ஓராண்டு நிறைவுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் மனநிறைவுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்த எடப்பாடி, தனது கண்புரை அறுவை சிகிச்சை முடிந்ததும் எம்.எல்.ஏ.க்களை நலம் விசாரிக்க வரவழைத்து, வரிசையாக சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியை சந்திக்கும் முன்பே தலா 3 "சி' கனமான பேக்கேஜாக வழங்கப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக சேர்க்கப்பட்டது.
அதன் பிறகு முதல்வர் எடப்பாடியை உற்சாகமாக சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் "நல்லாயிருக்கீங்களா...' என எடப்பாடி முதல்வார்த்தை கேட்கும் முன்பே, "நாங்க ரொம்ப மகிழ்ச்சீங்கண்ணா...' என கூறியுள்ளார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தனது மகிழ்ச்சியை ""அண்ணா சத்தியமா சொல்றேங்கண்ணா அம்மா இருந்தாக்கூட இப்படி எங்களுக்கு எதுவும் கிடைக்காது; எம்.எல்.ஏ.க்களை நிறைவா வெச்சுருக்கீங்க...'' இப்படிக் கூறியிருக்கிறார்.
மிகவும் ரகசியமாக, பாதுகாப்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த செட்டில்மெண்ட் பணியை முடித்துள்ளது எடப்பாடி டீம். மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்கள் வரை தலா 3 "சி' என்ற கணக்கில் "250 சி' செட்டில் செய்யப்பட்டுள்ளது. "எடப்பாடியின் ஓராண்டு சாதனை யாருக்கு சிறப்பான வாழ்வை கொடுத்துள்ளது என்றால், அது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்குத்தான்' என நம்மிடம் மனம்விட்டு பேசிய சீனியரான முன்னாள் அமைச்சர் ஒருவர் 3 "சி' செட்டிலான தகவல் கொங்கு மண்டலத்திலுள்ள பகுதிச் செயலாளர் ஒருவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் நேராக தொகுதி எம்.எல்.ஏ.விடம் போய் "எங்களுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சமாவது கொடுங்க... நாங்களும் கட்சிக்காக உழைக்கறவங்க தானே'னு கேட்ருக்காரு.
அதுக்கு அந்த எம்.எல்.ஏ., "ஏம்ப்பா மொதல் போட்டாதாம்ப்பா மொதல் எடுக்க முடியும். நான் மொதல் போட்டவன்... இப்ப மொதல் எடுக்கறேன். அடுத்தமுறை நானும் எம்.எல்.ஏ.வா நிக்கப்போறதுமில்லே... நீயும் எனக்காக மக்களிடம் ஓட்டுக்கேக்கப் போறதுமில்லே. கட்சிக்காக உன்னை யாரு உழைக்கச் சொன்னது? எதாவது டிரான்ஸ்பர் பேப்பர் இருந்தா கொண்டா, செஞ்சு கொடுக்கறேன். உன் பகுதியில நடக்கற கான்ட்ராக்ட் வேலைக்கு கமிஷன் வரலையா சொல்லு... எம்.எல்.ஏ. வருமானத்தை கேட்டா எந்த வகையில நியாயம்'னு அந்தப் பகுதிச்செயலாளருக்கு வகுப்பு எடுத்து, வெறும் வாயுடன் அனுப்பிச்சுட்டாரு.
இதைவிட இன்னொரு எம்.எல்.ஏ. பிரச்சினை எடப்பாடியிடமே பஞ்சாயத்துக்குப் போயுள்ளது. அந்த எம்.எல்.ஏ. கொஞ்சம் ஜாலியா இருப்பவரு... கொடுத்த "3'-ல் வீட்டுக்கு "2'தான் போச்சாம். மீதி "1' போகலையாம். எம்.எல்.ஏ. வீட்டில் பிரச்சினையாயிடுச்சு. "மீதி ஒண்ணை எம் புருசன் ரெண்டாவது வீட்டுக்கு செட்டில் செஞ்சுட்டாரு. இது எம்புட்டு நியாயமுங்கோ'னுதான் இந்த பஞ்சாயத்து அங்க போச்சாம். எம்.எல்.ஏ.வை விட்டுக்கொடுக்க முடியாதே, என்ன செய்வது? "அந்த ஒண்ணு மறுபடியும் கொடுப்போம்'னு எம்.எல்.ஏ. வீட்டில் சொல்லி பிரச்சினையை முடித்தாங்களாம்...'' என்றார்.
நாம் கொங்கு மண்டல எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசினோம். ""அண்ணா நாம எப்பவுமே "ஆப் தி ரெக்கார்டா' பேசக்கூடியவங்கதான். அந்த டீடெய்ல், விவரமெல்லாம் எதுக்கு நாம போன்ல பேசணும்.. அத விடுங்க... இப்ப ஹேப்பி...'' என கலகலவென போனில் சிரித்தார்.
-அறிவு