னரீதியிலும் உடல்ரீதியிலும் வலுவிழந்தவர்கள்தான் பிச்சையெடுக்க வருகிறார்கள். ஒருவர் பிச்சையெடுத்து சேர்த்துவைத்த காசைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரிடமிருந்து திருடுகிறார்கள் என்றால், அவர்கள் பிச்சையெடுப்பவரைக் காட்டிலும் இழிந்த நிலையில் இருப்பவர்கள். அப்படி பிச்சையெடுப்பவரிடமே கைவரிசையைக் காட்டிய சில கிரிமினல்களின் கதைதான் இது!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் நகரை ஒட்டியுள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதானவர் சண்முகையா. உறவுகள் இருந்தும் கவனிப்பாரின்றி புறக்கணிக்கப்பட்டவர். இவரது முதல் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவது மனைவி உடல்நலம் சரியில்லாத நிலையில் இவரை விட்டு ஒதுங்கியிருப்பவர். முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து புறக்கணிக்கப்பட்ட சண்முகையா, அருகிலுள்ள சங்கரன்கோவில் நகரின் வீதிகளில் பிச்சையெடுத்து தனது ஜீவனத்தை நடத்திவருகிறார்.

ஒரு கால் உடைந்த நிலையில், உட்கார முடியாத நிலையில் சாப்பிடுவது, டீ குடிப்பது உள்ளிட்டவைகளை நின்றுகொண்டே செய்யவேண்டிய கஷ்டநிலைக்குத் தள்ளப்பட்டவர். அன்றாடம் பஜார் வீதிகள், கோவில் பகுதிகளில் பிச்சை எடுக்கும் சண்முகையா, தனக்கான உணவுச் செலவுபோக மீதமுள்ளவைகளைத் தன்னுடைய மூட்டையில் பாதுகாப்பாக வைத்திருப்பவர்.

bb

Advertisment

கசங்கிப்போன கந்தலான ஆடை, பரட்டைத் தலை என மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கும் சண்முகையாவின் நிலை கண்டு கிடைக்கும் பிச்சையே இவரது வாழ்வாதாரம். பேருந்து நிலையம், கோவிலின் மாடவீதிகளே இவரது தங்குமிடம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று பஜார் வீதியிலிருக்கும் டீக்கடை ஒன்றில் டீ குடிப்பதற்காக போயிருக்கிறார் சண்முகையா. அப்போது அந்தக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தன் தலையிலிருந்த மூட்டையை சண்முகையா ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு டீ வாங்கிக் குடித்திருக்கிறார். திரும்பி வந்து பார்க்கும்போது தனது மூட்டை திருடுபோனது தெரியவர, பதறிப்போனவர் அருகிலுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிலிருந்த போலீசாரிடம் படபடப்பாக நடந்ததைத் தெரிவித்திருக்கிறார்.

"ஐயா, இத்தனை வருட காலம், நான் பிச்சை எடுத்து செலவு பண்ணுனதுபோக 2 லட்சத்துக்கும் மேல மூட்டை யில சேமிச்சு வச்சிருந்தேம்யா... அது திருடுபோயிருச்சு' என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறியிருக்கிறார். இந்தத் தகவலறிந்த சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணையில் இறங்கியிருக் கிறார்கள்.

Advertisment

அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தபோது லுங்கி கட்டிய ஒருவர் சண்முகையாவின் மூட்டை யைத் திருடிக்கொண்டு போவது தெரியவந்தி ருக்கிறது. அவனை அடையாளம் கண்ட போலீசார், அவனிடம் முறையாக விசாரணை மேற்கொண்டபோது, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. அவனது கூட்டாளியான ஸ்ரீனிவாசன், உலகநாதன் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தை ரெக்கவரி செய்திருக்கிறார்கள்.

dba

விசாரணையில் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காக இந்தப் பணத்தைத் திருடியதாக அந்த நான்கு பேரும் ஒப்புக்கொண்டி ருக்கிறார்கள்.

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசியபோது, "இது ரொம்பவும் பரிதாபமான சம்பவம். பாவப்பட்ட பிச்சைக்காரரிடமே திருடியது ரொம்பக் கொடுமை. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை ஒரேநாளில் பிடித்தாகவேண்டும் என்ற வைராக்கியத்தில், அன்றைய தினம் இரவு விடிய... விடிய பல இடங்களுக்கு அலைந்து ஐந்து குற்றவாளிகளையும் தூக்கினோம். அவர்களிடமிருந்த மிச்சமுள்ள 49,320 ரூபாய் ரெக்கவரி செய்யப்பட்டிருக்கு.

ff

பிடிபட்டவர்களில் ராஜபாளையம் முருகன் என்பவன் தண்ணி அடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டில் படுத்துக் கிடப்பவன். அவனுக்கு சண்முகையா விடம் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. சண்முகையாவை நோட்டம்விட்டு அவரிடம் பணத்தை அடிக்க வேண்டுமென்று சில நாட்களாகத் திட்டம் போட்டிருக்கிறான். அன்றைய தினம் சண்முகையாவை முருகன், டீ குடிப்பதற்கு கூட்டிச் சென்றபோது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவனது கூட்டாளிகள் மூட்டையைத் திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

இதில் முருகன் என்பவன் 20,000 ரூபாய்க்கு அடமானத்திலிருந்த தனது வீட்டு நகையை திருடிய பணம் மூலமாகத் திருப்பியிருக்கிறான். ஒருத்தன் 5000, இன்னொருத்தன் 2500 வாங்கிக்கொண்டு தேனிக்கு ஓடிவிட்டனர். திருடிவிட்டு வேறு எங்கும் போகாமல் இங்கேயே இருந்திருக்கிறார்கள். ஜாலியாக செலவு செய்துவிட்டு, குமாரும் இன்னொருத்தனும் விடிய விடிய 3000 ரூபாய்க்கு மேல குடிச்சிருக்காங்க. இதுல ஒருத்தன் பூக்கடையில் உள்ள சில்லரைப் பணத்தையும் திருடிச் செலவழிச்சவன். இவங்க ஐந்து பேரையும் உள்ள தள்ளியிருக்கிறோம்.

ஒருவனுடைய மனமும் உடலும் இயங்காத போதுதான் அவன் பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறான். அந்தப் பரிதாபப் பிச்சைக் காரனிடமே திருடுவது கொடுமையிலும் கொடுமை... பஞ்சமா பாதகம்''’என்றார்.