"பிரபல பள்ளி மாணவ-மாணவிகள்… புதுவித போதைக்கு அடிக்ட் ஆகிக்கிட்டிருக்காங்க. நக்கீரன்தான் அவங்களோட லைஃபை காப்பாத்தணும் ப்ளீஸ்...'’என்று சென்னை ஈ.சி.ஆர். சாலையிலுள்ள தனியார் மருத்துவமனை டாக்டரிடமிருந்து வந்த நம்பகமான தகவல் நம்மைத் திடுக்கிட வைத்தது. விசாரித்தபோது, திருவான்மியூரிலுள்ள பிரபல பெயர்பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சப்ளை செய்யும் வில்லன்கள் சிக்கினார்கள்.

முதலில் டாக்டரின் உதவியுடனும் பெற்றோரின் அனுமதியுடனும் போதைக்கு அடிக்ட்டான ப்ளஸ்-டூ மாணவியை உளவியல் ஆலோசகர் கெட்டப்பில் சந்தித்தோம். அந்த மாணவனால் பிரச்சனை வந்துவிடுமோ என்று அச்சப்பட்டவரை தைரியப்படுத்தி பேச ஆரம்பித்தோம்.

party

Advertisment

""என் செல்போனுக்கு ஒரு வாட்ஸ்-அப் போட்டோ வந்துச்சு. ‘"ச்சும்மா செல்ஃபி எடுக்கும்போது உன் போட்டோவும் விழுந்துடுச்சு. சாரி ட்யூட்...… பட் செம்ம்ம்ம்ம க்யூட்'ன்னு ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய்ஸ் மெசேஜ் அனுப்பிருந்தான். உண்மையிலேயே… அவன் அனுப்பின போட்டோவுல நான் அவ்ளோ க்யூட்டா இருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. "தேங்க்ஸ்'னு சொல்லி நானும் மெசேஜ் அனுப்பினேன். அதிலிருந்து, குட்மார்னிங்,…குட்நைட்டுல ஆரம்பிச்சு நல்ல ஃப்ரண்டாகிட்டோம்.''’கொஞ்சம் ரிலாக்ஸாகி அவரே பேச ஆரம்பித்தார்.

""திடீர்னு ஒருநாள்…"கூல்லிப் யூஸ் பண்றியா? செம்ம கிக்கா இருக்கும்?'’னு சொன்னான். நான் டென்ஷன் ஆகிட்டேன். என் ஃப்ரண்ட்டுகிட்ட சொன்னப்போ,…"கூல்லிப்புக்கே கோபப்படுறியா? அப்டின்னா இன்னும் நெறய இருக்கே...…அதையெல்லாம் சொல்லியிருந்தா ஷாக் ஆகிடுவ போலிருக்கே'ன்னு சிரிச்சா. ‘"உனக்கெல்லாம் அது புரியாதுடி'ன்னு சொல்லிட்டுப் போயிட்டா. எங்க க்ளாஸ்ல நெறைய பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஆர்யாகிட்ட வாங்கி யூஸ்பண்றது அப்புறம்தான் தெரிஞ்சது. என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல. அதுவும், எனக்குன்னா ஃப்ரியாவே கொடுக்கிறேன்னு ஆர்யா சொன்னான்.

அவன் கொடுத்ததை வாங்கி உதட்டுக்குள்ள வெச்ச கொஞ்சநேரத்துல ஒரு ஜில்னெஸ் உடம்பு முழுக்க பரவ ஆரம்பிச்சது. றெக்க கட்டி வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. அடிக்கடி யூஸ் பண்ணணும்போல இருந்துச்சு. "கூல்லிப்பே இவ்ளோ கிக்கா இருக்குன்னா… என் ஃப்ரண்ட்ஸ் இன்னும் ஏதேதோ இருக்குன்னு சொன்னாளுங்களே...…அது எப்டியிருக்கும்?' மனசு அலைபாய ஆரம்பிச்சுச்சு.’’

Advertisment

partymemberஒருநாள், "கூல்லிப்லாம் கொழந்தைங்க யூஸ் பண்றது. பொட்டிக்கடைலகூட ஈஸியா கிடைக்கும். ஆனா, ‘ஜாயிண்ட்டுதான் பெரிய பசங்க யூஸ் பண்றது'ன்னு சொன்ன ஆர்யா, ‘"கூல்லிப் மாதிரி ஜாயிண்ட்லாம் உனக்கு ஃப்ரியா குடுக்க முடியாது. ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரியா தர்றேன். அதுக்கப்புறம், டூ ஹண்ட்ரட், த்ரீ ஹண்ட்ரட் ருபீஸ் ஆகும்'னு சொல்லி அறிமுகப்படுத்தினான். "ஜாயிண்டு'ங்கிறது சிகரெட் மாதிரி இருந்துச்சு. ஒருத்தர் இழுத்துட்டு விடுற புகையை ஒவ்வொருத்தரா இழுத்துவிடுவோம்''’’ என்றார் அப்பாவித்தனமாய்.

