தமிழக கோயில்களில் உள்ள சோழர்காலத்து சிலைகள் ஆயிரக்கணக்கில் காணாமல் போயிருக்கின்றன. காஞ்சிபுரம் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் திருடப்பட்டிருக்கிறது. இவைபோக... அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் தேதி சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் டில்லிபாபு, கொலைமிரட்டல் வழக்கில் தனசேகர் என்பவரை கைது செய்கிறார். ""மயிலாப்பூரைச் சேர்ந்த வயதான சகோதரிகளான சுபாஷினி, சுகுணா காயத்ரி ஆகியோர் "எங்களுடைய சகோதரன், எங்களை கொலைசெய்யப் பார்க்கிறார்' என ஒரு புகாரை அளித்தார்கள். நாங்கள் அந்தப் புகாரை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஐகோர்ட்டில் வழக்கு போட்டு "கொலைமிரட்டல் விடுத்த தனசேகரை கைது செய்யுங்கள்' என உத்தரவு வாங்கி வந்தார்கள். நாங்கள் தனசேகரை கைது செய்து போலீஸ் கஸ்டடியில் விசாரித்தோம்.
மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு டிரஸ்ட்களின் நிர்வாகிகள் இந்தப் பெண்கள். இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் டி.வி.அப்புசெட்டியார் டிரஸ்ட், உப்பத்தூர் ஆள்வார் செட்டியார் டிரஸ்ட் ஆகிய இரு டிரஸ்ட்களையும் நிறுவியவர் ஆள்வார் செட்டியார் என்பவர் ஆவார். புகார் தெரிவித்த சகோதரிகளின் தந்தையான ஆள்வார், ஒரு வியாபாரி. இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பெரிய வணிகர்களாக இருந்தவர்கள். அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை இரண்டு டிரஸ்ட்களாக நிறுவினார்கள். ஏழைகளுக்கு உதவுதல், அவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி செய்தல் என இருபதுக்கும் மேற்பட்ட வேலைகளை இந்த டிரஸ்ட்கள் செய்கின்றன.
அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த டிரஸ்ட்களில் உள்ள உபயோகமற்ற சொத்துக்களை கோர்ட் உத்தரவு பெற்று, அறநிலையத்துறை அனுமதியுடன் விற்கலாம். அந்த வசதியை பயன்படுத்தி சகோதரிகளின் தம்பியான தனசேகர் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 58 சொத்துக்களை இரு அறக்கட்டளைகளிலிருந்தும் விற்றுள்ளார். இந்த டிரஸ்ட்டுகளுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தையும் விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதைத் தட்டிக் கேட்ட சகோதரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததை போலீசார் கண்டறிந்தனர்.
போலீஸ் கஸ்டடி முடிந்து தனசேகரை ஏற்றிச் சென்ற ஜீப் பழுதடைந்ததையடுத்து, அவரது சகோதரிகளுக்கு சொந்தமான காரில் ஏற்றி நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வாடகை மாற்றம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய தனசேகர் "மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் டில்லிபாபு, ரௌடிகளை வைத்து மிரட்டுகிறார்' என இரண்டு தொலைக்காட்சிகளில் செய்தி வரவைத்தார். ஆனால், கஸ்டடி முடிந்து நீதிபதி முன்பு ஆஜராகும் போது இதுபோல எந்த புகாரையும் தனசேகர் தெரிவிக்கவில்லை. என்மீது சொன்ன புகார் பொய் என ஆனது'' என்ற ஆய்வாளர் டில்லிபாபு, டிரஸ்ட்களில் நடைபெறும் சம்பவங்கள் பற்றியும் விளக்கினார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய டிரஸ்ட் நிர்வாகிகளான சகோதரிகள், ""எங்களை கொல்வதற்கு திட்டம் தீட்டிய எங்களது தம்பி மீது அறநிலையத்துறையில் ஏகப்பட்ட புகார்கள் கொடுத்திருந்தோம். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அறநிலையத்துறை ஒரு டிரஸ்ட்டிலிருந்து மட்டும் நீக்கியது. மற்றொரு டிரஸ்ட் நிர்வாகியாக இருந்து கொண்டு அதே கொள்ளையடிக்கும் வேலையை தொடர்ந்தான். மீடியா வரை பொய்களை பரப்புகிறான். உண்மையை விளக்க நாங்கள் படாத பாடுபட்டோம்'' என்றார்கள்.
தனசேகரிடம் இதுபற்றி கேட்டபோது, ""இவையெல்லாம் பொய்புகார்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இது தொடர்பான பல விவாதங்கள் கோர்ட்டில் வழக்காக நடந்து வருகிறது. அதைப் பற்றி பேச நான் தயாராக இல்லை'' என்றார்.
"இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் தமிழகத்தில் உள்ள சொத்துக்களின் மதிப்பு பத்து லட்சம் கோடியைத் தாண்டும்' என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். அந்தச் சொத்துக்களை கணக்கெடுக்கவோ வகைப்படுத்தவோ எந்த ஏற்பாடும் அறநிலையத்துறையில் இல்லை. உண்டியல் வசூல் அதிகம் வரும் கோவில்கள் பல தனியார் வசமாகியுள்ளன.
இதுபற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்டோம். ""என்னிடம் அறநிலையத்துறை சொத்துக்கள் பற்றிய முழு விவரம் இல்லை'' என்கிறார்.
விவரம் மட்டுமல்ல, சொத்துக்களே அறநிலையத்துறை வசம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
-தாமோதரன் பிரகாஷ்