டிஷாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த கொடூர விபத்திற்கான காரணங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.

மேற்குவங்க மாநிலத்தின் சாலிமர் ரயில்வே ஜங்ஷனிலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்ட கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பஹானகா ரயில்வே நிலையம் அருகே பிரதான தண்டவாளத்திலிருந்து விலகி லூப் லைனில் (இணைப்பு தண்டவாளம்) திடீரென்று நுழைந்தது.

tt

Advertisment

லூப் லைனில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அதன்மீது மிக வேகமாக மோதியது கோரமண்டல். இதனால் ஏற்பட்ட கடுமையான சத்தம் அந்த பகுதியையே மிரள வைத்தது. கோரமண்டலின் வேகம் மணிக்கு 128 கி.மீ. என்பதால் அதே வேகத்தில் சரக்கு ரயிலோடு மோத, கோரமண்டலின் ரயில் இன்ஜின், சரக்கு ரயிலின் மீது ஏறி நின்றது. கோரமண்டலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு தூக்கி வீசப்பட்டன. அதில் சில பெட்டிகள் அருகே இருந்த மற்றொரு பிரதான தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரிலிருந்து கொல்கத்தா நோக்கி 125 கி.மீ. வேகத்தில் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், தூக்கி வீசப்பட்ட கோரமண்டலின் பெட்டிகள் மீது கடுமையாக மோதியதில் ஹவுரா ரயிலின் சில பெட்டிகளும் தடம் புரண்டன.

மூன்று ரயில்கள் மோதியதில் பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து கோர விபத்து ஏற்பட் டது. பயணிகளை சுமந்து வந்த 2 ரயில்களிலும் சுமார் 2000 பேர் பயணித்திருந்தனர். இரவு 7 மணி என்பதால் யாரும் உறங்கவில்லை. இவர்களில் பலருக்கும் இதுதான் இறுதிப் பயணம் என்பது தெரிந்திருக்கவில்லை. மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் ரயில் பெட்டிகளுடன் பயணிகளும் தூக்கி வீசப்பட்டனர். எங்கும் மரணஓலம்!

விபத்தின் தகவலறிந்து ஒடிஷா அரசும், ரயில்வே நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதேசமயம், உள்ளூர் மக்களும் ஸ்பாட்டில் குவிந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் பயணிகளை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தது பேரிடர் மீட்புப் படை! தண்டவாளத் தின் குறுக்கே கிடந்த பெட்டிகள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மீட்புப்பணியில் 1200 பணியாளர்கள், 200 ஆம்புலன்ஸ்கள், 100 பேருந்து கள், 50-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த கொடூர விபத்தில் 275 பேர் பலியாகியிருக்கிறார்கள். பலரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்படவில்லை. இதனால் பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. இதற்கிடையே, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் 800-க்கும் அதிகமான நபர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். விபத்துக்கான காரணங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினார். பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

விபத்தினை கேள்விப்பட்டதும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பனீந்திரரெட்டி, குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரை ஒடிசாவுக்கு அனுப்பிவைத்தார்.

trainaccident

Advertisment

கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உள்ளிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் ஸ்டாலின். இதற்கிடையே, ஸ்பாட்டுக்கு விரைந்து சென்ற தமிழக குழுவினர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் ரயில்வே அதிகாரிகளிடமும் மருத்துவமனையிலுள்ள டாக்டர்களிடம் விசாரித்தனர். இந்த விபத்தில் தமிழர்கள் சிக்கியிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரும் பொறுப்பினை ஏற்றிருந்தது உதயநிதி தலைமையிலான குழு. அதிர்ஷ்டவசமாக தமிழர்கள் யாரும் பலியாகவில்லை. காயமடைந்தவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண் டார் உதயநிதி. இதுகுறித்த தகவல்களை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியபடி இருந்தார். சென்னைக்கு வந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிகக்கோரமான ரயில் விபத்து என சொல்லப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினிவைஸ்னவ், "மின்னணு இண்டர்லாக்கிங் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதலால்தான் விபத்து நிகழ்ந்துள்ளது. இது எப்படி நிகழ்ந்தது? யார் செய்தார்கள்? என்பது விசாரணைக்குப் பிறகே தெரியும்'' என்கிறார். விபத்து குறித்து பேசிய இந்திய ரயில்வே வாரியத்தின் உறுப்பினரான ஜெய வர்மா சின்ஹா, ‘’சிக்ன லில் ஏற்பட்ட பாதிப்பி னால் விபத்து நடந் திருக்கிறது. இது மனிதத்தவறா? இயந் திரக் கோளாறா? என்பதில் குழப்பம் இருக்கிறது. அது தெளி வானதும் நிஜ கார ணம் தெரிந்துவிடும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது''’ என்கிறார்.

