எழில்கொஞ்சும் சிரியாவின் அவலநிலை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகையே அதன்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடத்தப்படும் தாக்குதல்களில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் கணிசமானவர்கள் குழந்தைகள்.
"சிரியா உள்நாட்டுப்போர் குறித்து கூகுளில், உலகிலேயே அதிகம் தேடியவர்கள் தமிழர்கள்தான்' என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. சிரியா மக்களைக் காப்பதற்கான கோரிக்கைகள், பிரார்த்தனைகள் என சமூக வலைத்தளங்களில் மற்ற எந்த செய்திக்கும் முக்கியத்துவம் தராமல் பரப்பியவர்களும் தமிழர்கள்தான். மேலும், சென்னையில் இருக்கும் ரஷ்ய தூதரகம், அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. சபையின் சென்னை கிளை உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு, சிரியா போர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கையும் விடுத்திருக்கின்றனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷர்அல் ஆசாத் என்பவர் ஆட்சி செய்துவருகிறார். இவருக்கு முன் சிரியாவை ஆண்டுவந்த இவரது தந்தை ஹஃபேஸ்அல் ஆசாத் ஆட்சியின் குறைகளைக் களைந்து, பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் இவரை தொடக்கத்தில் "டமாஸ்கஸ் வசந்தம்'’ என புகழ்ந்தனர் சிரியா மக்கள். ஹஃபேஸின் ஆட்சிக் காலத்திலேயே "சிரியாவில் சிறுபான்மையினராக இருக்கும் ‘"அலவைத்'’ பிரிவைச் சேர்ந்த ஒருவர் எப்படி பெரும்பான்மை மக்களை ஆட்சி செய்யலாம்?'’ என்ற கருத்து பரவத் தொடங்கியது. இது பஷரின் ஆட்சியிலும் தொடர... கிளர்ச்சியாளர்கள் பலரை கைது செய்தார். 2011-ஆம் ஆண்டு அரபுநாடுகளின் அரசுகளுக்கு எதிராக பரவிய கிளர்ச்சியான "அரபு வசந்தம்'’சிரியாவிலும் உருவானது. இதுதான் சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம்.
குர்து இன மக்கள், சுதந்திர சிரியன் ஆர்மி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு என எண்ணிலடங்காத கிளர்ச்சியாளர் படைகள் எட்டு ஆண்டுகளாக சிரியாவில் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சியாளர் படைகளை ஒடுக்க, ரஷ்யாவின் விமானப்படைகளின் மூலமாக சிரிய அரசு தாக்குதல் நடத்துகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் படைமீது சிரியா அரசு நடத்திய வான்வெளித் தாக்குதலில் கிட்டத்தட்ட 800 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.
உலகில் எந்த நாட்டிலாவது தனக்குத் தேவையான வளம் இருக்குமானால், உடனே அந்த நாட்டை தன் கையில் வைத்துக்கொள்ள முயற்சிப்பதில் அமெரிக்காவை மிஞ்ச யாராலும் முடியாது. தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் கிடைக்காதபடி இடதுசாரி ஆட்சியாளரான சாவேஸ் அரசு தடுத்த நிலையில்... ஈராக் நாட்டில் இருக்கும் எண்ணெய் வளத்தைச் சூறையாட முடிவுசெய்த அமெரிக்கா, அங்கு பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக குற்றம்சாட்டியது. "உலக அணுசக்தி கூட்டமைப்பு' சோதனை நடத்தி, "அங்கு அப்படி எதுவும் இல்லை' என்று கூறிய பின்னும்கூட, ஈராக்கை சிதைத்தது. ஈராக் அதிபர் சதாம்உசேனை தூக்கிலிட்டு தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது.
தொடர்ந்து லிபியா, ஈரான் என தனது கோரப் பார்வையைத் திருப்பி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா. அதுபோல் சிரியாவிலும் நிகழ்ந்தால் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தை சுரண்டிவிடலாம் என்பதே அமெரிக்காவின் எண்ணமாக இருக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல்களுக்கெல்லாம் ஐ.நா.வும் உடந்தையாகவே இருந்து வந்துள்ளது.
1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னும், ரஷ்யாவுடன் நட்புறவாக இருக்கும் சிரியாவின் பஷர் அரசுக்கு ரஷ்ய அரசு உதவுவதிலும் உள்நோக்கம் இருக்கிறது. ஒருவேளை சிரியா அரசு கவிழ்க்கப்பட்டால், அந்நாடு அமெரிக்க கட்டுக்குள் வரும். ஏற்கெனவே, அரபு நாடுகள் பலவும் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சிரியாவும் சென்றுவிட்டால், அது தனக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும் என நினைக்கிறது ரஷ்யா. எனவேதான், அமெரிக்காவிற்கு நிகராக ஆயுதங்களை சிரியாவின் ஆயுதத் தளவாடங்களில் குவிக்கிறது. இதேபோல, சவுதி அரேபியா, துருக்கி, இஸ்ரேல் என பல நாடுகளுக்கும் சிரியா மூலம் ஆகவேண்டிய காரியங்கள் நிறையவே இருப்பதால் அவைகளும் இந்தத் தாக்குதல்களை ஊக்குவிக்கின்றன.
பல்வேறு சமூகங்கள், இனக் குழுக்கள் வாழும் மண்ணில் ஏற்படும் சிக்கல்களைப் பயங்கரவாதம் பயன்படுத்திக்கொள்ளும்போது அதனைத் தடுப்பதாகக் கூறி அரச பயங்கரவாதம் ஆட்சி செய்கிறது. வல்லாதிக்க நாடுகள் துணை நிற்கின்றன. ரத்தப்பசி கொண்ட யுத்த வெறியின் கோரப்பற்களுக்கு ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் இரையாகின்றன.
-ச.ப.மதிவாணன்