"ஜாயிண்ட்', "டம்மு' இதெல்லாம் ட்ரக்ஸுன்னு தெரிய ஆரம்பிச்சது. ஆரம்பத்துல, கம்மி விலையில குடுத்துக்கிட்டிருந்த ஆர்யா, ஸ்டூடண்ட்ஸ்லாம் அடிக்ட் ஆனதைத் தெரிஞ்சுக்கிட்டு ரேட்டை ஏத்திக்கிட்டே போறான். அவன், எங்க ஸ்கூலுக்கு வர்றதுக்கு முன்னால எங்களோட க்ளாஸ் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா, +1 ஜாயிண்ட் பண்ணுனதிலிருந்து நிறைய பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ட்ரக்ஸுக்கு அடிக்ட் ஆகிட்டோம். எங்க க்ளாஸ் பசங்களுக்கு மட்டுமில்ல… மற்ற க்ளாஸ் பசங்களுக்கும் கொடுத்து கெடுத்துக்கிட்டிருக்கான்.

சக்தின்னு ஒரு பையன் இதே ஸ்கூலில் படிச்சான். அவன் ஒழுங்கா படிக்காம ட்ராப்அவுட் ஆகிட்டான். அவனும் ஆர்யாவும் ஃப்ரண்ட்ஸ். தினமும் ஸ்கூல் பக்கத்துல இருக்குற பெட்டிக்கடைக்கு வந்துடுவான் சக்தி. அந்தக் கடையிலதான் ஏகப்பட்ட ஐட்டம்ஸ் சேல்ஸ் பண்றானுங்க. சக்தியும் ஆர்யாவும் போனாதான் கொடுப்பாங்க. டீலர்கிட்டேயிருந்தும் டைரக்டா வாங்கிப்பானுங்க. ஆர்யா, சக்தி மூலமாத்தான் மத்த பசங்களும் வாங்கிக்கிட்டிருக்காங்க.

இப்போ, என்னால படிப்புல கான்சண்ட்ரேஷன் பண்ணவே முடியல. அந்த ட்ரக் யூஸ் பண்ணினாத்தான் மைண்டு வேலை செய்யுது. வீட்டுல கண்டுபிடிச்சுட்டாங்க. அடிச்சுப் பார்த்துட்டாங்க. சொல்லிப் பார்த்துட்டாங்க. நான் செய்யுறது தப்புன்னு தெரியுது. ஆனா, என்னால கண்ட்ரோல்பண்ண முடியல. அதுக்கப்புறம்தான், என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க''’என்று சொல்லும்போதே வேதனையில் நம் இதயம் வலித்தது.

அந்த மாணவி மூலம் ஆர்யா மற்றும் சக்தியின் தொடர்பு எண்களை வாங்கி… போதைப் பொருட்கள் விற்கும் டீலரைப்போல் பேச ஆரம்பித்தோம்.…

""ப்ரோ சக்திதானே பேசுறீங்க.… நான் மன்சூர் (பெயரை மாற்றி) பேசுறேன்.… உங்கள நேர்ல மீட் பண்ணணுமே... ஸ்கூலாண்ட வரட்டுமா?, இல்ல டிப்போவாண்ட வரட்டுமா?'' எனக் கேட்டேன்

சக்தி: நீங்க யார் ஜி பேசுறீங்க? என் நம்பர் யார் கொடுத்தா?

ப்ரோ… அதை நேர்ல சொல்றேன். போன்ல வேணாம்… ரொம்ப கான்ஃபிடன்ஷியல்.

சக்தி: பரவாயில்ல சொல்லுங்க ஜி.

கூல்லிப்பு, ஜாயிண்ட், டம்முன்னு ஏகப்பட்ட அய்ட்டம்ஸ் இருக்குது. ஸ்கூலாண்ட இருக்கிற கடைக்கு நான்தான் சப்ளை பண்றேன். ஸ்கூல் பசங்களுக்கு சேல்ஸ் பண்ணிக்குடுக்க எனக்கு நம்பகமான ஆள் கேட்டேன். உங்க நம்பர் கிடைச்சது,… நாளைக்கு நேர்ல மீட் பண்ணும்போது கண்டிப்பா சொல்றேன் ப்ரோ,… பதட்டப்படாதீங்க. அம்பதாயிரம் ரூபாய்க்கு பொருளு இருக்குது. சேல்ஸ் பண்ணி நாற்பதாயிரம் ரூபா எடுத்துக்கினு பத்தாயிரம் ரூபா எனக்கு குடுத்தா போதும்.…

சக்தி: சரிங்க ஜி.…

நாளைக்கு பொருளோட வர்றேன். ஆர்யா பிரமாதமா சேல்ஸ் பண்றான் போலிருக்கே. அவன்கிட்ட பேசினதுக்கு வேற ஒரு டீலர்கிட்ட வாங்கிக்கிறேன்னுட்டான். அதான், ப்ரோ உங்களுக்கு கால் பண்றேன்.

