ஒட்டுமொத்த தமிழகமும் பேரதிர்ச்சியில் உறைந்துபோனது. தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ, மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11 பேரின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். யாருடைய அலட்சியத்தால் இத்தனை உயிர்கள் பலியாகின என்பதே தமிழக மக்களின் கேள்வி.
சென்னை -பாலவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது "சென்னை ட்ரெக்கிங் க்ளப்.' இதனை நிறுவியவர் பெல்ஜியத்தைப் பூர்விகமாகக் கொண்ட பீட்டர் வான்காட். கடந்த 17 ஆண்டுகளாக இவர் சென்னையில்தான் வசித்துவருகிறார். ட்ரெக்கிங், சைக்கிளிங் பயிற்சியளித்து வருகிறது இவரது நிறுவனம்.
கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ட்ரெக்கிங் சுற்றுலாவுக்கு இணையத்தில் விளம்பரம் செய்திருந்தது இந்நிறுவனம். சென்னையிலிருந்து 27 பேர் இந்த விளம்பரத்தைப் பார்த்துக் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
முதலில் மூணாறுக்குச் சுற்றுலா சென்றவர்கள், மறுநாள் தேனி மாவட்டம் குரங்கணி வந்துசேர்ந்தனர். சனிக்கிழமை காலை குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு ஏறியவர்கள், அங்கே இரவு டெண்ட் அடித்துத் தங்கினர். அங்கே அவர்களுக்கு முன்பே ஈரோட்டிலிருந்து மலையேறிவந்து தங்கியிருந்தது பிரபு தலைமையிலான 12 பேர் குழு.
மார்ச் 10-ஆம் தேதியன்று காலை 8:30 மணியளவில் குரங்கணிக்கு இறங்கத் தொடங்கியது சென்னை குழு. மலையேற்றத்தின்போது சாரதா என்பவருக்கு கால் பிசகியிருந்தது. அதனால் மலையேற்றத்தில் ஈடுபட அவர் விரும்பவில்லை. அவருடன் ரேணுகா, லேகா ஆகியோரும் இணைந்துகொள்ள, சூரியநெல்லி வழியாக அவர்கள் சென்னை திரும்புவதாக அறிவித்துவிட்டனர்.
அவர்களுக்குப் பின் ஒருமணி நேரம் தாமதமாக ஈரோட்டிலிருந்து வந்த குழு மலை இறங்கியது. மலையிலிருந்து இறங்கும்போது 7 கிலோமீட்டரை கடந்த நிலையில்... சமதளமான ஓரிடம் வரவே, அங்கேயே உணவருந்தி சற்று ஓய்வெடுத்துவிட்டு மிச்சதூரத்தைக் கடப்பதென முடிவுசெய்தனர்.
அவர்கள் மீண்டும் மலையிறங்க ஆயத்தமானபோது மலையடிவாரத்திலிருந்து பரவிய காட்டுத் தீ, அவர்கள் இருந்த ஒத்தமரம் பகுதியைச் சூழ்ந்துகொண்டது. நெருப்புடன் கரும்புகையும் பரவியதால், மலையேற்றக் குழு சிதறி ஓடத்தொடங்கியது. பலர் பயத்தால் அலற ஆரம்பித்தனர்.
சுற்றிப் பரவிய தீ!
கோரத்தீயின் வெட்கையைத் தாங்க முடியாமல் பயந்துபோன சிலர் அருகிலிருந்த பள்ளத்துக்குள் குதித்திருக்கின்றனர். கோரைப்புல் அடர்ந்து காணப்பட்ட அந்தப் பள்ளத்தாக்கு வரை நெருப்பு வரவே, அவர்களுக்கு தீக்காயமேற்பட்டது. தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிந்து வருவதற்குள், சுற்றுவட்டார கிராமத்தினர் மாலை 6 மணிக்குமேல் விரைந்து வந்ததால் 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்குள் இரவானதால் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டது. நெருப்பில் சிக்கியவர்களை மீட்க சூலூரிலிருந்து ஹெலிகாப்டர்கள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இருள் காரணமாக அவர்களால் மறுநாள் காலையிலேயே மீட்புப்பணியில் இறங்கமுடிந்தது. அதேசமயம் தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் பயிற்சிபெற்ற போலீசாருடன் இரவே களத்தில் இறங்கிய மீட்புப்படை தீக்காயங்களுடன் சென்னைக் குழுவைச் சேர்ந்த பிரபு, ராஜசேகர், சாதனா, பாவனா, மோனிஷா உள்ளிட்ட 8 பேரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.
