ட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் ஒரு கூலித் தொழிலாளியை இரண்டு நபர்கள் ஓட ஓட விரட்டி அவருடைய கைகளை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இயல்பாக ஏறிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த பொது மக் கள் அலறி யடித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

dd

இச்சம்பவம் குறித்து நாம் விசாரித்தபோது, திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ராமு, கூலித்தொழிலாளி. இவர், கூலி வேலை செய்துவந்ததோடு, அப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை உடனடியாகக் காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் ஹரி ஆகிய இரண்டு ரவுடிகளும் சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் அடிதடியில் ஈடுபட, அது குறித்த தகவலை காவல் நிலையத்திற்கு ராமு தெரிவித்துள்ளார். பாலக்கரை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் இருவரையும் பிடிப்பதற்காக வந்தபோது, சந்திரனைத் தாக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் மீது ஏற்கெனவே கஞ்சா விற்பனை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவர்களைப் பிடிக்க காவல்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த பதினெட்டாம் தேதி, ராமு தன் வீட்டருகே வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த ரவுடிகள் விஜய், ஹரி இருவரும் "காவல் நிலையத்திற்கு எங்களைப் பற்றி தகவல் கொடுத்தது நீதான்''’ என்று கூறி தாக்க முயன்றனர். தப்பியோடிய ராமுவைத் துரத்திச் சென்று தாக்கியதோடு, அரிவாளால் ராமுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். ராமுவின் கையை மணிக்கட்டுடன் துண்டாக வெட்டினர். ரத்தம் சொட்ட மயங்கிய ராமுவை அக்கம்பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்க, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு ரவுடிகளும் அப்பகுதியில் செய்யும் சட்டவிரோதமான செயல்கள் அனைத்தையும் ராமு காவல்நிலையத்தில் தெரிவித்ததுதான் இந்த அரிவாள் வெட்டுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினரோ, அந்த ரவுடிகளிடம் ராமு கடனாகப் பணம் பெற்றதோடு, அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாமல் பல்வேறு காரணங்கள் கூறியதாகவும், மிரட்டினால் காவல்நிலையத்தில் புகார் செய்து விடுவதாகவும் கூறியதால் ரவுடிகள் ஆத்திரத்தில் அவரது கையை வெட்டியதாக கூறுகிறார்கள். இப்படி பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டாலும், அவருடைய கையைக் கொடூரமாகத் துண்டித்தது பரிதாபத்துக்குரிய செயல் என்று கூறுகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Advertisment