பிரிட்டன் தன் நாட்டில் பணியாற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 23 அதிகாரிகளை ரஷ்யாவுக்கே திருப்பியனுப்பும் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் வெளியேற ஒருவார காலம் அவகாசமளித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே. பிரிட்டன் இந்த முடிவுக்கு வந்தபின்னர் ரஷ்யா சும்மா இருக்குமா?
ரஷ்யாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளை பதிலுக்குத் திருப்பியனுப்ப முடிவெடுத்துள்ளது. சரி இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏன் அயல்நாட்டு அதிகாரிகளைத் திருப்பியனுப்பவேண்டும்?
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்புகூட இந்த பூமியின்மீது அதற்குரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது அறிவியல். அப்படியிருக்க ஒரு கொலைமுயற்சி இரு நாடுகளுக்கிடையேயான உறவில் எக்கச்சக்கமான விளைவுகளை ஏற்படுத்தாதா என்ன?
கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரிலுள்ள பிரபல ஷாப்பிங் மால்களில் ஒன்றுக்கு தன் மகள் யூலியாவுடன் வருகை தருகிறார் செர்ஜி ஸ்கிர்பால். இவர் ரஷ்ய
பிரிட்டன் தன் நாட்டில் பணியாற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 23 அதிகாரிகளை ரஷ்யாவுக்கே திருப்பியனுப்பும் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் வெளியேற ஒருவார காலம் அவகாசமளித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே. பிரிட்டன் இந்த முடிவுக்கு வந்தபின்னர் ரஷ்யா சும்மா இருக்குமா?
ரஷ்யாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளை பதிலுக்குத் திருப்பியனுப்ப முடிவெடுத்துள்ளது. சரி இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏன் அயல்நாட்டு அதிகாரிகளைத் திருப்பியனுப்பவேண்டும்?
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்புகூட இந்த பூமியின்மீது அதற்குரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது அறிவியல். அப்படியிருக்க ஒரு கொலைமுயற்சி இரு நாடுகளுக்கிடையேயான உறவில் எக்கச்சக்கமான விளைவுகளை ஏற்படுத்தாதா என்ன?
கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரிலுள்ள பிரபல ஷாப்பிங் மால்களில் ஒன்றுக்கு தன் மகள் யூலியாவுடன் வருகை தருகிறார் செர்ஜி ஸ்கிர்பால். இவர் ரஷ்யாவிலிருந்து வந்து இங்கிலாந்தில் குடியேறியவர். மாலிலுள்ள இத்தாலிய உணவகமொன்றில் இருவரும் ஏதோ சாப்பிட்டுவிட்டு வெளியே இருந்த இருக்கையொன்றில் போய் ஓய்வாக அமர்கின்றனர். நீண்ட நேரம் இருந்த இடத்திலிருந்து அவர்கள் எழுந்திருக்காமலே இருப்பதை… என்னவென்று பார்க்கிறது மால் நிர்வாகம். காவல்துறைக்குத் தகவல்போகிறது. இருவரும் ஏதோ ஒருவித நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல் தெரிகிறது. இருவரும் இங்கிலாந்து மருத்துவமனையொன்றில் கடந்த சில நாட்களாக உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சரி… ரஷ்யாவில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேறியவர் மீதான கொலை முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து ஏன் இத்தனை கோபம் கொள்ளவேண்டும். அதுவும் குறிப்பாக ரஷ்யா மீது…?
அதற்கு விடை செர்ஜி ஸ்கிர்பாலின் ஃப்ளாஷ்பேக்கில் இருக்கிறது. ரஷ்ய ராணுவத்தில் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் செர்ஜி. ரஷ்யாவில் பணிபுரிந்தாலும் அவர் வேலை பார்த்ததெல்லாம் பிரிட்டனுக்காக. அதாவது, ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பாக பிரிட்டனை உளவுபார்க்க ரஷ்யா நியமித்த அதிகாரிகளைக் குறித்த தகவல்களை அளிக்கும் டபுள் ஏஜெண்டாகப் பணிபுரிந்துவந்தார் செர்ஜி.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளிப்படும்போது, கெட்டிக்கார ஏஜெண்டின் குட்டுமட்டும் வெளிப்படாமல் போய்விடுமா?… ரஷ்யா செர்ஜியைப் பிடித்து சிறையில் தள்ளிவிட்டது. நான்கைந்தாண்டுகள் சிறையில் கிடந்தார். 2010-வாக்கில் இங்கிலாந்தும் ரஷ்யாவும் தங்கள் சிறைகளிலுள்ள உளவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. அப்போது விடுதலையான செர்ஜி சத்தம் கித்தம் போடாமல் இங்கிலாந்தில் வந்து செட்டிலாகிவிட்டார். சில வருடங்களுக்கு பேச்சுமூச்சில்லாமல் இருந்தவர், இனி உயிர்பயமில்லையென நடமாட ஆரம்பித்திருந்தார். அந்த நிலையில்தான் அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இங்கிலாந்தில் ரஷ்ய தொடர்புள்ள உளவாளிகள், அதிகாரிகள் என கிட்டத்தட்ட 14 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் மரணமாகியிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இங்கிலாந்து இத்தகைய மரணங்களுக்கு எதிராக திடமான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் இம்முறை இங்கிலாந்து பொங்கியெழுந்துவிட்டது.
செர்ஜி கொலைமுயற்சிக்கு ரஷ்யாதான் காரணமென்கிறது பிரிட்டன். ஏற்கனவே தண்டனையளித்து விடுதலைசெய்த ஓர் ஓய்வுபெற்ற உளவாளியை நாங்கள் ஏன் கொல்லவேண்டும் என கேட்கிறது ரஷ்யா. தவிரவும் ரஷ்யாவில் வரும் கோடைகாலத்தில் ஸாக்கர் வேர்ல்ட் கப் நடக்கவிருக்கிறது. அதைச் சீர்குலைக்க செர்ஜியை இங்கிலாந்தே காலி பண்ண முயற்சித்துவிட்டு தங்கள் மீது பழிசுமத்துகிறது என அதிரடி ஸ்டேட்மெண்டையும் விடுத்துள்ளது ரஷ்யா.
ஷாப்பிங் மாலில் மயங்கிய நிலையில் கிடந்த செர்ஜியும் அவரது மகளும் ரசாயனத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் நோவிசோக். இது முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இந்த ரசாயனத்தின் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அதன் மீது சர்வதேச தடைவிதிக்கப்பட்டது. நோவிசோக் ரசாயனப் பயன்பாடொன்றே இக்கொலை முயற்சியில் ரஷ்யாவின் கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தப் போதுமானது என்பது இங்கிலாந்தின் வாதம்.
இங்கிலாந்துக்கு ஆதரவாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் குரல்கொடுத்துள்ளன. இதையடுத்து இங்கிலாந்து- ரஷ்யாவுக்கிடையேயான ராஜ்ஜிய உறவுகள் சீர்குலையத் தொடங்கியுள்ளன.
இங்கிலாந்தும் ரஷ்யாவும் மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் செர்ஜி போன்றவர்கள் மீதான கொலை முயற்சிகள் மட்டும் நிற்கப்போவதில்லை என்பது நிச்சயம். நாடுகளுக்கு இடையிலான அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் வெட்டுவதற்காகவே உருவாக்கப்படும் சிப்பாய்கள்தானே இந்த செர்ஜிகள்.
-க.சுப்பிரமணியன்