மறுநாள் காலையில் மீட்பு பணியில் இறங்கிய ஹெலிகாப்டர்கள் கிட்டத்தட்ட 50,000 லிட்டர் நீரை காட்டுத் தீயின் மீது ஊற்றி சிக்கியவர்களைத் தேடத்தொடங்கியது. விபின், சுபா, ஹேமலதா, புனிதா, தமிழ்ச்செல்வன், விவேக், அகிலா, அருண்பிரபாகரன், நிஷா, திவ்யா ஆகியோரின் சடலங்களையே அவர்களால் மீட்கமுடிந்தது. காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களில் 8 பேர் 75 சதவிகித தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதால், அவர்களது நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
காப்பாற்றிய உள்ளூர் ஹீரோக்கள்
""ஹலோ... 108 ஆம்புலன்சாங்க… நான் விஜயலட்சுமி பேசறேன் சார். குரங்கணி கொழுக்குமலைக்கு டரக்கிங் வந்தப்ப காட்டுத் தீயில மாட்டிக்கிட்டோம். ப்ளீஸ் எங்களை எப்படியாச்சும் காப்பாத்துங்க''’என ஞாயிறு மாலையில் ஒரு குரல் ஆம்புலன்சை அழைத்து கதறியழுதது. அந்த செல்போனில் வந்த தகவல்தான் இப்படி சிலர் இக்கட்டில் மாட்டியிருக்கிறார்கள் என்பதையே ஊருக்குத் தெரியவைத்தது.
ராணுவவீரர் பாக்கியராஜ், கருப்புசாமி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்பாட்டுக்கு விரைந்து விஜயலட்சுமி உள்பட ஒன்பதுபேரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உள்ளூர் மக்களின் துணிச்சல்தான் அந்த 9 உயிர்களைக் காத்தது, உயிர்பிழைத்தவர்கள் சொன்ன தகவல்தான் இன்னும் பலர் காட்டுத்தீயின் நடுவில் சிக்கியிருப்பதையும், ஒரு பள்ளத்தில் சிக்கிக்கிடப்பதையும் தெரியவைத்தது. அதன்பிறகுதான் காலதாமதமாக மீட்பு பணியில் இறங்கியது மாவட்ட நிர்வாகம்
அபாய நேரத்திலும் அரசியல்!
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தின் அரசியல் செல்வாக்கைக் காட்ட பெரியகுளம் அருகே 7070 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணைமுதல்வர் ஓ.பி.எஸ். உட்பட சில அமைச்சர்கள் அவ்விழாவில் பங்குபெற இருந்ததால் கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் அதிலேயே ஆர்வம் காட்டினார்கள். காட்டுத்தீ விஷயம் ஊடகங்களில் ப்ளாஷ் நியூஸாக ஓடி பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகே, அதிகாரிகள் இதற்கு உரிய முக்கியத்துவம் அளித்தனர் என குற்றம்சாட்டுகிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைக் காண மார்ச் 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வருகைதந்தனர். முதல்வர், துணைமுதல்வர் வருகைக்காக தடபுடலாக விழாபோல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீவிர சிகிச்சை வார்டுக்குச் செல்லும் வழியெங்கும் பச்சை கார்ப்பெட் விரிக்கப்பட்டு, நறுமண செண்ட் ஸ்ப்ரே செய்யப்பட்டிருந்தது. பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ""பாதிக்கப்பட்டவர்கள் உரிய அனுமதியுடன் சென்றிருந்தால் தக்க பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும்''’என்றதுடன், பாதிப்புக்கேற்ப நிவாரணத் தொகையையும் அறிவித்தார்.
முதல்வர் சொல்வது உண்மையா?
