எஸ்.வீ.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடிய பத்திரிகையாளர்கள் மீதே கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக பகீர் குற்றச்சாட்டுகள் பரவிவருகின்றன.

Advertisment

svsekar

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களிடம் பேசினோம், ""எஸ்.வீ.சேகரின் மிக இழிவான கருத்து சமூக வலைத் தளங்களிலிருந்து பரவியதுமே எஸ்.வீ.சேகருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். ‘"பா.ஜ.க. அலுவலகத்திற்குச் சென்று தமிழிசை சௌந்தரராஜனிடம் மனு கொடுத்து, எஸ்.வீ.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம்'’ என்று சொல்லியிருக்கிறது பிரபல பெண் பத்திரிகையாளர்கள் தரப்பு. ‘"இதற்கு, எதற்கு பா.ஜ.க. அலுவலகம் செல்லவேண்டும்? எஸ்.வீ.சேகர் வீட்டை முற்றுகையிடுவோம்' என்று இன்னொரு பிரபல பெண் பத்திரிகையாளர்கள் தரப்பு வலியுறுத்த…சிறிதுநேர குழப்பங்களுக்கிடையே, பா.ஜ.க. அலுவலகத்திற்கே போராட்டத்தரப்பு செல்ல, "தமிழிசை ஊரில் இல்லை. திங்கட்கிழமை வாங்க' என்று சொல்லிவிடுகிறார்கள். அதற்குள், இன்னொரு போராட்டத்தரப்பு மந்தவெளியிலுள்ள எஸ்.வீ.சேகர் வீட்டை முற்றுகையிட்டு ஆக்ரோஷமாக போராட… திடீரென்று, ஒரு பெண் பத்திரிகையாளர் கண்ணீரோடு, எஸ்.வீ.சேகர் வீட்டை நோக்கி ஷூவை வீசினார். இதைப்பார்த்து, உணர்ச்சிவசப்பட்ட சக பத்திரிகைக்காரர்கள் சிலர் கற்களை வீசினார்கள். வாகனம் இல்லாததால் 60 பேரில் 30 பேரை கைது செய்துவிட்டு மீதமுள்ளவர்களை அனுப்பிவிட்டது காவல்துறை.

இந்த 30 பேரில் சில பத்திரிகை ஊடகவியலாளர்களுக்குத்தான் அவர்கள், பணியிலுள்ள நிறுவனங்களின் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க. "எவ்வளவோ மக்கள் போராட்டங்களை உலகறியச்செய்யும்போது…எங்கள் உரிமைகளுக்காக போராட உரிமை இல்லையா?'’என்று குமுறுகிறார்கள் போராட்ட பத்திரிகையாளர்கள்.

Advertisment

kavinmalarஎஸ்.வீ.சேகர் விவகாரத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்த பிரபல பத்திரிகையாளர் கவின்மலரிடம் நாம் பேசியபோது, ""எஸ்.வீ.சேகரின் இழிவான கருத்தால் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான லட்சுமி சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர்கள் மீது எஸ்.வீ.சேகர் கொடுத்த புகாருக்கு மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. மேலும், எஸ்.வீ.சேகரை கைது செய்யவிடாமல் நெருக்கடி கொடுக்கிறார் தலைமைச் செயலாளரும் எஸ்.வீ.சேகரின் சொந்த அண்ணன் மனைவியுமான கிரிஜா வைத்தியநாதன் என்பதால்தான் அவர்மீது வழக்கு தொடர்ந்தேன்''’என்றார்.

"பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம்' என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தனி மனிதர்கள் அதிகார பலத்திற்கு கருத்து சுதந்திரத்தை பலியிடக்கூடாது என்பதே நமது குரலும்.