது. துக்ளக்கின் பொன்விழா நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், "முரசொலி வாசிப் பவர்கள் தி.மு.க.காரர்கள். துக்ளக் வாசிப்பவர்கள் அறிவாளிகள்' என பேசப் போக... சமூக ஊடகங்களில் துக்ளக் வாசிப்பவர்களைக் குறித்த மீம்கள் தூள் பறந்தன.

43-ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவரை நடைபெற்றது. புத்தகக் கண்காட்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் சர்ச்சையான புத்தகங்களைக் காட்சிக்கு வைத்ததாகச் சொல்லி கடையொன்று அகற்றப்பட்டதுதான் சர்ச்சையின் தொடக்கம். அங்கிருந்துதான் கண்டனக் குரல்கள் எழுந்தன.

புத்தகக் கண்காட்சி அரங்குக்கு வெளியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு எழுத்தாளர்கள் மேடையேற்றப்பட்டு வெவ்வேறு தலைப்பில் பேசக் கேட்டுக்கொள்ளப்படுவது வழக்கம். மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கடந்த 13–ஆம் தேதி பேச அழைக்கப்பட்டிருந்தார்.

Advertisment

மேடையேறிய அவர், ""தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் -விற்பனையாளர் சங்கத்திற்கு (பபாசி) என தனித்த மாண்புகள் இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அரசை விமர்சித்தாக காவல்துறை கூறலாம், அரசு கூறலாம். புத்தகக் கண்காட்சியின் நிர்வாகிகள் கூறக்கூடாது.

அரசை விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியைப் பற்றிய புத்தகங்கள் இருக்கக்கூடாது. அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இருக்கக்கூடாது. அண்ணாவின் நூல்கள் விற்கக்கூடாது. வெங்காயத்தைப் பற்றி எழுதக்கூடாது. உப்பைப் பற்றி பேசக்கூடாது. கீழடி பற்றியே பேச முடியாது.

gg

Advertisment

கீழடியே மத்திய அரசுக்கு எதிரான சொல்தான். ஆனால், கீழடி தொடர்பாக ஒரு அரங்கமே இருக்கிறது. அதை எதிர்க்கமுடியுமா? எனவே பபாசியின் நடவடிக்கையை கண்டித்து எனக்களித்த "கீழடி ஈரடி' தலைப்பில் உரையாற்ற மறுத்து என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்'' என்று பேசி இறங்கிச் செல்ல... புத்தகக் கண்காட்சி மீதான சர்ச்சையில் தமிழகத்தின் கவனம் குவிந்தது. ஏற்கெனவே முணுமுணுப்பாக எழுந்த குரல்கள் கண்டன கோஷங்களாக ஒலிக்கத் தொடங்கின.

இந்நிலையில் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கருப்புச் சட்டை அணிந்த பார்வை யாளர்களைக் குறிவைத்து காவல்துறை கேள்வியெழுப்புவதாக சர்ச்சை எழுந்தது. புத்தகக் கண்காட்சி குறித்த ஒவ்வொரு செய்திகளையும் மத்திய- மாநில உளவுத்துறை போலீசார் கண்காணித்துச் செய்தி அனுப்புவ தாகவும், இது அறிவுச் செயல்பாட்டுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது எனவும் இப்படியே போனால், கண்காட்சியில் என்ன புத்தகங்கள் விற்கலாம், எதை விற்கக்கூடாதென அரசு தலையிட ஆரம்பிக்குமென எழுத்தாளர் கள், பதிப்பாளர்கள் மத்தியிலே ஆட்சேபம் எழுந்தது.

இது ஒருபக்கமெனில், ஜனவரி 15-ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியில் "தமிழ் மெய்யியல்' என்ற தலைப்பில்

hh

பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்த கரு. ஆறுமுகத் தமிழன், ஆன்மிக விஷயங்களைத் தொட்டுப் பேசுகையில் தற்போதைய குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட விவரங்களையும் பேச்சில் இழுக்க, புத்தகக் கண்காட்சி நிர்வாகத்தால் பேச்சின் இடையிலேயே தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது இன்னும் சர்ச்சையை அதிகமாக்கியிருக்கிறது.

அப்படி என்ன பேசினார் கரு.ஆறுமுகத் தமிழன், எதற்கு அவரை வெளியேற்றினார்கள்?

""இப்போது குடியுரிமை சட்டம் வருகிறது அல்லவா. அவற்றில் நமது அரசு வெளியிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவோம். மற்றவர்களுக்கு யோசித்து வழங்குவோம் என்று கூறுகிறது. இது நியாயம்தானே. ஒரு வீட்டில் வெளியாள் சம்பந்தம் இல்லாமல் நுழைந்தால், வாசலில் நிற்கின்ற வாட்ச்மேன் "நீ யாரு, நீ யாரப் பாக்க வந்திருக்க, நீ வராத வெளிய போ' என்று சொல்வது நியாயம்தானே என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்.

