மாணவர்கள் சேர்க்கையிலும் பேராசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான பணி நியமனத்திலும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கோடிக்கணக்கில் சுருட்டல் நடந்ததை ஆதாரங்களுடன் நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். இப்பல்கலையின் துணைவேந்தராக இருந்த திலகர், பல்கலை வளாகத்திலும் மாநிலம் முழுவதும் இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும
மாணவர்கள் சேர்க்கையிலும் பேராசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான பணி நியமனத்திலும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கோடிக்கணக்கில் சுருட்டல் நடந்ததை ஆதாரங்களுடன் நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். இப்பல்கலையின் துணைவேந்தராக இருந்த திலகர், பல்கலை வளாகத்திலும் மாநிலம் முழுவதும் இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் நடந்த கட்டுமானப்பணிகளில் நடத்திய திருவிளையாடல்களையும் எழுதியிருந்தோம்.
எல்லாம் எழுதியும் எதுவும் நடக்காத நிலையில் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார் திலகர். ஓய்வுக்குப் பின்னும் ஓயாத திலகரின் தில்லுமுல்லுகளை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் பல்கலையின் பேராசிரியர் ஒருவர். “ரிடையர்டான ரெண்டாவது நாளிலேயே யுனிவர்சிட்டியின் மூன்றாவது மாடியில் இருக்கும் அவரின் அறைக்குப் போய் சில ஃபைல்களை எடுத்துட்டுப் போனாரு. அதுக்கப்புறம் ஜனவரி -2-ஆம் தேதி செகண்ட் ஃப்ளோர்ல இருக்கும் ரெஜிஸ்ட்ரார் ரூமுக்கும் எக்ஸாம் கண்ட்ரோலர் ரூமுக்கும் போய் சில ஃபைல்களை எடுத்துட்டுப் போயிருக்கார். இவர் பதவியில் இருந்தபோது நடந்த ஆடிட்டிங் ஃபைல்களெல்லாம் காணாமப் போயிருக்குமோங்கிற சந்தேகம் இருக்கு. இது சம்பந்தமா லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்கள் போயிருக்கு''’என்றார் மிரட்சியுடன்.
திலகருக்குப் பிறகு அடுத்த துணைவேந்தரை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்களையும் வாங்கினார்கள். இதில் ரிடையர்டான திலகரே மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்.
எல்லாவற்றையும் தீவிரமாக அலசி ஆராய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை, கால்நடைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநரை அழைத்து விசாரித்து பல்வேறு தகவல்களைக் கறந்துள்ளது. இதன் அடிப்படையில் பல்கலைக்குள் ரகசியமாக புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரிகள் டீம், பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனராம்.
கோவை வேளாண் பல்கலைக்கழக கணபதி சிக்கி கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அடுத்து கால்நடைப் பல்கலைக்கழகமா?
-சி.ஜீவாபாரதி