இரண்டாவது கணவருடன் தனிமையில் இருக்க முடியவில்லை என்ற காரணத்தால் தாயே தன் குழந்தைகளுக்கு தீக்காயத்தை ஏற்படுத்திய சம்பவம் பொன்னேரி பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி யில் கடந்த சில ஆண்டுகளாக பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக கூலித் தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து தங்கி வேலை பார்த்துவருகின்றனர். அங்குள்ள கூலித் தொழிலாளிகளின் இரண்டு குழந்தைகளின் கைகளில் பலத்த தீக்காயம் இருந்ததை கண்டு பதறிப் போன அப்பகுதி மக்கள் விசாரிக் கையில், கணவரைப் பிரிந்து வேறு ஒருவருடன் இளம்பெண் சத்யா வசித்து வருவதும், குழந்தைகளுக்கு தாயே சூடு வைத்ததும் தெரிய வந்தது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பகுதி மக்களே சேர்த்தனர். குழந் தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண் சத்தியாவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதன்மூலம் இவர்களுக்கு பிறந்த 5 வயது பெண் குழந்தையும், 3 வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர், முறையாக விவாகரத்துகூட பெறாமல், அன்பரசன் என்பவரோடு பழக்கமாகி, திருமணம் செய்து வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது. தனது சொல் பேச்சு கேட்காததால் குழந்தைகளுக்கு கை, கால்களில் சூடு வைத்ததாக போலீஸ் விசாரணையில் சத்தியா கூறியுள்ளார். ஆனால் உண்மையில், அன்பரசனோடு குடும்பம் நடத்த இரு குழந்தைகளும் தடையாக இருப்பதால் ஏற்பட்ட வெறுப்பால் தீக்காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காயத்தை பரிசோதித்த பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர், கைகள் மற்றும் உடலில் பல இடங்களிலுள்ள தீக்காயங்கள் அழுகும் நிலையில் உள்ளதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தை களை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து சத்தியாவையும், அன்பரசனையும் பொன்னேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரத்திடம் பேசினோம் "சம்பந்தப்பட்டவர்கள் முகவரி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன்'' எனக் கூறினார். இது தொடர்பாக பொன்னேரி காவல் ஆய்வாளர் குணசேகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "குழந்தைகளுக்கு பெரிய அளவில் தீக்காயங்கள் இருப்பதைப் பற்றி அப்பகுதி மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். குழந்தைகள் என்பதால் நாங்கள் அவர்களை விசாரிக்கக்கூடாது என்பதால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து குழந்தைகளை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
குழந்தைகளை மீட்டுச் சென்றதாக கூறப்படும் திரு வள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அதிகாரி விக்னேஷை தொடர்பு கொண்டோம். அவ ரோ அலட்சியமாக, "புகார் கொடுக்க யாரும் முன்வரவில்லை, குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது'' எனக்கூறி தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர் தொடர்பை எடுக்கவில்லை.
இது தொடர்பாக முன்னாள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனநல ஆலோசகருமான சரண்யா ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல் துறையே தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்து, பெற்றோர்களை செக்ஷன் 75 ஜே.ஜே. ஆக்ட்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கலாம். அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், குழந்தைகளிடம் வாக்குமூலம் பெற்று, காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்து, இதற்கு காரணமான பெற்றோர்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் அலட்சியப்படுத்துவதால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை சமூக நலத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
தங்களுக்குத் தொந்தரவாக இருப்பதாகக் கருதி, குழந்தைகளுக்கு மிகக்கடுமையான தீக்காயத்தை ஏற்படுத்திய தாய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, குழந்தைகளை சமூகநலத்துறையின் மூலம் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?