இதற்கிடையே பல்வேறு கோணங் களுடன் விசாரணை யை நடத்திவரும் ரயில்வே அமைச்சகம், படுகாயங்களுடன் தப்பித்திருக்கும் கோரமண்டல் ரயிலின் டிரைவரிடம் விசாரித்திருக்கிறது. பிரதான தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தபோது எதற்காக லூப் லைனுக்கு ரயில் மாறியது? என அதிகாரிகள் கடுமையாக விசாரித்துள்ளனர்.

trainaccident

அப்போது, "லூப் லைனில் கோரமண்டல் ரயில் செல்ல க்ரீன் சிக்னல் விழுந்திருந்தது. அதற்கேற்ப பிரதான தண்டவாளத்திலிருந்து லூப் லைனுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் ரயில் சென்றது. லூப் லைனில் சரக்கு ரயில் இருப்பது எங்களுக்குத் தெரியாது. லூப் லைனில் சரக்கு ரயில் செல்வதற்காக க்ரீன் சிக்னல் ஏற்கனவே தரப்பட்டிருந்திருக்கலாம். ஆனால், சரக்கு ரயில் லூப் லைனுக்குள் சென்றதும் க்ரீன் சிக்னல் துண்டிக்கப்பட்டு பிரதான தண்டவாளத் தினை நேர் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் கோரமண்டலும் லூப் லைனுக்குள் நுழைந்துவிட்டது.

அல்லது பிர தான தண்டவாளப் பாதையிலிருந்து பிரியும் லூப் லைன், குறிப்பிட்ட தூரம் சென்று மீண்டும் பிரதான தண்ட வாளத்தில் இணைந்து விடும். அப்படியிருப்ப தால் லூப் லைனுக் குள் சரக்கு ரயில் நிற்பதை மறந்துவிட்டு கோரமண்டல் ரயிலுக்கு லூப் லைனுக்குள் நுழையும் சிக்னல் தரப்பட்டி ருக்கலாம்.

அல்லது சரக்கு ரயிலுக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த லூப் லைனுக்கான க்ரீன் சிக்னல் மாறாமல் இருந்திருக்கலாம். இதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை. இது எதனால் ஏற்பட்டது என எனக்குத் தெரியாது''‘என்று விவரித்திருக்கிறார் கோரமண்டல் ரயில் டிரைவர்.

மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என மத்திய அமைச்சர் அஸ்வினி சொல்லியிருக்கும் நிலையில், இண்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் என்ன என்பது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "மின்னணு இண்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது, ரயில்களுக்கிடையிலான சிக்னல்களை ஒருங்கிணைத்து வழித்தடங்களை தயாராக வைத்திருக்கும் ஒரு தொழில்நுட்பம். ரயில்களுக்கு சிக்னல் தர, ஆக்ஷல் கவுண்டர்ஸ் என்கிற தொழில் நுட்பத்தையும், ஆட்டோமேட் டிக் ப்ளாக் சிக்னலிங் தொழில்நுட்பத்தையும் ரயில்வே நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த தொழில் நுட்பத்தைத்தான் மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டம் ஒருங்கிணைக்கிறது.

tt

அந்த வகையில், தண்டவாளத்தில் ரயில் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கு ஆக்ஷல் கவுண்டர்ஸ் சிஸ்டம் பயன்படுகிறது. அதேபோல, ரயில் தடங்களை பிரிக்கும் வேலையை ஆட்டோமேட்டிக் ப்ளாக் சிக்னல் சிஸ்டம் செய்கிறது. அதாவது, ஒரு ப்ளாக்கில் (தண்டவாளம்) ஒரு ரயில் மட்டுமே நிற்க வேண்டும். ஒரு ப்ளாக்கிலிருந்து ரயில் புறப்பட்ட பிறகே அடுத்த ரயில் அந்த ப்ளாக்கில் நுழைய அனுமதிக்கும். அதற்கேற்ற வகையில் சிக்னல்களை இந்த சிஸ்டம் வழங்குகிறது.

ஆக, அதிமுக்கியமான இந்த வேலைகளை யும் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மேற்கண்ட 2 தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்கும் முக் கிய பணிகளை செய்வதுதான் மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டம். இந்த சிஸ்டத்தில் மாறுதல் ஏற்பட்டதால் தான் விபத்து நடந்திருக்கலாம் என அமைச்சர் அஸ்வினி சொல்கிறார். ஆனால், கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் இத்தகைய தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ரயில்வே அமைச்சகத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கிறார் கள் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள். ஆனால், இதனை சரி செய்ய ரயில்வே அமைச்சகமும், வாரியமும் அக்கறை காட்டவில்லை''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறது மத்திய மோடி அரசு. ஆனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஓடும் ரயில்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக கவாச் என்கிற தொழில் நுட்பத்தை உருவாக்கியிருக் கிறோம் என்று கடந்த 2022 மார்ச் மாதத்தில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.