இதில் என்ன சிக்கலென்றால் அவன் நம்மிடமும் "உங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா' என்று கேட்கிறான். "என்னிடம் பிறப்புச் சான்றிதழ் கிடையாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் பிறக்கவில்லை. என்னுடைய பாட்டி வீட்டில் பிறந்தேன். அப்படியானால் உன்னுடைய அப்பாவுக்கு இருக்கிறதா என்று கேட்கிறான். எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை. அப்படியிருக்க என்னுடைய அப்பாவுக்கு எப்படி இருக்கும்' என்று கேட்டால், "உன்னுடைய தாத்தாவுக்கு இருக்கிறதா' என்று கேட்கிறான்.

"என்னுடைய தாத்தா பர்மாவில் இருந்தார். நான் எங்கே போய் சான்றிதழ் வாங்குவது?' "அப்படியானால் உன்னுடைய அம்மா வழி தாத்தாவிற்கு இருக்கிறதா' என்று கேட்கிறான். அவர் மலேசியாவில் இருந்தார். பிறகு எங்கு போய் நான் பிறப்புச் சான்றிதழ் வாங்கி வந்து, நான் இந்த ஊர்க்காரன்தான் என்பதை நிரூபித்து குடியுரிமை பெறுவது?

சும்மா குருட்டாம்போக்கில் குடியுரிமைச் சட்டம் என ஒன்றைக் கொண்டுவந்தால், அதை ஆமா ஆமா என்று ஆதரித்துச் செல்வதில் எந்தவொரு நியாயமும் கிடையாது. இதை விசாரிக்கவில்லை என்றால் நமக்கும் சேர்த்து ஆணி அடித்துவிடுவார்கள். அதுமட்டும் இல்லாமல் அரசுக்கு எதிரானவர்களையெல்லாம், "நீ கோளாறான ஆளு, நீ தேசவிரோதி கிளம்பு' என்று கூறிவிடுவார்கள்'' என மத்திய அரசின் பக்கம் சாடினார்,

மாநில அரசையும் அவர் விட்டுவைக்க வில்லை. ""யாரையாவது நாம் சந்தித்தால் வணக்கம் என்று கூறுவோம். வணக்கத்தில் வீரவணக்கம், செவ்வணக்கம் என்று உள்ளது. அப்படியானால் கோழை வணக்கம் என்று ஒன்று உள்ளதா?. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அப்புறம் என்ன வீர வணக்கம்?. பொதுவுடைமை தோழர்கள் வணக்கம் கூறுகின்றபோது செவ்வணக்கம் என்று கூறுவார்கள்.

டயருக்கு வணக்கம் வைப்பவர்களை உங்களுக்குத் தெரியும். அப்படி வளைந்து சக்கரம் எந்த இடத்தில் உள்ளதோ, அந்த இடத்தில் வணக்கம் வைப்பவர்கள். அப்புறம் நமஸ்காரம் என்று வணக்கம் ஒன்று இருக்கிறது. அது உடனே காலில் விழுந்து கும்பிடுவது. இப்படி வீரவணக்கம், செவ்வணக்கம், டயர் வணக்கம், நமஸ்காரம் என்று நான்கு வகை வணக்கங்கள் உண்டு. இதில் டயர் வணக்கம் என்பது அறியாமல் செய்கின்ற ஒன்று அல்ல. டயரைத்தான் கும்பிடுகிறோம் என்று தெரிந்தே செய்வதுதான். இந்த வணக்கத்தில் ஒரு சுயநலத்தேவை உள்ளது. அப்படி வணங்கினால் வணங்கப்படுபவர் மகிழ்வார். அவர் மகிழ்ந்தால், நமக்கு தர வேண்டியதை தருவார். நாம் பெற வேண்டியதை பெறுவோம்''“என போட்டுத் தாக்கினார்.

இந்நிலையில் புத்தகக் கண்காட்சி நிர்வாகிகள் கரு.ஆறுமுகத் தமிழன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சிறிய வாக்குவாதத்துக்குப் பின் கரு.ஆறுமுகத் தமிழன் நிகழ்விலிருந்து வெளி யேறினார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்ட னம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்வி களையும் எழுப்பினர்.

விரைவில் சென்னை புத்தகக் கண்காட்சி பொன்விழாவைத் தொடவிருக்கும் நிலை யில் இத்தகைய கண்டனங்கள் எழுவது ஆரோக்கியமான செயலா? விவாதமும் மறுப்பும் அறிவின் வழி. உண்டென்றும் இல்லையென்றும் மறுத்தும் ஆமோதித்தும்தான் அறிவியல் வளர்ந்திருக்கிறது.

அந்த அறிவியலை ஜெட் வேகத்துக்கு வளர்த்துச் சென்றதில் பதிப்பு தொழில்நுட்பத்துக்கு பங்குண்டு. வெறுமனே ஆமாம் சாமி போடும் இடங்களில் அறிவு வளர்வது இல்லை. அறிவின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் இத்தகைய புத்தகக் கண்காட்சிகளுக்கு இவ்வளவு கெடுபிடிகள் தேவைதானா?

பேச்சுக்கும் எழுத்துக்கும் அனுமதி மறுக்கப்படும் இடத்தில் கருத்துரிமை எப்படி முளைவிடும். அடுத்தடுத்த கண்காட்சியில் இத்தகைய சர்ச்சைகளை வேரறுப்பது குறித்த வழிமுறைகளை இப்போதிருந்தே பபாசி நிர்வாகிகள் ஆலோசிக்கவேண்டும்.

-க.சுப்பிரமணியன், ராஜவேல்