ஈரோட்டிலிருந்து 12 பேரை ஒருங்கிணைத்து அழைத்துச்சென்ற காட்டூரைச் சேர்ந்த பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து வந்திருக்கிறார். அனுமதி வாங்காமல் காட்டுக்குள் சென்றதால்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததென முதல்வர் எடப்பாடியில் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அறிக்கை விடுத்துவரும் நிலையில் அதை மறுக்கிறார் பிரபு. ""முந்தல் என்ற இடத்திலுள்ள சோதனைச் சாவடியில் ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என அனுமதிச் சீட்டு பெற்றோம். இந்தக் காட்டுப் பகுதியைப் பற்றி நன்குதெரிந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியும் எங்களுடன் இணைந்தார்.
மறுநாள் எங்களுக்கு முன்னாலே அருண் குழுவினர் இறங்கிச் சென்றனர். அதன்பின் 1 மணிநேரம் கழித்து நாங்கள் இறங்கினோம். ரஞ்சித்தான் "காட்டுத் தீ பிடித்துவிட்டது வேகமாக இறங்கியாக வேண்டும்' என எங்களை உஷார்படுத்தினார். தீயால் நாலாபுறமும் எங்கள் குழு சிதறிவிட்டது''’என்கிறார்.
சென்னை ட்ரக்கிங் க்ளப் நிறுவனரும் அனுமதி பெற்றதாகச் சொல்கிறார். கூடவே இரண்டு வழிகாட்டிகளையும் அமர்த்திக்கொண்டதாகக் கூறுகிறார்.
""குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷன்வரை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால் கொழுக்குமலைக்கு ஏற அனுமதியில்லை. ஏஜெண்டுகள் கணிசமான ஒரு தொகையை ரேஞ்சர் முதல் வனச்சரகர் வரை கப்பம் கட்டுவதால் கண்டுகொள்வதில்லை. இரண்டு வருடமாக இங்கே சுற்றுலாப்பயணிகள் மலையேறி வருகின்றனர்'' என்கின்றனர் வனத்துறையின் நடவடிக்கைகளை அறிந்தவர்கள்.
""மலையேறியவர்கள் முறையான அனுமதி பெற்றிருக்கும்பட்சத்தில்... அரசின்மேலேயே விமர்சன அம்புகள் பாயும். அதனாலேயே அனுமதி பெறவில்லை என்பது அழுத்திச் சொல்லப்படுகிறது. சென்னை ட்ரக்கிங் கிளப் பதிவுசெய்யப்பட்டதா என்பது தீவிரமாக நோண்டப்படுகிறது'' என்கிறார்கள் அரசுதரும் அழுத்தத்தின் அர்த்தம் தெரிந்தவர்கள்.
அரசு இப்போதுதான் ரேஞ்சர் ஜெயில்சிங் என்பவரை பணி நீக்கம் செய்திருக்கிறது.
அனுமதி உண்டா?
சுற்றுச்சூழல் ஆர்வலரான உமேஷ் மருதாச்சலத்திடம் வனத்துறை தொடர்பான சில சந்தேகங்களைக் கேட்டோம்.
""காட்டுல ட்ரெக்கிங் போற பகுதிகளை பஃபர் பாரஸ்ட் ஸோன், கோர் ஸோன்னு பிரிப்பாங்க. பஃபர் பாரஸ்ட் ஸோன் பகுதியில காட்டிலாகா வண்டியை மட்டும்தான் அனுமதிப்பாங்க. அங்க டூவீலர்களைக்கூட அனுமதிக்கமாட்டாங்க. மலையேறுறதுக்குனு வரையறுக்கப்பட்ட பகுதியில மட்டும்தான் மலையேற அனுமதிப்பாங்க. இத்தனை பேர் குரூப்பா போயிருக்கிறபோது அனுமதி வாங்காம போயிருக்கமுடியாது. வன இலாகா அதிகாரிகள் கண்ல இத்தனைபேர் எப்படி படாமல் இருந்திருக்க முடியும்?''’என சந்தேகமெழுப்புகிறார்.
தீயை தடுக்க என்ன வழி?