சக்தி: ஸ்கூலாண்ட வாங்க ஜி... மீட்பண்ணிப் பேசலாம்.

ஓ.கே. ப்ரோ.

dsp-purusathom

அடுத்த சில நிமிடங்களில் சக்தியும் ஆர்யாவும் நமக்கு கான்ஃப்ரன்ஸ் காலில் வந்தார்கள். இந்த ட்விஸ்டை எதிர்பாராததால் சமாளித்தோம். “எனக்கு ஆர்யாவைத் தெரியும்னு எப்போ சொன்னேன்? ஆர்யாவைப் பற்றி வேற ஒருத்தர் சொன்னாருன்னு சொன்னேன். ஆர்யா ப்ரோவா பேசுறீங்க. உங்ககிட்டதான் பேசணும்னு நினைச்சேன் நீங்களே லைன்ல வந்துட்டீங்க. சக்தி ப்ரோகிட்ட சொன்னேனே சொன்னாரா?’’

ஆர்யா: சொன்னான்... ஆனா, எங்க காண்டாக்ட் எப்டி கிடைச்சதுன்னு சொன்னாதானே பேசமுடியும்,…அதான்...…

அவர் "பேரைச் சொல்ல வேணாம்'னு சொன்னார். அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்;’தொடர்ந்து ரீலை ஓட்டினோம்.

ஆர்யா: ஓ.கே.ங்க. ஓ.கே.ங்க...

ஒருவழியாக சமாளித்துவிட்டு போனைத் துண்டித்தோம். ஆர்யாவும் சக்தியும்தான் போதைப் பொருட்களை வாங்கி பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்து சீரழிக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமானது. போதைப் பொருள் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. புருஷோத்தமனின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.

"பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்பவன்களை உடனடியாக அரெஸ்ட் பண்ணவேண்டும்'’என்று உத்தரவிட்டார். போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காக்கிகளுடன் திருவான்மியூர் பேருந்துநிலையம் அருகிலிருக்கும் பிரபல பள்ளிக்கு வெளியில் நின்று நோட்டமிட்டபோது… ஆட்டோக்களில் அமர்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. ஒரு பள்ளி மாணவனுடன் சென்று, "ஜாயிண்ட்’ கிடைக்குமா?' என்று நைஸாகப் பேசியபோது, ஆதம்பாக்கத்திலுள்ள பிரிட்டோ பள்ளி அருகேயுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்றான் கார்த்திக் என்ற ட்ரக் அடிக்ட். தூரத்தில் எங்களை ஃபாலோ-அப் செய்துவந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமைக் காவலர்கள் கிரி, நீலமேகம் உள்ளிட்ட காக்கிகள் அதிரடியாக நுழைந்து கஞ்சா வியாபாரி சசிகுமாரை கைதுசெய்து 1 கிலோ, 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

விசாரணையில், பள்ளி மாணவன் ஆர்யா மற்றும் அவனது நண்பன் சக்திக்கு வேறொரு டீலர் மூலமும் போதைப் பொருட்கள் சப்ளையாவது தெரியவந்தது. சக்தியையும் ஆர்யாவையும் பிடித்து விசாரித்தபோது, ஆர்யா போலீஸ்காரரின் மகன் என்பது வெளிப்பட்டது. பள்ளி மாணவன் என்பதால் கடுமையாக எச்சரித்துவிட்டு அவனுக்கு சப்ளை செய்யும் கஞ்சா டீலரைத் தேடிவருகிறது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ்.

இதுகுறித்து, அப்பள்ளியின் பிரின்ஸிபல் கவனத்துக்கு கொண்டுசென்றோம்.

இதழ் அச்சாகும்வரை அவர் நமது லைனில் வரவில்லை.

பொதுத்தேர்வுகள் நடக்கவிருக்கும் நேரத்தில்... போதையில் மயங்கியிருந்த மாணவ-மாணவிகளை புதிய பாதைக்கு அழைத்துச்சென்ற ஆத்ம திருப்தி ஏற்பட்டது நக்கீரனுக்கு!

-மனோசௌந்தர்

படங்கள்: எஸ்.பி.சுந்தர்