ஆம்புலன்சிலிருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஓடிவந்தார்கள். வாகனத்தை மடக்கினர். கதவைத் திறந்தால் காய்கறி மூட்டைகளுடன் வயதான இரண்டுபேர் உயிர் பயத்துடன் அலறிக்கொண்டிருந்தனர். காரணம், அவர்கள் பக்கத்திலேயே ஒரு முதியவரின் பிணம் இருந்ததுதான்.
இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியான ஊர்க்காரர்கள், டிரைவரை தேடினார்கள். ஆள் எஸ்கேப். உயிர்ப்பயத்தில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த 72 வயது செல்வராஜையும், திருவள்ளூரைச் சேர்ந்த 74 வயது அன்னம்மாளையும் கீழே இறக்கிவிட்டு, ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். போலீசுக்கும் புகார் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து விசாரித்ததில், இறந்து போயிருந்தவர் பெயர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 75.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home.jpg)
எல்லோருமே முதியவர்கள். எல்லோருமே செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தின் மலையடிவாரத்தில் இந்தத் தனியார் தொண்டு நிறுவனம் 16 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. முதியவர்கள் உரிய உணவின்றி பட்டினி போட்டுக் கொல்லப்படுவதாகவும், தப்பித்துப் போக நினைப்பவர்களை மடக்கிப் பிடித்து மீண்டும் காப்பகத்தில் திணிப்பதாகவும், இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்புவதாகவும் காப்பகத்தின் மீது புகார்கள் குவிந்துள்ளன. இதுபற்றி 2013-ஆம் ஆண்டிலேயே நக்கீரனில் எழுதியுள்ளோம். இந்நிலையில்தான், கடந்த 20-ந் தேதி இறந்த உடலுடனும் காய்கறி மூட்டைகளுடனும் உயிர் பயத்தில் அலறிய இரண்டு முதியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home3.jpg)
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நம்மிடம், ""என்னோட வீட்ல இருந்து அரை கிலோமீட்டர்லதான் கருணை இல்லம் இருக்கு. 2013-ல் சில புகார் வந்துச்சு. அப்போ நான் எம்.எல்.ஏ. கிடையாது. அப்போதைய மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கல. கருணை இல்லத்துல இருக்கிற மர்ம அறையில ஏன் அந்த பிணங்கள அடைக்கிறாங்கனு தெரியல. இனியாவது முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்'' என்றார். "மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?' என்ற நம் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் கலெக்டர் பொன்னையன்.
மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, ""பிணத்தை ஏற்றிக்கொண்டு, அதில் காய்கறியுடன் இரண்டு முதியவர்களை அடைத்து அழைத்து வந்தது குற்றம். அதற்கான அறிக்கையை ஆர்.டி.ஓ மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தற்போது மத்தியக்குழு நடத்தி வருகிறது'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home4.jpg)
காப்பகத்தை நடத்திவரும் பாதர் தாமஸ் நம்மிடம் விளக்கமளித்தார். ""மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களுக்கு ஆதரவளிக்கும் இல்லம் இது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இங்கே வேலை செய்ய வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைவு. சம்பவத்தன்று, மற்ற இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ் என்பதால், இருந்த ஒரு டிரைவர் மட்டும் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள எங்கள் கிளையில் இறந்துபோன பிணத்துடன், காய்கறி மூட்டைகளுடன் இரண்டு முதியவர்களை அழைத்து வந்துள்ளார். இது எனக்கே தெரியாமல் நடந்தது. மற்றபடி, முதியவர்களிடம் உடலுறுப்புகள் திருடப்படுவதாகவும், அவர்களை சாகவிட்டு, உடலிலிருந்து எலும்புகளை எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகச் சொல்வதும் முற்றிலும் தவறானது'' என்றார்.
அவரே மேலும், ""யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட முதியவர்கள் இறக்கும் நிலையில் உள்ளபோது, போலீசாரால் இங்கு கொண்டுவந்து விடப்படுகிறார்கள். கடந்த ஏழு ஆண்டில் 1590 பேரை அடக்கம் செய்துள்ளோம் அவர்களின் விவரம் போட்டோவுடன் இங்குள்ள பதிவேட்டில் உள்ளது. ஆகவே அவர்களைப் புதைத்தால் சுற்றுப்புற நிலத்தடி மாசு ஏற்படும் என்பதால், நிறைய அறைகளைக் கொண்ட நவீன கல்லறையைக் கட்டியுள்ளோம். இது இந்தியாவில் முதன்முறை என்பதால் இதைப்பற்றி அறியாதவர்களும் வேறு எதிர்பார்ப்பு உள்ளவர்களும் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldage-home5.jpg) சமூகஆர்வலர் தீனன், ""இந்தக் காப்பகத்தின் நவீன கல்லறை என்பது, நிலத்தடிநீர் மாசு அடையாதபடி "டிப்லான்' தொழில் நுட்பத்தில் 90 சிறு அறைகள் கொண்டதாகும். அதில் இறந்தவர்களின் உடல் சேமிக்கப்பட்டு பின்னர், சில ஆண்டுகள் கழித்து எலும்பு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளே மிஞ்சியுள்ள நிலையில் தகனம் செய்வார்கள். இது போன்ற முறை ஐரோப்பிய நாடுகளில் உள்ளன''’என்று விளக்கினார்.
சமூகஆர்வலர் தீனன், ""இந்தக் காப்பகத்தின் நவீன கல்லறை என்பது, நிலத்தடிநீர் மாசு அடையாதபடி "டிப்லான்' தொழில் நுட்பத்தில் 90 சிறு அறைகள் கொண்டதாகும். அதில் இறந்தவர்களின் உடல் சேமிக்கப்பட்டு பின்னர், சில ஆண்டுகள் கழித்து எலும்பு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளே மிஞ்சியுள்ள நிலையில் தகனம் செய்வார்கள். இது போன்ற முறை ஐரோப்பிய நாடுகளில் உள்ளன''’என்று விளக்கினார்.
இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இறந்த உடலுடன் உயிருடன் போராடியவர்களையும் காய்கறிகளையும் ஏற்றிச் சென்றதே மக்களின் சந்தேகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டிய காப்பகங்களில் நிலவும் பலவித விதிமீறல்கள், ஆள் பற்றாக்குறை, அலட்சியம், அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சம், லோக்கல் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு ஆகியவை சேவை மனப்பான்மையை மீறிய செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன. சொந்த பந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், மனதளவில் குற்றுயிரான முதியவர்களுக்கு மரணப்படுக்கையாகின்ற கருணை இல்லங்கள், கருணைக் கொலை இல்லங்களாக மாறுகின்றன.
-அரவிந்த்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-24/oldage-home-n.jpg)