காட்டில் தீப்பற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்த நம் கேள்விகளுக்கு, ""காட்டோரங்கள்ல வசிப்பவர்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக… புல்வெளி, காய்ஞ்ச செடிங்களுக்குத் தீவெச்சுடுவாங்க. தீயணைஞ்சு பின்பு அந்தப் பகுதில செழிப்பா புல்வளரும்.
காட்டை வைத்து வியாபாரம் செய்ய நினைப்பவர்கள், பக்கத்து இடங்களுக்கும் தீ வெச்சுடுவாங்க. தீ எரிஞ்சதுக்கப்புறம், அந்தப் பகுதியை ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவாங்க. இன்னும் வேட்டை, மரக் கடத்தல், கஞ்சா கடத்தவறவங்க காட்டோட ஒரு பகுதிக்கு தீவெச்சுட்டு வனத்துறையோட கவனம் அதில் இருக்கும்போது தங்கள் நோக்கத்தை நிறைவேத்திக்குவாங்க.
தமிழ்நாட்டுல மற்ற மாநிலங்களைப் போலவே வேட்டைத் தடுப்புக் காவலர்கள், தீத்தடுப்புக் காவலர்கள்னு ஆட்கள் இருக்காங்க. தீத்தடுப்புக் காவலர்கள்கிட்ட முறையான தீத்தடுப்பு சாதனங்கள் இருக்காது. அவங்க செழுமையான இலைதழைகளை வெட்டிப்போட்டு நெருப்பை அணைக்கப் பார்ப்பாங்க இல்லைன்னா நெருப்பு, தானா எரிஞ்சு அணையட்டும்னு விட்டுடுவாங்க..
தவிரவும் காட்டுல தீவிபத்து ஏற்படுறப்போ ஓரிடத்துல பிடிக்கிற நெருப்பு மற்ற இடத்துக்கு பரவாம தடுக்க, 2 மீட்டர்ல இருந்து 5 மீட்டர் அகலத்துக்கு மரம், செடிகொடிகளை வெட்டி அப்புறப்படுத்துவாங்க. இதுக்கு தீக்கோடுன்னு பேரு. முறையா இது நடந்தா நீண்ட தொலைவுக்கு காட்டுத் தீ பரவிச் செல்லாது.
இவங்களோட ஊதியம், இதர பணப்பலன் மிகக்குறைவா இருக்கும். அதோட இரண்டுவகைக் காவலர்களோட எண்ணிக்கையும் பற்றாக்குறையாதான் இருக்கு. பழங்குடியினர், காட்டுக்கு அருகில வசிப்பவங்களை இந்த வேலைக்கு அமர்த்துவாங்க. சரியான ஊதியமில்லாததால் நிறைய பேர் இந்த வேலைல ஈடுபாடு காட்டுறதில்லை''’என்கிறார். காட்டுத் தீ ஏற்படாமல், ஏற்பட்டால் பரவாமல் தடுக்க தமிழக அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தானாம். இதனை வைத்து என்ன செய்துவிட முடியும்? கடந்த ஆண்டே இவர்களது ஊதியத்தை ஆறாயிரத்திலிருந்து பத்தாயிரமாக அதிகரித்து அரசாணை போடப்பட்டிருக்கிறது. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்கிறார்கள் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்தவர்கள். மேலும், ""தமிழகத்தின் 5-ல் 1 பகுதியான காட்டுப் பகுதியை பராமரிக்க வேண்டிய வனத்துறையில் 60% பணியிடங்கள் காலியாக உள்ளன'' என்கிறார் சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.
பீட்டர் கொடுத்த விளக்கம்!
