தமிழக வாசகர் களை பெருமளவில் ஈர்க்கின்ற சென்னை புத்தக காட்சியில், அரசுக்கு எதிராகப் புத்தகங்களை விற்ற புகாரின் அடிப்படையில் "மக்கள் செய்தி' மையத் தின் வி.அன்பழகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
"புத்தக காட்சி அரங்கு ஒதுக்கீட்டுக்கான விதிகளை ஒப்புக்கொண்டு விட்டு, அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறல் ஆகும்' எனப் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு, மக்கள் செய்தி மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
அரசியல்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் பல புத்தகங்களை மக்கள் செய்தி மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. "கைப் புள்ள ஸ்டாலின்', "கே.டி. சகோதரர்கள்' என தி.மு.க. தரப்பை சீண்டிய புத்தகங் களும் இதில் அடக்கம். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் முட்டை ஊழல், இலவச மின்சாரம் 15 கோடி ஊழல், உள்ளாட்சி ஊழல், அம்மா உணவகம் 300 கோடி இழப்பு உள்பட பல புத்தகங்களை அரங்கு எண் 101-ல் விற்பனைக்கு வைத் திருந்தனர். அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பது விதிகளுக்கு மீறல் என்பதால் உடனே கடையைக் காலி செய்யும்படி பபாசி நிர்வா கத்தின் சார்பில் செயலாளர் முருகன் கூறியபோது, அவரை அன்பழகன் மிரட் டியதாகப் புகார் தெரிவிக்கப் பட்டது. ஞாயிறு அதிகாலை யில் அன்பழகன் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், விசா ரணைக்காக அழைத்துச் சென்று கைது செய்து, நீதி பதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
புத்தகத்தில் உள்ள செய்திகள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப் பட்டவை என்கிறது மக்கள் செய்தி மையம். சட்டப்படி பெற்ற தகவல்களை சட்டத்திற்குப் புறம்பான வகையில் பயன்படுத்தும் போக்கை கடைப்பிடிப்பதாக ஏற்கனவே புகார்கள் தெரிவிக்கப்பட்டு, அன்பழகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிகழ்வும் உண்டு.
தற்போது, புத்தகக் காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்கிற பபாசி யின் விதிமுறை, பதிப்பாளர் களின் உரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயலாகும். அரசால் தடை செய்யப்பட்ட புத்தகங்களைத்தான் விற்கக்கூடாதேயன்றி, அரசை விமர்சிக்கும் புத்தகங்களே இருக்கக்கூடாது என்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதற்காக கைது. சிறைவைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நக்கீரன் கடுமையாகக் கண்டிக்கிறது.
2012-ல் நக்கீரன் மீது ஜெ.அரசு பழிவாங்கும் நட வடிக்கை மேற்கொண்ட போதும், புத்தகக்காட்சியில் நக்கீரன் அரங்கை போலீசார் குறி வைத்தனர். பெயர்ப்பலகை மறைக்கப்பட்டது. ஆசிரியர் படம் போட்ட புத்தகங்கள், மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி பேனர் ஆகியவை அகற்றப்பட்டன. அப்போதும் "பபாசி' நிர்வாகம் அரசின் விருப்பத்திற்கேற்ப செயல்பட் டது. நக்கீரன் தனது உறுதியான நிலைப்பாட்டால் அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வென்றது.
-கீரன்