தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களின் மர்ம மரணம் வடமாநிலங்களில் தொடர்ந்து வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த சரவணன், சரத்பிரபு இருவரும் டெல்லியில் மர்ம மரணம் அடைந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் சண்டிகரில் தற்கொலை செய்துகொண்ட தகவல் மாணவர்களையும் பெற்றோரையும் அதிர வைத்துள்ளது.
சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்-ல் (ங.உ ஏங்ய்ங்ழ்ஹப் ம்ங்க்ண்ஸ்ரீண்ய்ங்) முதுநிலை ஆராய்ச்சி படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் கிருஷ்ணபிரசாத். அவர் தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்ததாக கடந்த திங்களன்று தகவல் வெளியானது. தமிழக மாணவர்களின் தொடர் மரணங்கள் அதிரவைக்கும் நிலையில், மாநில அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்து கடமையை நிறைவேற்றினார் முதல்வர் எடப்பாடி.
சரவணன், சரத்பிரபு ஆகியோரது மரணமும் முதலில் தற்கொலை என்றுதான் சொல்லப்பட்டன. பின்னர், அதில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கின. அதுபோலவே, கிருஷ்ணபிரசாத்தின் மர்ம மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்தி தெரியாத காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், சண்டிகரில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பஞ்சாப் மொழி பேசுவதால், அந்த மொழியில் அவர்களுடன் பேசி, நோயின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியாமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும் பலவித கருத்துகள் வெளிப்படுகின்றன.
"இந்தி தெரியாததால் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு வடமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் தள்ளப்படுகிறார்களா?' என டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருப்பவருமான இளங்கோவனிடம் பேசினோம். ""மாணவர்களுக்குத் தடை மொழி அல்ல. 12-ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் பயின்ற மாணவன் சென்னை வந்து சமாளித்து, ஆங்கிலத்தில் பொறியியல், மருத்துவம் படிக்கிறார்கள். மொழித்தடையைக் கடந்து கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சமூகத்தில் இருக்கக்கூடிய மற்றவர்களுடன் கலந்துரையாட மட்டுமே மொழி தேவைப்படுகிறது. மருத்துவத்தில் பட்டம் பெற்று முதுநிலை மாணவர்களாக வடமாநிலங்களுக்கு சென்று நோயாளிகளை பார்க்கும்போது மொழிபெயர்ப்பு செய்யும் ஆட்கள் அங்கு இருக்கத்தான் போகிறார்கள். அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மொழிச்சிக்கல் என்பது தற்கொலைக்கான காரணமாக இருக்க முடியாது. தீர விசாரித்தால் எதிர்பார்ப்பும், வெறுமையும்தான் காரணமாக இருக்கும்.
கல்வி, மருத்துவம் இலவசமாக தரக்கூடிய நாடுகள் இரண்டு வகை. ஒன்று வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள், கிளர்ச்சி அடைந்த சோசலிச நாடுகள் இன்னொரு வகை. இங்கு முதலீடு அதிகம் இருக்காது சேவை மனப்பான்மை மற்றும் திறன்தான் அதிகம் இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, பெரும்முதலீடு கொண்ட தொழிலாக மாறியிருக்கிறது. அப்படியிருக்கும்போது தொழில் லாபகரமாக இல்லை என்று கல்வி முதலாளிகள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்களிடம் அதிகக் கட்டணம் செலுத்தி படிப்பவர்கள் விரக்தியடைகிறார்கள்.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கடந்த ஆண்டு முதல் நீட் அறிமுகப்படுத்தப்பட்டதுபோல, முதுகலை மருத்துவப் படிப்பிற்கு அதற்கு முன்பே நீட் கொண்டு வரப்பட்டுவிட்டது. நீட் வந்த பிறகு பல்வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, ஆரம்பகட்டத்தில் மொழி ஒரு தடையாக இருக்கும். அந்தந்த மொழி சார்ந்த பயிற்சி வகுப்புகளை அந்தந்த மாநிலங்களில் அரசு சார்பில் நடத்த முன்வர வேண்டும். இந்திய மொழிகள் அனைத்தையும் அரசாங்கம் சமமாகக் கருதி, சராசரி இந்திய மக்கள் கற்றுக்கொள்ள வசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் பன்மொழிகளை கற்றுத் தரக்கூடிய மையங்களை அமைக்க வேண்டும்''’என்கிறார்.
மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில், விடுதி அறை மின்விசிறியில் தூக்கிட்டதாகவும், அறையை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டதாகவும் சொல்லப்படுவது பற்றி அவரது உறவினர் ஒருவரே சந்தேகம் எழுப்பியுள்ளார். கிருஷ்ணபிரசாத் தங்கியிருந்த அறையின் உள்பக்கம் தாழ் போடப்படவில்லை. அது உடைக்கப்படவும் இல்லை. அதுபோல, ஃபேனில் ஒருவர் தூக்கு மாட்டி இறந்தால், அந்த வெயிட் காரணமாக ஃபேன் அதன்பிறகு ஓடாது. அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், விடுதிஅறையில் உள்ள ஃபேன் எந்த பாதிப்புமின்றி வழக்கம்போல ஓடுகிறது. அதனால் கிருஷ்ணபிரசாத் மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்'' என்கிறார்.
திருப்பூர் சரவணன் மரணத்தை முதலில் தற்கொலை என்றவர்கள் பிறகு மர்ம ஊசி போடப்பட்டதென விசாரணையில் தெரிவித்தனர். இனி இத்தகைய நிலை நீடிக்காமல், தமிழக மாணவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட முழுமையான விசாரணையும், அரசு சார்பில் உரிய நடவடிக்கைகளும் அவசியம்.
-நாகேந்திரன், சி.ஜீவா பாரதி