சென்னை -பாலவாக்கத்தில் அலுவலகம் அமைத்துள்ள பீட்டரின் க்ளப்பில் 40,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பலமுறை இதுபோன்ற ட்ரெக்கிங், சைக்கிளிங் பயணங்களை ஏற்பாடு செய்தவர். இச்சம்பவத்துக்குப் பிறகு அவரது அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
2015, சென்னை வெள்ளத்தின்போது, தனது க்ளப்பின் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டவர். அப்போது 100-க்கு மேற்பட்ட நபர்களை மீட்டதாக ஊடகங்களில் பேசப்பட்டது. வர்தா புயலின்போதும் மீட்பு பணிகளில் இறங்கியவர். குழுவில் இணைபவர்களுக்கு இதிலுள்ள அபாயங்களை முன்கூட்டியே அறிவித்துதான் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என க்ளப் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். முறையாக சென்னை ட்ரெக்கிங் க்ளப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கு அவர்களிடம் பதிலில்லை. அசம்பாவிதம் நடந்த நிமிடத்திலிருந்தே தலைமறைவாகியிருந்த பீட்டர் 13-ந் தேதி ""முறையான அனுமதி பெற்றே மலையேற்றம் நடந்தது. மலையேற்றத்தில் அனுபவம் வாய்ந்த அருண்பிரபாகர், விபின் குழுவினருடன் வந்தனர். விவசாயிகள் வைத்த நெருப்பில் குழுவினர் மாட்டிக்கொண்டது எதிர்பாராதது'' என்றார்.
அரசுத் தரப்பிலோ, ""டாப் ஸ்டேஷனில் மலையேற்றத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு கொழுக்கு மலைக்குச் சென்றதால்தான் இந்த நிலைமை'' என்கிறது.
விளக்கங்கள் உயிரைத் திருப்பித் தந்துவிடப்போவதில்லை. இதுபோன்ற இன்னொரு கொடிய விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான், முதல்வருக்கு அழகு. எடப்பாடி அதைச் செய்கிறாரா என பார்க்கலாம்!
-சக்தி, சி.என்.ராமகிருஷ்ணன், எஸ்.பி.சேகர், ஜீவாதங்கவேல், அண்ணல், சி.ஜீவாபாரதி
பரிதாபக் கதைகள்
கடலூர் மாவட்டம் -திட்டக்குடியைச் சேர்ந்த செல்வராசு-ஜோதி தம்பதியின் மகள் சுபா. சென்னை -சோழிங்கநல்லூரிலுள்ள பேபல் எனும் ஐ.டி. கம்பெனியில் பணி செய்துவந்தார். தந்தை செல்வராசு நகர ஜெ.பேரவை பொறுப்பாளராக உள்ளார். காட்டுத் தீ சூழ்ந்ததில் வழிதெரியாமல் நெருப்புக்கு நடுவே மாட்டிக்கொண்டு இறந்தவர்களில் சுபாவும் ஒருவர். திருமணமான தனது சகோதரி கலைச்செல்வியின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்துவந்தார். சுபாவின் மறைவு திட்டக்குடியையே சோகம் கவிழச்செய்துள்ளது.
மலையேற்றத்துக்கு ஏற்பாடுசெய்த "சென்னை ட்ரெக்கிங் க்ளப்'பின் ஒருங்கிணைப்பாளரான அருண்பிரபாகரனே, இந்த தீவிபத்தில் பலியாகியிருப்பது இன்னொரு சோகம். கிட்டத்தட்ட 100 முறைகளுக்குமேல் ட்ரெக்கிங் பயணம் மேற்கொண்டிருக்கும் அருண்பிரபாகர், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு 94 மணி நேரம் 25 நிமிடத்தில் மோட்டார் பைக்கில் விரைந்து வந்து சாதனை செய்ததற்காக லிம்கா தேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவரும்கூட. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்துள்ள மகாராஜபுரம் கிராமத்துக்கு அருண்பிரபாகரனின் உடல் வந்துசேர்ந்தபோது கிராமமே கதறியழத் தொடங்கியது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நடராஜ்-சரஸ்வதி தம்பதியின் மகன் விவேக். கோபிச்செட்டிபாளையத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிவந்த திவ்யாவை இவர் மணமுடித்து நூறுநாட்களே ஆகிறது. மணமாகி நூறு நாட்கள் ஆனதைக் கொண்டாட, துபாயிலிருந்து சென்னை வந்த இவர், மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணிக்கு சுற்றுலா கிளம்பினார். நடந்த தீவிபத்தில் விவேக் பலியாகிவிட, திவ்யாவோ தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கோடு வந்த அவர் நண்பர் தமிழ்ச்செல்வனும் நெருப்புக்குப் பலியாகிவிட்டார்.