ன்கவுன்ட்டர் பீதியை ரவுடிகள் மனதில் பூதாகரமாகக் கிளப்பியுள்ளது மதுரையில் இருவர் போட்டுத் தள்ளப்பட்ட சம்பவம்.

Advertisment

நெல்லையில் சனிக்கிழமையன்று தனியார் கண் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெல்லை சரக டி.ஐ.ஜி.யான கபில்குமார் சாராட்கர், ""தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை காவல்துறை சரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்'' என செய்தியாளர்களைத் தேடி வலிய வந்து தெரிவிக்க... "மதுரைபோல் இங்கேயும் என்கவுன்ட்டரா? யாராக இருக்கும்?' என மூன்று மாவட்டங்களிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

operation0s

""நெல்லை டி.ஐ.ஜி. சரகம் என்றாலே முதலில் இருப்பது சாதீயக் கொலைகள்தான். உண்மையில் சாதி பிரச்சனையால் கொலை நடக்குமென்றால்... அது இல்லவே இல்லை. அத்திபூத்தாற்போல் எங்காவது அரிதாக நடக்கும். அதுவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே இங்கு அடித்துக் கொள்வார்கள். மற்றபடி பெரியஅளவில் சாதி விவகாரம் இருக்காது. ஏதாவது ஒரு வியாபார விஷயமாக இரு தரப்பும் மோதிக்கொள்ளும். அது சாதிக் கொலையாக சித்தரிக்கப்படுவது உண்டு. சமீபத்தில் நெல்லை சிட்டி ரேஞ்சில் நடந்த பேராசிரியர் கொலையும் அவ்வாறே.! பதிலுக்குப் பதிலாய் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்பதாலே, டி.ஐ.ஜி. அவ்வாறு தெரிவித்திருக்கலாம். எனினும், இதை முற்றிலும் ஒழிப்பதற்காக நெல்லை சரகத்தில் உள்ள அனைத்து ரவுடிகளின் ஃபைல்களும் தூசி தட்டப்பட்டுள்ளன. விரைவில் அமைதி நிலவ வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்'' என்றார் தூத்துக்குடி மாவட்ட உளவு அதிகாரி ஒருவர்.

Advertisment

நெல்லை சரக காவல்துறையின் தற்பொழுதைய டார்கெட் தேவேந்திரகுல சமூகத்தை சார்ந்த குமுளி ராஜ்குமாரும், நாடார் சமூகத்தை சார்ந்த ராக்கெட் ராஜாவும் மட்டுமே என்கின்றனர். பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொலைமுயற்சி வழக்குகள் என ராக்கெட் ராஜாவிற்கு 12 வழக்குகளையும், குமுளி ராஜ்குமாருக்கு 23 வழக்குகளையும் வாசிக்கும் காவல்துறை, சில வழக்குகளில் இருவரும் ஆதாரமில்லாததால் விடுதலையானதையும் குறிப்பிடுகிறது. சமீபத்தில் நடந்த பேராசிரியர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட ராக்கெட் ராஜாவையும், ஜாமீனில் தச்சநல்லூரில் வசிக்கும் குமுளி ராஜ்குமாரையும் தற்பொழுது மூன்று மாநிலப் போலீசார் வட்டமிடுகிறார்கள்.

கிரைம் இன்டெலிஜென்ட் அதிகாரி ஒருவரோ, ""குற்றம் குறையணும்னா குற்றம் செய்யுறதில் தப்பில்லை என்பதால்தான் டி.ஐ.ஜி. கபில்குமார் சாராட்கர் மற்றும் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் இவங்களோட மேற்பார்வையில், நாங்குநேரி ஏ.எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநில போலீசார் இணைந்து ஆபரேஷன் "எஸ்' என்ற பெயரில் அதிரடியைத் துவக்கியுள்ளனர். இந்த டீமில் தமிழகத்திலிருந்து எஸ்.ஐ. அசோகன், தலைமைக்காவலர் சாகர், மும்பையிலிருந்து எஸ்.ஐ. அவினாஷ், கர்நாடகா மடிகேரி எஸ்.ஐ. சண்முகம் மற்றும் அங்கோலா கர்நாடகா எஸ்.ஐ. ஸ்ரீதர் ஆகியோர் இணைந்துள்ளனர். ஐந்து மொழிகள் தெரிந்தவர்கள், அனைவரும் குற்றப் புலனாய்வுத்துறையில் திறமையானவர்கள் என்பதாலுமே இணைந்துள்ளனர்.

operations1

Advertisment

இந்த டீம் குற்றவாளிகளை நெருக்கமாக கண்காணிக்க, தென்மாவட்டங்களில் சுமார் 7 கொலை வழக்குகள் உள்ளிட்ட 45-க்கும் அதிகமான வழக்குகளுடைய, ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான கோழிஅருள் சுரண்டையில் கைது செய்யப்பட்டு, கடந்தவாரம் பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டான். எப்பொழுதுமே தன் மீது வழக்குகள் வந்தால், காவல்துறையிடம் சரணடையாமல் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிவிட்டு வழக்கிற்கு ஆஜராவது, ராக்கெட் ராஜாவின் ஸ்டைல். ஆனால் நெல்லைப் பேராசிரியர் கொலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தோடு, கொலை வழக்கும் சேர்ந்திருப்பதால் கட்டாயம் நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ சரணடைந்தாக வேண்டும். சரணடைவதற்குமுன் ராஜாவை என்கவுன்ட்டர் செய்திட வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆபரேஷன் "எஸ்' டீம்'' என்றார் அவர்.

இதுகுறித்து கருத்தறிய நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமாரிடம் பேசினோம். ""குற்றம் குறைய வேண்டும். அதற்காக சட்டரீதியான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்போதைக்கு விலாவாரியாக பேசமுடியாது'' என்றார் அவர். அதேவேளையில், ""ஒருசில காரணங்களுக்காக டீம் அமைத்தது உண்மைதான். இதுபோதுமே... பிறகு ஒருநாள் பேசுவோம்'' என்றார் ஆபரேஷன் "எஸ்' டீமின் தலைவரும், நாங்குநேரி ஏ.எஸ்.பி.யுமான ராஜேஷ்கண்ணன்.

மீண்டும் டுமீல் சத்தம் கேட்கும். அது ஒரு முறையா, இரு முறையா? எனப் பதறுகிறது நெல்லை சரகம்.

-நாகேந்திரன்