அதாவது, இந்திய ரயில்வே துறையின் ஓர் அங்கமாக இருக்கிறது ரிசர்ச் அண்ட் ஸ்டாண் டர்டு ஆர்கனைசேஷன் என்ற அமைப்பு. இந்த அமைப்பு மூன்று தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தேசிய தானியியங்கி ரயில் பாதுகாப்பு என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இதற்குத்தான் கவாச் என்று பெயரிட்டிருக்கிறது மத்திய அரசு. ரயில் மோதல்களைத் தவிர்க்கவே இந்த அதிநவீன தொழில் நுட்பம் உருவாக்கப் பட்டதாகவும் அதற்காக சுமார் 17 கோடியை செலவிடப்பட்டதாகவும் மத்திய அரசு மார் தட்டிக்கொண்டது. இப்படி உருவாக்கப்பட்ட கவாச் சிஸ்டம் கருவியை ரயிலின் இன்ஜினுடன் இணைத்து விட்டால் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக 2 ரயில்கள் வந்தாலும் குறிப்பிட்ட தூரத்தில் தானாகவே ப்ரேக் போட்டு ரயில்களை எந்த விபத்துமின்றி நிறுத்தி விடும். இதனை கடந்த 2022 மார்ச் மாதத்திலேயே சோதனை ஓட்டம் நடத்தி பாதுகாப்பை உறுதி செய்தனர். அப்படி கவாச் சிஸ்டம் அதிவேக ரயில்கள் அனைத்திலும் பொருத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் சொல்லியிருந்தார்.

ஆனால், கொல்கத்தாவிலிருந்தும் பெங்களுருவிலிருந்தும் டெல்லியை நோக்கி வரும் ரயில்களில் மட்டுமே இந்த கவாச் கருவியை பொருத்தியுள்ளனர். மற்ற பெருநகரங்களுக்கிடையே ஓடும் ரயில்களில் கவாச் கருவியை இணைக்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, தற்போது விபத்துக்குள்ளாகியிருக்கும் முக்கிய அதிவேக எக்ஸ்பிரஸான கோரமண்டல் ரயிலில் இந்த கருவியை பொருத்தவில்லை. ஒருவேளை இந்த கருவி இருந்திருந் தால் இந்த கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, ரயில்வே வழித்தடங்களில் ரயில்வே சிக்னல் விவகாரத்தில் குறைபாடுகள் இருப்பதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரி கள் 3 மாதங்களுக்கு முன்பே இந்திய ரயில் வேயின் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி யிருக்கிறார்கள். அதாவது, பெங்களூர்-டெல்லி கிராந்தி எக்ஸ்பிரஸ், சிக்னல் குளறுபடிகளால் கடந்த பிப்ரவரி மாதம் ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோதும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்திய ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பிய தென்மேற்கு ரயில்வேயின் தலைமை அதிகாரி ஹரிசங்கர் வர்மா, ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் ஏற்படவிருந்த விபத்து, சிக்னல் விசயத்தில் குறைபாடு இருப்பதைக் காட்டுகிறது. மின்னணு தொழில்நுட்பத்தை பராமரிக்கும் இன்ஜினியர், இண்டர்லாக்கிங் சிஸ்டத்தை தவிர்த்திருக்கிறார். இதனை உடனடியாக கவனித்து சரிசெய்யாவிட்டால் எதிர்காலத்தில் பேரழிவு ஏற்படும் என்று சுட்டிக்காட்டி யிருக்கிறார். இதனை மேற்கோள்காட்டி நம் மிடம் பேசும் தென்னக ரயில்வே அதிகாரிகள், "ஹரிசங்கர் வர்மாவின் எச்சரிக்கையை உணர்ந்து பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி, ரயில்வே அமைச்சகம் ஆகிய 3 தரப்பும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் கோரமண்டல் ரயில் விபத்தை தவிர்த்திருக்க முடியும்''’என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆக, முறையாக பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு ரயில்வே துறையை மேம்படுத்திவிட்டதாகவும், ரயில்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் நாடகமாடிக்கொண்டிருந்திருக்கிறது மோடி அரசு.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல, தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கிறார் அமைச்சர் அஸ்வினி. சி.பி.ஐ. விசாரணையில் நிஜமான உண்மையும் அதன் குற்றவாளிகளும் வெளியாகப்போவதில்லை. அப்படியானால் நிஜமான குற்றவாளிகள் யார்? மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும்தான் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

மொத்தத்தில், ரயில்வே துறையை மத்திய அரசு நாசமாக்கி வைத்திருப்பதன் விளைவு…275 மனித உயிர்கள் பலி! -இரா.இளையசெல்வன் கட்டணக் கொள்ளை!

"எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்' என்றொரு பழமொழி உண்டு. ஒடிஸா ரயில் கோரவிபத்து காரணமாக 100-க்கும் மேலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் அதிகளவில் புவனேஸ்வர் செல்கிற நிலையில், புவனேஸ்வர் செல்வதற்கான விமானக் கட்டணங்கள் இரு மடங்காகவும் மும்மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வருக்கான கட்டணம் ரூ.25,000, திங்கள்கிழமை ரூ 12,500 வரை போயுள்ளது. சில விமான நிறுவனங்களில் கிட்டத்தட்ட இது ரூ 80,000 வரை கூட வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நெருக்கடியில்லாத தினங்களில் ரூ.4000 முதல் 8000 வரையே கட்டணங்கள் வசூலிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. அரசு தன் வசமிருந்த விமான சேவையை தனியாருக்கு விற்றுவிட்ட நிலையில், லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தனியார் விமான நிறுவனங்கள் இந்தக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

-மணி